BB 10 Tamil Day 52 Jiohotstar
சினிமா

பிக்பாஸ் 10 -நாள் 52:  போர்க்களமான பிக்பாஸ் வீடு! #BiggBoss10

டாய்லெட்டுக்குள் இருந்த குப்பைத்தொட்டியை எடுத்து வந்து வெளியே கொட்டியதைப் பார்த்தால் உணவு பொருளைத் தேடுவதாக நமக்குத் தெரியவில்லை. அவினாஷ் டாய்லெட் டிஷ்யூஸ், நாப்கின்ஸ் போன்றவற்றை வெளியே கொட்டி வைத்ததைக் கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியவில்லை.

ஆதி தாமிரா

இந்த வார வீக்லி டாஸ்க்கில் குயிக்கன் கௌபாய்ஸ், மைனிங் மாஃபியா என்று இரண்டு அணிகளாகப் பிரிந்து விளையாடிக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள், இன்று போட்டி உணர்வைத் தாண்டி ஒருவருக்கொருவர் விரோதத்துடன் மோதிக்கொண்டு வீட்டையே ரணகளமாக்கிப் போட்டு விட்டார்கள். என்னவாயிற்று என்பதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ஷாதிகாவின் சில துணிகளை எடுத்து மறைத்து வைத்து விளையாடுவதற்காக கரிஷ்மாவும் அஷ்மிதாவும் திட்டமிட்டு எதையோ செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது. இதனால் தன் துணிகளை தேடிக் கொண்டிருந்த ஷாதிகா, எரிச்சலில் வெளியே காய்ந்து கொண்டு இருந்த மைனர்ஸ் குழுவின் துணிகளை எல்லாம் எடுத்து தரையில் விசிறி அடித்தார். அஷ்மிதாவின் துணிகளை எடுத்துப் போடுவதுதான் அவரது நோக்கம். ஆனால் அங்கு மற்றவர்களின் துணிகளும் இருந்ததைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை.

அப்போது அங்கு வந்த அக்சிதா, ”உன்னுடைய துணிகளை யார் எடுத்தாரோ அவருடைய துணியை மட்டும்தானே நீ எடுத்துப் போட்டிருக்க வேண்டும்? எதற்காக எனது துணியை எடுத்துப் போட்டாய்?” என்று நியாயம் கேட்டுவிட்டு, அதைக் கேட்ட கையோடு அப்படியே எதிரணிக்கு போய் அங்கிருந்த அனைவரின் துணிகளையும் எடுத்து ஸ்விம்மிங் பூலில் தூக்கி எறிந்தார். நன்றாக இருக்கிறதல்லவா அக்சிதாவின் நியாயம்!

இதை பார்த்த முத்தழகி எழுந்து போய் மிச்சம் இருந்த துணிமணிகளையும், துணி காய வைத்திருந்த ஸ்டாண்ட் உட்பட அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்து ஸ்விம்மிங் பூலில் எறிந்தார். அதை பார்த்த அக்சிதா துணிகளை மட்டுமில்லாமல் அங்கிருந்து கையில் கிடைத்த மற்ற பொருட்களையும் தூக்கி ஸ்விம்மிங் பூலில் போட்டு நாறடித்தார்.

இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவினாஷ், பதிலடியாக மைனர்ஸ் அணியின் கிச்சனுக்குள் நுழைந்து கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து வந்து வெளியே போட்டு விடலாம் என்ற யோசனையுடன் உள்ளே நுழைய, தனியாளாக அவரைத் தடுக்க முயற்சி செய்தார் தன்யா. அப்போது அவருடைய அருமைத் தங்கச்சி அக்சிதாவும் அங்கே இருக்கத்தான் செய்தார். ஆனால் எதிரணியிலிருந்த அண்ணனைத் தடுக்க அவர் எதையும் செய்யவில்லை. அவினாஷைத் தடுக்கும் முயற்சியில் தன்யா ”என்னை தொடப் பார்க்கிறாயா?” என்று ஒரு வுமன் கார்டு வார்த்தையை சொல்லிவிட்டார். அது நிச்சயம் தவறுதான். அவினாஷுக்கு அப்படி எந்த நோக்கமும் கிடையாது. தன்னைத் தள்ளிவிட்டு உள்ளே போகப்பார்க்கும் அவிநாஷை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று தெரியாத அந்த அழுத்தமான சூழ்நிலையில், அந்த வார்த்தையை பயன்படுத்திவிட்டார் தன்யா.

அதற்கு உடனே, ’பாத்துட்டான், என்னைப் பாத்துட்டான்’ என்று கவுண்டமணி ஒரு படத்தில் கத்திக் கூப்பாடு போடுவதைப்போல ’ஆஹா, என்னைப் பார்த்து இப்படிச் சொல்லிவிட்டாள், வுமன் கார்டைத் தூக்கிவிட்டாள். என் மானம் போச்சு, இவள் கேவலமானவள், அசிங்கமானவள்’ என்று அவினாஷ் கத்த ஆரம்பித்துவிட்டார். அவரது அணியிலிருந்த முகேஷும் கூடச் சேர்ந்துகொண்டு ’என்னிடமும் ஒரு தடவை இப்படித்தான் செய்தாள், இவளை விடாதே’ என்று களத்தில் குத்தித்தார்.

