இங்கிலாந்தும் அர்ஜெண்டினாவும் கால்பந்து உலகின் பரம எதிரிகள். 1966ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இந்த மோதல் தொடங்கியது. இந்த உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில், நாக்அவுட் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் அர்ஜெண்டினா மோதியது. இந்த ஆட்டத்தில் ஒரே ஒரு கோல் அடித்து இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஜெஃப்ரே ஹர்ஸ்ட் (Geoffrey Hurst) அடித்த அந்த கோல் 'ஆப்சைட்' என்று அர்ஜெண்டினா வாதாடியது. ஆனால், இங்கிலாந்துக்கு சாதகமாக கோல் முடிவு வழங்கப்பட்டது. அர்ஜெண்டினா தோல்வி கண்டு தொடரை விட்டு வெளியேறியது. இந்தத் தொடரில் இங்கிலாந்து முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது. அதற்குபிறகு, இங்கிலாந்து அணி உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றதில்லை.
அடுத்ததாக அர்ஜெண்டினாவும் இங்கிலாந்தும் பாக்லாந்து தீவுக்காக போரில் ஈடுபட்டன. 1982ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்த பாக்லாந்து தீவை (Falkland Islands) அர்ஜெண்டினா ஆக்கிரமித்தது. தொடர்ந்து, பிரிட்டன் பாக்லாந்து தீவை மீட்க 74 நாட்கள் போர் நடத்தியது. முடிவில், அர்ஜெண்டினா பாக்லாந்து தீவை விட்டு ஓடியது. பின்னர்,1986ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - அர்ஜெண்டினா அணிகள் மெக்சிகோ சிட்டியின் அஸ்டெகா (Azteca) மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மரடோனாவின் 'ஹேண்ட் ஆப் காட் கோல்' (Hand of god goal) இந்த ஆட்டத்தில்தான் அடிக்கப்பட்டது. அதோடு, ஏழு இங்கிலாந்து வீரர்களைத் தனியாளாகக் கடந்து மரடோனா அடித்த மற்றொரு தரமான கோலும் இந்த ஆட்டத்தில்தான் அடிக்கப்பட்டது. இந்தத் தோல்வியை இங்கிலாந்து அவமானகரமாகப் பார்த்தது. இப்படித்தான், கால்பந்து உலகில் இந்த இரு நாடுகளும் பரம எதிரிகளாக மாறின.
இதனால், அர்ஜெண்டினாவும் இங்கிலாந்தும் களத்தில் மோதினால், மைதானத்தில் மோதலுக்கும் பஞ்சம் இருக்காது. நேற்று அட்லாண்டா மைதானத்தில் நடந்த அரையிறுதி மோதலின் போதும், பல மோசமான காட்சிகள் அரங்கேறின. ஆட்டம் தொடங்கும் முன்னரே, மைதானத்துக்கு வெளியே இரு அணி ரசிகர்களும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். ஒருவரை, ஒருவர் மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.
பொதுவாக, மைதானத்தில் நாடுகளின் தேசிய கீதம் பாடும் போது, ரசிகர்களுடன் சேர்ந்து பாடுவார்கள். ஆனால், நேற்று இங்கிலாந்து நாட்டின் தேசிய கீதம் பாடிய போது, அர்ஜெண்டினா ரசிகர்கள் போட்டிக்கு மற்றொரு பாட்டுப் பாடி இடையூறு ஏற்படுத்தினர். அர்ஜெண்டினா ரசிகர்களின் இந்த நடத்தைக்கு ஏராளமானோர் இணையத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டூவர்ட் பீர்ஸ் (Stuart Pearce) அர்ஜெண்டினா ரசிகர்களின் இந்த நடத்தைக்குக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
உச்சக்கட்டமாக மைதானத்தில் இரு அணி வீரர்களும் மோதிக் கொண்டனர். இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும், அர்ஜெண்டினா வீரர்கள் 'பாக்லாந்து தீவு அர்ஜெண்டினாவுக்கே சொந்தம்' என்ற பதாகையை ஏந்தியபடி வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்காம், (Jude Bellingham) அர்ஜெண்டினா வீரர் வாலைன்டின் பார்கோவின் (Valentín Barco) தலையின் பின்பகுதியில் சட்டென்று அறைந்தார்.
இதனால், களத்தில் இரு அணி வீரர்களும் மோதிக் கொள்ளும் சூழலும் உருவானது. பெல்லிங்காமின் செயலை, டி.வி நேரலையில் கலந்து கொண்ட இங்கிலாந்து அணியின் முன்னாள் கோல்கீப்பர் பால் ராபின்சன் (Paul Robinson) கடுமையாகக் கண்டித்தார். ''இந்த உலகக் கோப்பைத் தொடரில் நான் பார்த்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் இல்லாத ஆட்டம் இது ''என்றும் அவர் விமர்சித்தார். மோதலில் ஈடுபட்ட வீரர்கள் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஃபிஃபா தெரிவித்துள்ளது.
வரும் ஜூலை 19ம் தேதி நியூஜெர்சியில் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ. 490 கோடி பரிசாக வழங்கப்படுகிறது.