

வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த வைரத்தைச் சுற்றி எந்நேரமும் ஆட்கள் இருந்து கொண்டே இருந்தார்கள். இதனால், இவர்கள் யாரும் வைரத்தைத் திருடப்போவதுமில்லை, மூன்று நாட்களும் வைரத்தைச் சுற்றி உட்கார்ந்து கும்மி அடித்தே பொழுதைக் கழித்து விடுவார்கள் என்று புரிந்துவிட்டது பிக்பாஸுக்கு! அதனால், லான் ஏரியாவில் ஒரு சின்ன மேடை அமைத்து அதுதான் மியூசியம் என்றும், இனி அதில்தான் வைரம் வைக்கப்பட்டிருக்கும் எனவும், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் போய் பார்த்துக் கொள்ளலாம் எனவும், ஒரு நாளைக்கு மூன்று தடவைகள், ஒரு ஜோடி போய் அந்த வைரத்தைத் தொட்டுச் சுத்தம் செய்யும் பணியும் கொடுக்கப்படும் என்றும் ’வைரக்கொள்ளை’ ஆட்டத்தை மாற்றி அமைத்தார்.
இதன் மூலமாக வீட்டுக்குள் பாதி வெளியே பாதி என்று ஆட்கள் பிரிய நேரிடும், இது போக டான்ஸ் மாரத்தான் நிகழ்ச்சி மூலமாக சிலரின் கவனத்தைக் கலைக்கலாம், இதனால் யாராவது திருடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்பது பிக்பாஸின் திட்டம்.
இந்த ஆட்டத்திலும் தனியாகவோ அல்லது அதிகபட்சம் இரண்டு பேருடன் கூட்டு சேர்ந்தோ வைரத்தைக் கொள்ளையடிக்கலாம் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், சென்ற வாரம் பாட்டில் டாஸ்க்கைப் போலவே யார் யாருடன் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்பதே யாருக்கும் தெரியவில்லை. எல்லோரும் எல்லோரிடமும் கூட்டணி பேசிக் கொண்டிருந்தார்கள். ஜேசன் ஒவ்வொரு ஆளிடமும் போய், நீங்கள் திருடும் போது நான் பார்த்தால் அதை நான் போட்டுக் கொடுக்க மாட்டேன் என்று எல்லோரிடமும் பொய் சொல்லிக் கொண்டிருந்தார். அதாவது யார் எடுத்தாலும், அவரோடு நாம் ஆட்டோமேடிக்காக கூட்டணியாகிவிடுவோம் என்பது அவரது கணக்கு. ஆனால், எல்லோரும் பேசிக்கொண்டு மட்டும்தான் இருந்தார்களே தவிர வைரத்தை எடுப்பதற்கான எந்த திட்டமிடுதலும் யாரிடமும் இல்லை, டிடிஎஃப் வாசனைத் தவிர! வாசனுக்கு மொத்தமாக பிக்பாஸ் விளையாட்டுதான் என்னவென்று புரியவில்லையே தவிர, இது மாதிரியான டாஸ்க்குகளை எல்லாம் சிறப்பாகத்தான் விளையாடுகிறார்.
அவரது திட்டம் தெளிவாக இருந்தது. வெளியே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் வைரத்தை திருடினால், அதை மறைத்து வைப்பதற்கு சில வினாடிகள் நேரம் கூட நமக்கு கிடைக்காது. அதனால் அது சாத்தியமில்லை. அதனால், முதல் கட்டமாக பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியிலிருக்கும் போலி வைரத்தையும், காட்சியிலிருக்கும் நிஜ வைரத்தையும் இடம் மாற்ற வேண்டும். அதன் பிறகு இரண்டாம் கட்டமாக, பெட்டியில் இருந்து நிஜ வைரத்தை எடுத்துக்கொண்டு போய் மறைவிடத்தில் வைக்க வேண்டும். இது எல்லாவற்றுக்கும் முன்பாக எங்கே மறைத்துவைக்க வேண்டும் என்பதை தெளிவாகத் திட்டமிட்டு, அந்த இடத்தையும் தயார் செய்ய வேண்டும். இதுதான் அவருடைய திட்டம்.