ஆனால் தன்யா, தான் அப்படிச் சொன்னது தவறு என்பதை உடனேயே உணர்ந்து கொண்டாலும் ’தெரியாமல் சொல்லிவிட்டேன், சாரி அவினாஷ்’ என்று சொல்லி அதை அங்கேயே முடித்திருக்கலாம். ஆனால் சாரி கேட்காமல், ’நீ என்னைத் தள்ளிவிடத்தானே வந்தாய், அதைத்தான் சொன்னேன். நீ தொட வந்தாய் என்று சொன்னது என்னை அல்ல, கிச்சனில் உள்ள பொருட்களைத் தொட வந்தாய் என்றுதான் சொன்னேன்’ என்று விதவிதமாக ஜாங்கிரி சுற்றிக் கொண்டிருந்தார். இதனால் எல்லோரும் அவரைப் போட்டு கும்மியெடுத்துவிட்டார்கள். அவரது அணியிலிருந்த அக்சிதாவும் எதிரணியிலிருந்த அண்ணனின் மானத்தைக் காப்பாற்ற, தன்யாவை பிடிபிடியென்று பிடித்துக் கொண்டார். ’நான் உங்க அண்ணனை தப்பாகச் சொல்லவில்லை. எனது நோக்கம் அதுவல்ல’ என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தாரே தவிர சாரி என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து, ’இதை வைத்து வீக்கெண்ட் பஞ்சாயத்தில் நம்மைக் கும்மி எடுத்து விடுவார்களோ’ எனும் பயத்தில் தன்யா, அவினாஷிடம் சாரி கேட்பதற்காக வெளியே போனார். ஆனால். கொந்தளித்துக் கொண்டிருந்த அவினாஷ், அதை விடுவதாக இல்லை. அந்தப் பேச்சின் போது தன்யாவின் விரல் தற்செயலாக அவினாஷ் மேல் படவும், பள்ளிக்கூட பிள்ளைகள் போல, தன்யாவைப் பழிக்குப் பழி வாங்குகிறேன் என்ற பெயரில், ’எல்லோரும் பாருங்கள் இந்த அநியாயத்தை... என்னை இவள் தொட்டுவிட்டாள். ஒரு பெண் மட்டும் ஆணைத் தொடலாமா?’ என்று மீண்டும் கூச்சல் போட ஆரம்பித்தார். அதற்கு ஷாதிகாவும் ஒத்து ஊதிக்கொண்டிருந்தது இன்னும் கொடுமை.

இவ்வளவு நிகழ்ச்சிகளும் நள்ளிரவில் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் வாசன் உட்பட சிலர் தூங்கிக் கொண்டிருந்திருப்பார்கள் போலிருக்கிறது. காலையில் எழுந்து வந்து பார்த்த வாசனுக்கு தனது துணிகள் ஸ்விம்மிங் பூலில் கிடப்பதைப் பார்த்து ஒரே அதிர்ச்சி. இது பிக்பாஸ் வீடு, இது விளையாட்டு என்பதையே ஒரு கணம் மறந்து, ”என்னடா இது அட்டகாசம் பண்ணி வைச்சிருக்கிறீங்க. என்னடா இது ஒரே அக்கப்போராக இருக்கிறது. என்ன பிக்பாஸ் இது?” என்று தனியே புலம்பி கொண்டிருந்தார். அப்படிச் செய்தது அக்சிதா என்று தெரிய வந்தவுடன், அவரிடம் நியாயம் கேட்பதற்காக உள்ளே போனார்.

’எல்லாரும் மாறி மாறி துணிகளைத் தூக்கிப் போட்டார்கள், நானும் போட்டேன். சாரி’ என்று சிம்பிளாக ஒரு வார்த்தையில் முடித்திருக்கலாம் அக்சிதா. ஆனால் அதைச் செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்புக்காத்தான் காத்திருப்பது போல, வாசனுடன் மல்லுக்கு நின்றார். அவர் முட்டாள் என்றால் நீதான் முட்டாள் என்பது, அவர் அறிவு இருக்கிறதா என்று கேட்டால் உனக்கு அறிவு இருக்கிறதா? என்று கேட்பது என்று பதிலுக்குப் பதில் பேசி சண்டையை வளர்த்துக் கொண்டிருந்தார். அக்சிதாவைப் பொறுத்தவரை வாசனை எப்படியாவது தூண்டிவிட்டு கோபப்பட வைத்து, முடிந்தால் ரெட் கார்டில் வெளியே தள்ளிவிடவேண்டும் என்பதுதான் நோக்கம்.

