

சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஓபன் நாமினேஷனில் ஏற்பட்ட சொதப்பல்களை போட்டியாளர்களுக்கு நினைவூட்டி, மீண்டும் ஒரு ஓபன் நாமினேஷனை இந்த வாரம் நடத்தினார் பிக்பாஸ். ஆனால், நமது போட்டியாளர்கள்தான் ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்று நடந்து கொள்பவர்களாயிற்றே! ’சென்ற முறை இரண்டு பேரை மட்டுமே குறிவைத்துத் தாக்கி, மொத்த ஓட்டுகளையும் போட்டு சொதப்பினார்கள் என்று சொன்னீர்கள் அல்லவா, இப்பப் பாருங்கள் எங்கள் திறமையை...’ என்று, இம்முறை சரியாகக் கணக்குப் பார்த்து, ஆளுக்கு இரண்டு ஓட்டுகள் போட்டு அனைவரும் நாமினேட் ஆகிவிட்டார்கள். கூடுதலாக ஏதாவது வாக்குவாதம், சண்டை, சிண்டுமுடிதலாவது நடந்ததா என்றால் அதுவுமில்லை. இரண்டு மாலைகளை கொடுக்கப்பட்டு ஒவ்வொருவரும் அதை பிறருக்கு அணிவித்து அவர்களை நாமினேட் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது. அது ஒரு ஜாலியான விளையாட்டாக இருந்ததாலும், கூடுதலாக யாரும் யாருடனும் வம்பிழுக்க விருப்பமின்றி, ’நீங்கள் ரொம்ப நல்லவர்தான், இந்த சின்ன விசயத்தை மட்டும் திருத்திக்குங்க’ என்று பூசினாப்பல பேசியும் நாமினேட் செய்து நாமினேஷனை நல்லபடியாக முடித்து விட்டார்கள். சுவாரசியமாக ஒன்றுமே நடக்கவில்லை.
பிக்பாஸ் அவரது அறைக்குள் உட்கார்ந்தபடி கடுப்பாவதை நம்மால் உணர முடிந்தது. அதுதான், ”நீங்கள் இந்த நாமினேஷனை விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொண்டு செய்திருந்தால், உங்களால் அடுத்த வாரம் ஒருவர் வெளியே போகப் போகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்ற அவரது எச்சரிக்கையில் வெளிப்பட்டது. அதுதான் எல்லோருக்கும் தெரியுமே! அதை எதற்கு தனியாக நினைவில் கொள்ளணும்?
அடுத்து என்னவாயிற்றோ தெரியவில்லை, வழக்கமாக திங்கள்கிழமை எபிசோடில் வரும், லீடர் டாஸ்க் போட்டிகள், லீடர் தேர்வு, கடந்த வார பெஸ்ட் பர்ஃபார்மர்ஸ், ஒர்ஸ்ட் பர்ஃபார்மர்ஸ் போன்ற எந்த நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை. நாமினேஷனுக்கு அடுத்து ஷாப்பிங் டாஸ்க் நடந்தது. தாராளமாக ஒவ்வொருவருக்கும் 400 பாயிண்ட்ஸ் கொடுத்து ஷாப்பிங் செய்யச் சொன்னார் பிக்பாஸ். பிருத்வியும், தன்யாவும் உள்ளே போனார்கள். காய்கறிகள் போன்ற அவசியமானவற்றை விட்டுவிட்டு, பிரெட், நெய், பிஸ்கெட், சிப்ஸ், ஐஸ்கிரீம் போன்றவைதான் தன்யாவின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருந்தன. அதற்கு, மற்ற போட்டியாளர்களிடமிருந்து ஆதரவும், பாராட்டும் கூட கிடைத்தது. இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு விளையாட்டு நடத்தி, கொலைக்கேஸ்லதான் நாம உள்ளே போகப்போகிறோம் போலிருக்கிறது எனும் கடுப்பில், ’இன்னொரு சான்ஸ் தர்றேன், போய் காய்கறிகளைக் கொஞ்சமாவது எடுத்துக்கோங்க’ என்று சொல்லி மீண்டும் ஷாப்பிங் செய்ய அனுப்பினார் பிக்பாஸ். இப்படியெல்லாம் ஒரு சம்பவம் பிக்பாஸ் வரலாற்றிலேயே இதற்கு முன்பு நடந்ததில்லை.