இந்த திட்டத்தின்படி சிறப்பாகச் செயல்பட்டார் அவர். முதலில் பாத்ரூமுக்குள் போய் யாருக்கும் சந்தேகம் வராதபடி ஏசி வென்ட் கதவை கழட்டி வைத்தார். இது ஒரு கடினமான வேலை. எந்நேரமும் ஆட்கள் வந்து போய்க்கொண்டிருக்கும் அந்த இடத்தில் அத்தனை பேரின் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு, இதை யாருக்கும் தெரியாமல் செய்ததற்கே தனியா பரிசு எதுமிருந்தால் கொடுக்கலாம். அதன் பிறகு போலி வைரத்தையும் நேரம் பார்த்து இடம் மாற்றினார். கடைசியாக வைரத்தைத் தூக்க, நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.
”இப்படியே இருந்தால் யாரும் வைரத்தை எடுக்கப்போவதே இல்லை. பிக்பாஸ் பாவம், நம்மை நம்பித்தான் இந்த நிகழ்ச்சியையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சுவாரசியம் இல்லையென்றால் பிக்பாஸ் தொழிலே நொடித்துப் போகாதா?” எனும் கவலையோடே எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும் முனியம்மா, யாரும் பார்த்தாலும் பரவாயில்லை என்று ஓர் இருவர் இருக்கும் போதே வைரத்தை எடுத்து ஒளித்து வைக்க முயற்சித்தார். கரிஷ்மாவிடம் கையும் களவுமாக மாட்டியும் கொண்டார். அந்த வைரத்தை எடுத்துக்கொண்டு இந்த பெண்கள் எல்லாரும், முனியம்மாவைக் கலாய்த்தபடி கொஞ்ச நேரம் கூடிக் கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள்.
எல்லோருடைய கவனமும் சிதறியிருந்த அந்த சமயத்தைச் சரியாகப் பயன்படுத்தி, பெட்டிக்குள் இருந்த நிஜ வைரத்தைத் தூக்கிக் கொண்டு போய் பாத்ரூம் ஏசி வெண்டில் வைத்துவிட்டார் வாசன். வைரம் திருடுபோனதாக சைரனும் ஒலிக்கப்பட்டது. ஆனால், கடைசி வினாடிகளில் அவர் பாத்ரூம் மேஜை ஒன்றை நகர்த்தியதை அஷ்மிதா பார்த்துவிட்டார். அந்த ஒன்றை வைத்துக்கொண்டு ’வாசன்தான் வைரத்தை எடுத்திருக்கிறார். அவர் அதை பாத்ரூமில்தான் அதை ஒளித்து வைத்திருக்கிறார்’ என்றும் சரியாக கணிக்கவும் செய்தார். ஆனால், பாத்ரூமுக்குள்ளிருந்த வைரத்தை அவர்களால் கண்டுபிடித்து எடுக்க முடியவில்லை என்பதால் அவரது கருத்தை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அஷ்மிதாவும், முடிந்தவரை வாசனின் வாயைக் கிளறிவிட முயற்சித்துக்கொண்டே இருந்தார். அதோடு வாசனோடு கூட்டுச்சேர்ந்து விளையாடியது யார் என்பது நமக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை. அவினாஷ் மாதிரி நமக்குத் தெரிந்தாலும், அதில் அவிநாஷுக்கே நம்பிக்கையில்லை என்பது வினோதமாக இருக்கிறது. மொத்தத்தில், ஆட்டம் வைரக்கொள்ளை ஆட்டம் விறுவிறுப்பாகத்தான் சென்றது. இதன் முடிவு என்ன என்பதை நாளை பார்ப்போம்.