உலகக்கோப்பையும் அர்ஜெண்டினா அதிபரும் பின்னே அவரது கருப்பு ஆடையும்... #FIFAFINAL

1990ம் ஆண்டு இத்தாலியில் நடந்த உலகக் கோப்பை தொடரில், அர்ஜெண்டினா- கேமரூன் அணியுடன் லீக் ஆட்டத்தில் மோதியது. அப்போதைய, அர்ஜெண்டினா அதிபர் கார்லோஸ் மெனெம், இந்தப் போட்டியை நேரில் காணச் சென்றிருந்தார். ஆனால், நடந்தது என்ன?
Javier Milei and messi
Javier Milei and messi
Published on

கடந்த 1982ம் ஆண்டு பாக்லாந்து தீவுக்காக (Falkland Islands) அர்ஜெண்டினாவும் இங்கிலாந்தும் போரில் குதித்தன. 74 நாட்கள் நடந்த இந்த போரில் இங்கிலாந்து வென்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இறந்தனர். தற்போதும், பாக்லாந்து தீவு இங்கிலாந்து வசமேயுள்ளது. அர்ஜெண்டினாவின் அருகிலேயே இந்த தீவு உள்ளது. இப்போதும், அர்ஜெண்டினா அந்தத் தீவுக்கு உரிமை கொண்டாடுகிறது. தங்களிடத்தில், இந்தத் தீவை தரும்படி அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த 16ம்தேதி நடந்த உலகக் கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

போட்டி முடிந்ததும், வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, அர்ஜெண்டினா வீரர்கள் 'பாக்லாந்து தீவு அர்ஜெண்டினாவுக்கே சொந்தம்' என்ற பதாகையை ஏந்தி மைதானத்தில் வலம் வந்தனர். அர்ஜெண்டினா அணியின் மிட்பீல்டர் ஜியோவானி, இதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

தற்போது, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஃபிஃபா விதிகளின்படி , மைதானத்தில் அரசியல் பேனர்களுக்கு இடமில்லை. வீரர்கள் அரசியல் கருத்து பேசவும் தடையுள்ளது. இதையெல்லாம் மீறி அர்ஜெண்டினா வீரர்கள் நடந்து கொண்ட விதம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதாகையை ஏந்திய வீரர்களுக்குத் தடை விதிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால், வலுவான ஸ்பெயின் அணிக்கு எதிராக அர்ஜெண்டினா முழுத்திறனை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். எனினும், இந்த விஷயத்தில் ஃபிஃபா என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதற்காக, உலகமே காத்திருக்கிறது.

metlife stadium
metlife stadium

இன்று நியூஜெர்சியில் மெட்லைஃப் (Metlife ) மைதானத்தில் நடைபெறும் இறுதி ஆட்டத்தைக் காண 85,500 ஆயிரம் ரசிகர்கள் திரள்கின்றனர். TickPick இணையதளத்தின்படி, சராசரியாக டிக்கெட் ஒன்று 11,327 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகியுள்ளது. மெட்லைஃப் ஸ்டேடியத்தின் 'பிரிவு 115A'-ல் தலா 28,479 டாலர் வீதம் இரு டிக்கெட்டுகள் அதிகபட்சமாக 56,958 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் விலையுயர்ந்த விளையாட்டாக ஃபிஃபா உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை மாற்றியுள்ளது.

இறுதிப்போட்டியை நேரில் காண அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , மெட்லைஃப் மைதானத்துக்கு நேரில் வருகிறார். ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சசும் (Pedro Sánchez) வருகை தரவுள்ளார். ஆனால், அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலெ (Javier Milei) இறுதி ஆட்டத்தைக் காண நேரில் வரவில்லை. இதற்கு அவர் சொல்கிற காரணம்தான் 'நம்ம ஊரு கந்தசாமி ' போன்று விசித்திரமாகவுள்ளது.