இந்த வாக்குவாதத்தில் ’உன்னுடன் பேசிப் பயனில்லை, முதலில் எனக்கு வழியை விடு. நான் வெளியே போகிறேன்’ என்று அக்சிதாவின் தோளில் கை வைத்து லேசாக நகர்த்தினார் வாசன். அதற்கு ”ஐயய்யோ என்னைக் கை வைத்து தள்ளி, வன்முறை செய்து விட்டான்” என்று ஊதிப் பெரிதாக்க முயற்சி செய்தார். ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மாறாக இதே வாக்குவாதத்தின் போதே, வாசன் அவர் மீது கை வைத்ததைப் போல, மூன்று தடவைகள் வாசனின் மீது அக்சிதா கை வைத்து தள்ளி விட்டதையும் நாம் பார்த்தோம். அக்சிதாவின் நியாயங்களை ஏதாவது கல்வெட்டில்தான் பொறித்து வைக்க வேண்டும் போலிருக்கிறது. முகேஷுடன் ஏற்பட்ட மோதல் சம்பவத்துக்குப் பிறகு வாசன் இந்த விஷயத்தில் ரொம்பவே கவனமாக விளையாடிக் கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது.

BB 10 Tamil Day 52

அடுத்து மூன்று விளையாட்டுகள் நடத்தப்பட்டன. காலில் பலூன்களைக் கட்டிக்கொண்டு, எதிரணியினரின் கால்களில் உள்ள பலூன்களை உடைக்க வேண்டும் என்று ஒரு ஆட்டம். ஒரு குண்டு பல்பின் மீது உப்பின் உதவியோடு ஒரு முட்டையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இன்னொரு ஆட்டம். தலையில் ஒரு பந்தை நூலில் கட்டித் தொங்கவிட்டபடி, அந்த பந்தின் மூலமாக தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாட்டர் பாட்டில்களை தள்ளிவிட வேண்டும் என்பது மூன்றாவது ஆட்டம். மூன்றிலுமே கௌபாய்ஸ் குழு வெற்றி பெற்றுவிட, ஒரு வெற்றிக்கு ஈடாக வாசனை மீண்டும் குழுவுக்குள் இணைத்துக்கொண்டார்கள். இரண்டு முறை வீட்டுக்குள் உணவுப் பொருட்களைத் தேடி வேட்டைக்குப் போனார்கள்.

இந்த சமயங்களில்தான் இரண்டு குழுக்களுமே, இவை சாதாரண விளையாட்டுகள்தான் என்பதையே மறந்து, போட்டி மனப்பான்மையையும் தாண்டி ஒருவருக்கொருவர் விரோதமாகவும், மோசமாகவும் விளையாடினார்கள். கௌபாய்ஸ் குழுவினர் உணவுகளைத் தேடுகிறேன் பேர்வழி என்று வீட்டையே தலைகீழாகப் புரட்டிப் போட்டார்கள். பெட்ரூமில் அனைவரின் ஆடைகளையும் தூக்கி எறிவது, சோபாக்களை புரட்டிப் போடுவது என்ற அட்டகாசம் செய்தார்கள். பாத்ரூமுக்குள் போய் டாய்லெட்டுக்குள் இருந்த குப்பைத்தொட்டியை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து வெளியே கொட்டியதைப் பார்த்தால் உணவு பொருளைத் தேடுவதாக நமக்குத் தெரியவில்லை. அவினாஷ் டாய்லெட் டிஷ்யூஸ், நாப்கின்ஸ் போன்றவற்றை வெளியே கொட்டி வைத்ததைக் கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியவில்லை.

இவர்கள்தான் இப்படி செய்தார்கள் என்றால் மைனர்ஸ் குழுவில் உள்ள பெண்கள் தாங்களும் அதற்குச் சளைத்தவர்கள் இல்லை என்பது போல உப்பு, சீனி, முட்டை போன்ற பொருட்களை ஆடைகளுக்குள் அதுவும் உள்ளாடைகளுக்குள் எல்லாம் ஒளித்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அதை எப்படி தேடி எடுக்க முடியும்? பின்னர் அதை சமைத்துச் சாப்பிட வேண்டுமே என்பதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லை அவர்களுக்கு. யாராவது வழுக்கி விழுந்துவிட்டால் என்னாவது என்று கொஞ்சமும் யோசிக்காமல் பாத்ரூம் தரையில் சோப்புத் தண்ணீரை கொட்டி வைத்தார்கள். எதிரணியினர் இடத்துக்குப் போய் அங்கிருந்த உணவுப் பொருட்களை தரையில் கொட்டி விடுவது, தண்ணீரில் தூக்கிப் போடுவது போன்ற வேலைகளை செய்தார்கள். அப்போது அதைத் தடுக்க முயன்ற வாசனுடன் அக்சிதா மீண்டும் ஒருமுறை மோதினார். ஒரு குக்கர் மூடியை வைத்து வாசனைத் தாக்குவதற்கு அக்சிதா முயன்றது போலவும் தெரிந்தது. அண்ணன், தங்கையான அவினாஷும், அக்சிதா இருவரும் இந்த வீட்டை ஒரு வழி பண்ணாமல் ஓயமாட்டார்கள் போலிருக்கிறது.