

நேற்றுதான் முனியம்மா, ஷாதிகாவுக்கும் முகேஷுக்கும் இடைபட்ட உறவைப் பற்றி பொதுவில் பேசி ஷாதிகாவை வெறுப்பேற்றி வைத்திருந்தார். ஆனால், இன்று காலையில் பார்த்தால், இருவரும் ஒரே நிறத்தில் உடையணிந்து கொண்டு நடனமாடியபடி ஒருவரை ஒருவர் கொஞ்சிக் கொண்டிருந்தனர். ”என் மனசுல ஒண்ணும் கிடக்காது புள்ள. அதான் நேற்று இயல்பாக அதைக் கேட்டுவிட்டேன். அதில் தவறு ஏதும் இருந்தால் மன்னித்துக் கொள்ளம்மா” என்று முனியம்மா சொல்ல, ”அதனால் என்னக்கா பரவாயில்லை” என்று ஷாதிகாவும் சொன்னார். ”அதோட காதலிப்பது ஒன்றும் பெரிய தவறு இல்லையே” என்று முனியம்மா சொல்ல, ”ஆமாம், நான் உன்னைத்தான் காதலிக்கிறேன்” என்று ஷாதிகா சொல்ல, இருவரும் கட்டியணைத்து முத்தமிட்டு, அன்பைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். இது எவ்வளவு நேரம் தாங்கும் என்று பார்ப்போம்.
நேற்று ஷாப்பிங் டாஸ்க்கில் எடுக்கப்பட்டிருந்த பொருட்கள் இன்னும் வந்து சேரவில்லை போலிருக்கிறது. காலையிலேயே சோற்றைப் பொங்கி வைத்து, இருந்த தக்காளியையும் வெங்காயத்தையும் போட்டு உப்பில்லாமல் ஒரு தக்காளித் தொக்கு செய்து வைத்திருந்தார் அன்சார். அதுவும் கடைசியாக வந்த கரிஷ்மாவுக்கும், தன்யாவுக்கும் போதாமல் ஆகிவிட்டது. தன்யாவுக்கும், சாப்பாட்டுக்கும்தான் ஒரு பெரிய வாய்க்காத் தகராறே போய்க்கொண்டிருக்கிறதே... ’எனக்கு ஏன் இல்லை?’ என்று தன்யா கேட்க, அன்சார், ’இந்த வாரம் இன்னும் சமையல் குழுவே அமைக்கப்படவில்லை. நானே புண்ணியத்துக்கு ஒரு தொக்கு சமைத்து வைத்தால், இருப்பதைச் சாப்பிடாமல் வம்பிழுத்துக் கொண்டிருக்கிறாயா? அந்தச் சட்டியில் சோற்றைப் போட்டு திங்க வேண்டியதுதானே!’ என்று அலட்சியமாகச் சொன்னார். சாப்பாடு விசயத்தில் அடுத்தவர்களை அவமானப்படுத்துவதே இந்த அன்சாருக்கு வேலையாக இருக்கிறது. முன்வந்து சமைத்த காரணத்துக்காக ஒருவரை இப்படியா அலட்சியப் படுத்துவது?
அடுத்து, இந்த வார டாஸ்க்காக இன்னொரு குழு விளையாட்டை கொண்டு வந்தார் பிக்பாஸ். குயிக் கன் கௌபாய்ஸ் மற்றும் மைனர்ஸ் மாஃபியா என்று இரண்டு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உடைகளும், பிற ஏற்பாடுகளும் நன்றாக இருந்தன.
தினமும் நடத்தப்படும் விளையாட்டுகளில் கௌபாய்ஸ் குழுவினர் வென்றால், வீட்டுக்குள் சென்று மைனர்ஸின் உணவுப் பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு வந்து அவர்களுக்காக வைத்துக் கொள்ளலாம். மைனர்ஸ் குழு ஜெயித்தால் உணவை காப்பாற்றிக் கொள்வதோடு கௌபாய்களின் ரகசிய இடத்தில் இருக்கும் பொக்கிஷங்களையும் எடுத்துக் கொள்ளலாம். அதோடு பொக்கிஷ அறையில் மறைத்து வைக்கப்பட்ட, ஒரு கோல்டு காயினை எடுத்துவிட்டால், அந்தக் காயினில் படம் பொறிக்கப்பட்டிருக்கும் கௌபாயை அவர்களின் வேலையாளாகவும் வைத்துக் கொள்ளலாம் என்பது போல சில விதிமுறைகளும் விதிக்கப்பட்டன.
தூரத்தில் இருக்கும் பொம்மைக் காளை மாட்டுக் கொம்பில், ஒரு வளையத்தை சரியாக வீச வேண்டும் என்பதாக முதல் விளையாட்டு நடத்தப்பட்டது. இதில் மைனர்ஸ் மாஃபியா குழு வென்றது. அதனால் வினோத் அவர்களது பொக்கிஷ அறைக்குச் சென்று சிலவற்றை எடுத்துக் கொண்டதோடு, கோல்டு காயினையும் தேடி எடுத்துக்கொண்டு வந்தார். அதனால், மைனர்ஸ் குழுவினர், கௌபாய்ஸ் குழுவிலிருந்த வாசனை வேலைக்காரராக மாற்றி அழைத்துக் கொண்டு போனார்கள். முன்னதாக எப்படியும் கோல்டு காயினை எடுத்துவிடுவார்கள், அதனால் எளிதாக எடுக்கும்படி காயினை வைத்துவிட்டு, அவர்களது குழுவுக்கு வேலைக்காரனாகப் போய் அவர்களுக்குக் குடைச்சல் கொடுக்கலாம் என்று குழுவோடு சேர்ந்து வாசன் திட்டமிட்டிருந்தார். அதன்படியே காட்சிகளும் நகர்ந்தன. திட்டமிட்டபடி வேலைக்காரராக மைனர்ஸ் குழுவுக்குள் வந்த வாசன் அவர்கள் சொல்வதைக் கேட்காமல், ’சோறு போட்டால்தான் வேலை செய்வேன், அதைச் செய்தால்தான் இதைச் செய்வேன்’ என்பது போல எதற்கெடுத்தாலும் வம்பிழுத்துக் கொண்டிருந்தார்.
ஒருவேளை தோற்றுவிட்டால் என்ன செய்வது என்று மைனர்ஸ் குழுவும், முன் ஜாக்கிரதையாக சில உணவுப் பொருட்களை கிச்சனிலிருந்து எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டிருந்தனர். அதைப் போலவே அடுத்து வைக்கப்பட்ட ’நெற்றியிலிருக்கும் பிஸ்கெட்டை கையால் தொடாமலேயே வாய்க்குக் கொண்டுவரும்’ ஒலிம்பிக் தரமான விளையாட்டில், கௌபாய்ஸ் குழு வெற்றி பெற்றுவிட்டது.
அதனால் வீட்டுக்குள் வந்து மைனர்ஸின் அனைத்து உணவுப் பொருட்களையும் அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள். உணவையும் இழந்து, வாசனின் குடைச்சலையும் சமாளிக்க முடியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள் மைனர்ஸ் குழுவினர். நாளைக்கு நிலைமை மாறுகிறதா என்று பார்ப்போம்.