கேரளாவில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
திருச்சூர் மாவட்டம் கொடாலியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் அல்ஜோ. இவர், தனது சகோதரர் அனோத் மற்றும் தாயாருடன் வீட்டில் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்துள்ளான். அப்போது, திடீரென்று சிறுவனுக்கு உடல் நிலை பாதித்துள்ளது. பெற்றோர் ஃபுட் பாய்சன் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். ஆனால், சிறுவனின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது.
உடனடியாக, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, சிறுவனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் விஷப் பாம்பு தீண்டியதற்கான அடையாளங்களைக் கண்டுபிடித்துள்ளனர். உறவினர்கள் வீட்டில் படுக்கையைச் சோதித்த போது, அல்ஜோவின் தலையணைக்கு கீழ் கட்டு விரியன்பாம்பு இருந்ததை கண்டுபிடித்தனர். கோபத்தில் அந்த பாம்பை அடித்துக் கொன்றனர். இதற்கிடையே, சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் மரணித்தார். தற்போது, அவருடைய சகோதரர் அனோத்துக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுக்கை அறை வரை, பாம்பு வந்ததும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த மார்ச் மாதம் முதலே கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. கிட்டத்தட்ட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் புகுந்து விடும் வாய்ப்பு அதிகம். அதனால், மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிறது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ''பாம்புகள் 28 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை தாக்குபிடிக்கக் கூடியவை. வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை தாண்டும் போது, வெப்பம் தாங்க முடியாமல் குளிர்ச்சியான இடத்தை தேடி நகரத் தொடங்குகின்றன. தங்களது உடல் வெப்பநிலையை சமனில் வைக்க, இந்த முயற்சியை அவை எடுக்கின்றன. கோடைக் காலத்தில், பாம்புகளின் இனப்பெருக்க காலமும் தொடங்குகிறது. இதனால், ஆண் பாம்புகள் ஜோடியைத் தேடி அலைய தொடங்குகின்றன. கோடை மழை பெய்தால், இனப்பெருக்கத்துக்கு இன்னும் வசதியாக இருக்குமாம். புல்வெளிகள், காடுகள் அழிக்கப்பட்டதும் நகரமயமாக்கமும் பாம்புகள் ஊருக்குள் வர வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.
இரவு, பகல் நேரத்தில் வீடுகளில் ஜன்னலையோ கதவுகளையோ திறந்து வைக்காதீர்கள். பாம்புகள் எளிதாக மறைந்திருக்கக் கூடிய மாதிரி பொருட்களை வீடுகளில் போட்டு வைக்காதீர்கள். உதாரணத்துக்கு தேங்காய் மூடி, தேங்காய் சக்கை போன்றவை. இந்த மாதிரியான பொருட்கள் பாம்புகளுக்கு நல்ல குளிர்ச்சியை கொடுக்கக்கூடியவை. மறைந்து கொள்ள ஏதுவாகவும் இருக்கும். விறகுகளை வீட்டருகில் போட்டு வைக்காதீர்கள். வீட்டைச் சுற்றி செடி கொடிகள் இருந்தால் அவற்றை வெட்டி சுத்தமாக வைத்திருங்கள். குழந்தைகள் , பெரியவர்கள் என யார் அணியும் ஷூவாக இருந்தாலும், நன்றாக சோதித்து பார்த்த பின்னரே, அணியவும். வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
வீடுகளுக்குள் பாம்பு இருப்பது தெரிய வந்தால், பதற்றப்படாமல் அமைதியாக அனைவரும் வீட்டை விட்டு வெளியேறுங்கள். பின்னர், வனத்துறையினருக்கு தகவல் கொடுங்கள். அவர்கள் வந்து உயிருடன் பாம்பைப் பிடித்து பாதுகாப்பான இடத்தில் விடுவார்கள். அடித்துக் கொல்ல முயல வேண்டாம். ஏனென்றால், உணவுச்சங்கிலிக்கு பாம்புகளும் அவசியம் தேவை'' இவ்வாறு அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனர். நல்லபாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன் , கண்ணாடி விரியன் ஆகிய நான்கு பாம்புகள்தான் உயிரைப் பறிப்பதில் முதலிடத்தில் உள்ளன.