முக்கியமான கிரிக்கெட் போட்டி நடந்தால், இந்திய ரசிகர்கள் சிலர் குறிப்பிட்ட வண்ணத்திலான ஆடை, அணிந்து போட்டியைப் பார்த்தால்தான் நமது அணி வெல்லும் என்று நினைத்துக் கொள்வார்கள். சிலர் டீ குடித்தால் விக்கெட் விழும்... இயற்கை அழைப்புக்கு பாத்ரூம் போகும்போது விக்கெட் விழும் என்று கருதுவார்கள். இன்னும் ஒரு சிலர், அங்கேயும், இங்கேயும் நடப்பார்கள். இது ஒரு Superstition. அதாவது அறிவியல் சார்ந்து விளக்க முடியாத மூடநம்பிக்கை. அதேபோன்றே, அர்ஜெண்டினா அதிபருக்கும் ஒரு நம்பிக்கையுள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடங்கியதில் இருந்தே அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலெ (Javier Milei) பியூனஸ் அயர்ஸிலுள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் போட்டியை கண்டுகளித்தார். அர்ஜெண்டினா இந்த உலகக் கோப்பையில் விளையாடிய 7 போட்டிகளையும் தனது இல்லத்திலுள்ள டி.வி.யில் மட்டுமே பார்த்து ரசித்தார். அரையிறுதி போன்ற முக்கியமான ஆட்டத்துக்குக் கூட அமெரிக்காவுக்கு அவர் செல்லவில்லை.

அதுவும், ஒரு கருப்பு நிற ஜாக்கெட் அணிந்து, பார்த்து வந்துள்ளார். சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் சற்று வெக்கையாக இருந்ததால், அந்த ஜாக்கெட்டை அவர் கழற்றியுள்ளார். இந்த சமயத்தில், சுவிட்சர்லாந்து கோல் அடித்து விட்டதாம். இதனால், பயந்து போன அவர், உடனே, அந்த ஜாக்கெட்டை மீண்டும் அணிந்து கொண்டாராம். பிறகு, அந்த போட்டியில் அர்ஜெண்டினா வென்று விட்டதாம்.

அதேபோல, அரையிறுதியிலும் அதே ஜாக்கெட்டை அணிந்துதான் போட்டியைப் பார்த்தாராம். அர்ஜெண்டினா ஒரு கோல் பின்தங்கி, பின்னர், இரு கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த செண்டிமென்ட் காரணமாக, உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை நேரில் சென்று காணாமல், வழக்கம் போலத் தனது இல்லத்தில் இருந்தே , அந்த கருப்பு ஜாக்கெட்டை அணிந்து கொண்டு அர்ஜெண்டினா அதிபர் போட்டியைக் காணப் போகிறார் என்று சொல்கிறார்கள்.

அர்ஜெண்டினா அதிபர்கள் தங்கள் அணி விளையாடும் முக்கியமான போட்டிகளை நேரில் காண்பதைத் தவிர்த்து வருவது வழக்கமானதுதான். 1990ம் ஆண்டு இத்தாலியில் நடந்த உலகக் கோப்பை தொடரில், அர்ஜெண்டினா- கேமரூன் அணியுடன் லீக் ஆட்டத்தில் மோதியது. அப்போதைய, அர்ஜெண்டினா அதிபர் கார்லோஸ் மெனெம் (Carlos Menem) இந்தப் போட்டியை நேரில் காணச் சென்றிருந்தார். இந்த ஆட்டத்தில் புதுமுகமான கேமரூன் 1-0 என்ற கோல் கணக்கில் மரடோனா தலைமையிலான வலுவான அர்ஜெண்டினாவை வீழ்த்தியது.

இந்த செண்டிமென்ட் காரணமாக, அர்ஜெண்டினா விளையாடும் முக்கியமான உலகக் கோப்பை ஆட்டங்களை அந்த நாட்டு அதிபர்கள் நேரில் காண்பதைத் தவிர்த்து வருகின்றனர்.

கடந்த 2022ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா பிரான்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியைக் காண அப்போதைய அர்ஜெண்டினா அதிபர் அல்பெர்ட்டோ ஃபெர்னான்டஸ் ( Alberto Fernández) நேரில் செல்லவில்லை. வீட்டில் இருந்தே, பார்த்து ரசித்தார்.முடிவில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது.

அவரவர் நம்பிக்கை... நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

Puthuyugam
www.puthuyugam.com