பாம்பு கடித்த இடத்தில் மஞ்சள் போட்ட சிறுமி... அஜாக்கிரதையால் பறிபோன உயிர்!

பாம்பு கடித்தது போல தெரிந்தால்,உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ஆனால், அஜாக்கிரதை காரணமாக சிறுமி ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
Niya lenin
Niya lenin
Published on

கோடைக்காலத்தில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் குடியிருப்பு பகுதிக்குள் அதிகமாக இருக்கும். எனவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில், கேரளாவில் படுக்கையில் தலையணைக்கு அடியில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பு கடித்து, சிறுவன் ஒருவன் பரிதாபமாக பலியானான். இந்த கோடைக் காலத்தில் கேரளாவில் பல இடங்களில் பாம்பு கடி சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது. இந்த நிலையில், பாம்பு கடித்தும் அலட்சியமாக இருந்த காரணத்தினால், சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சி அருகேயுள்ள அரூர் பகுதியைச் சேர்ந்தவர் லெனின். இவர், அங்கேயுள்ள ஆலயத்தில் போதகராக பணிபுரிந்து வந்தார். இவரது, மகள் நியா அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு முடித்து 8ம் வகுப்புக்குச் செல்லத் தயாராக இருந்தார். இந்த நிலையில், நியா வசித்து வந்த குடியிருப்பின் ஆண்டுஇறுதி விழா நடந்துள்ளது. இதற்காக, சிறுமிகள் நடனப்பயிற்சி செய்து கொண்டிருந்துள்ளனர்.

கடந்த மே 7ம் தேதி நியா நடனப்பயிற்சிக்கு சென்றிருந்த போது, அவரது காலில் பாம்பு கடித்தது போல பல் தடம் காணப்பட்டுள்ளது. ஆனால், பெரிய கோடு போன்று தடம் பதிந்துள்ளது. நியாவுக்கும் பெரிய அளவில் வலி தெரியவில்லை.

இந்த சமயத்தில் அவரது, காலை பரிசோதித்த பெரியவர் ஒருவர் , 'பாம்பு கடிக்கவில்லை. ஏதே பெரிய வண்டு கடித்து போல தெரிகிறது. பயப்படும்படி ஒன்றும் இல்லை' என்று கூறியுள்ளார். பின்னர், காலில் பல் தடம் இருந் இடத்தில் மஞ்சள்தூளைப் போட்டுள்ளனர். தொடர்ந்து, நியா நடனப்பயிற்சி எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கிருந்தவர்களிடத்தில் என்னால் ஆட முடியவில்லை என்று கூறியபடியே, மயங்கி விழுந்து விட்டார். அப்போதுதான், அங்கிருந்தவர்களுக்கு உறைத்துள்ளது. உடனடியாக, சிறுமியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

snakebite
snakebite

மருத்துவமனையில் சிறுமிக்கு பல்ஸ் அளவு வெகுவாக குறைந்து போனதையடுத்து, மே 8ம் தேதி எர்ணாகுளத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு சேர்த்தனர். பரிசோதனையில் கட்டுவிரியன் பாம்பு அவரை இருமுறை கடித்திருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். பாம்பு கடித்திருப்பது தெரியாமல், சிறுமி நடனப்பயிற்சி எடுத்ததால், விஷம் வெகு வேகமாக ரத்தத்தில் பரவியதும் தெரிய வந்தது.

மருத்துவசிகிச்சைக்கும் பல லட்சம் தேவைப்பட்டது. நியாவின் ஆசிரியர்கள், அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் சிகிச்சைக்கு உதவினர். கூட்டு முயற்சியாக 12 லட்சம் திரட்டப்பட்டது. நியாவின் தந்தை லெனின் தங்கள் வீட்டை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்து 5 லட்சம் வாங்கி மகளின் சிகிச்சைக்கு செலவழித்தார். கிட்டத்தட்ட 24 நாட்கள் நியா வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தார். சுமார், 20 லட்சம் ரூபாய் மருத்துவசிகிச்சைக்கு செலவழிக்கப்பட்டது. மகளை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டுமென தந்தை லெனின் போராடிக் கொண்டிருந்தார். லெனின் மட்டுமேல்ல அங்கிருந்த ஒவ்வொருவரும் நியா உயிர் பிழைத்து வந்து விடுவார் என்றே நம்பினர். ஆனால், அவர்களது நம்பிக்கை வீணாகிப்போனதுதான் சோகத்திலும் சோகம். கடந்த 31ம் தேதி காலை 7.30 மணியளவில் நியா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார். நியாவின் உயிரிழப்பு, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் வேதனைக்குள் ஆழ்த்தியுள்ளது.

''பாம்பு கடித்துள்ளதாக சந்தேகம் எழுந்தவுடனே, சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்திருந்தால் உயிர் பிழைத்திருப்பாளே'' என்று ஒவ்வொருவம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர். நியாவின் மரணம் பெரும் இழப்புதான். நியாவின் இறப்பைப் பாடமாக எடுத்துக் கொண்டு, பாம்புக்கடி சம்பவங்களில் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால், வருங்காலத்தில் உயிரிழப்புகளை தடுக்க முடியுமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Puthuyugam
www.puthuyugam.com