அதற்குப் பிறகு, ’இந்த முறையும் நாமினேஷனை டிப்ளமேடிக்காக விளையாடி சொதப்பவா செய்கிறீர்கள், இப்பப் பாருங்கடா’ என்றபடி இன்னொரு டாஸ்க்கைக் கொண்டு வந்தார் பிக்பாஸ். ’யாருக்காவது இன்னொருவரிடம் கேட்க வேண்டும் என்று நினைத்த, ஆனால் அதைக் கேட்டு தர்ம சங்கடப் படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் கேட்காமல் மறைத்து வைத்திருந்த, சிக்கலான கேள்விகள் ஏதாவது இருந்தால் அதை இப்போது கேளுங்கள்’ என்றார் பிக்பாஸ். அதற்காகவே காத்திருந்தது போல ஜேசன் முதல் ஆளாக எழுந்து, ’நான் வாசனிடம் கேள்வி கேட்கப் போகிறேன்’ என்று வாசனை அழைத்தார்.
”நாங்க எல்லாரும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி எங்களுக்குத் தேவை அப்படிங்கற கண்ணோட்டத்தில் உள்ள வந்திருக்கோம். உங்களை ரம்யாகிருஷ்ணன் மேடம் இதைப்பற்றிக் கேட்டப்போ, உங்களுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வேணும்தான், ஆனா அது மாதிரியே பிக்பாஸ்க்கும் நீங்க தேவை அப்படினு சொன்னீங்களே, உங்க நடவடிக்கையும் அது மாதிரியே இருக்குதே. வெளியே உங்களுக்கு பெரிய ஆதரவு இருக்கு எனும் எண்ணமா? அப்படி இருந்தா நீங்க எதுக்கு இந்த வீட்டில இருக்கணும்? வெளில போகலாமே!” என்று வாசனிடம் கேட்டார் ஜேசன். இது வாசன் ஜாலியாகச் சொன்ன விசயம். அதை விடுத்து அவரிடம் கேட்பதற்கு பல விசயங்கள் இருக்கின்றன. ஆனால், நாம் ஏற்கனவே சொன்னது போல, வாசனுக்கு பார்வையாளர்கள் தரப்பில் இருந்து வரக்கூடிய மிகப்பெரிய ஆதரவால் ஜேசனுக்கு ஏற்பட்ட பொறாமையின் வெளிப்பாடுதான் இது. ’தேவைன்னா அது சின்ன்ன்ன்ன தேவை, நாம் எல்லோருமே அப்படித்தானே’ என்பது போல அதற்குப் பதில் சொல்லி சமாளித்தார் வாசன். அதற்குப் பிறகும் அதையே விடாமல் நோண்டிக் கொண்டிருந்ததால், பதிலுக்கு அவரிடம் ’நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா?’ என்பது போல கோக்குமாக்காகக் கேள்வி கேட்டு ஜேசனின் வாயை அடைத்துவிட்டார் வாசன்.
அடுத்து கரிஷ்மா ஜேசனிடமும், முனியம்மா முகேஷிடமும், வினோத் ஜேசனிடமும், அன்சார் தன்யாவிடமும், அக்சிதா அவினாஷிடமும், வாசன் ஜேசனிமும், லட்சுமி முனியம்மாவிடமும் கேள்விகளைக் கேட்டார்கள். பதில்களும் சுமாராகக் கிடைத்தன. முனியம்மா முகேஷிடம், ’நீயும் ஷாதிகாவும் பழகுவது காதலா?’ என்று வெளிப்படையாகக் கேட்டபோது லட்சுமி உள்ளிட்ட சிலர் ’இப்படி ஒரு நிகழ்ச்சியில் காதல்ங்கிற வார்த்தையை பயன்படுத்துறா பாரேன்’ என்பது போல அதிர்ச்சியடைந்தார்கள். அதைப் பார்த்து நமக்குதான் அதிர்ச்சியாக இருந்தது.