BB 10 Tamil Day 48 Jiohotstar
சினிமா

பிக்பாஸ் 10 -நாள் 48: ஜேசனை ரோஸ்ட் செய்த ரம்யா கிருஷ்ணன்! #BiggBoss10

முகேஷின் காதில், ”அவனைக் கோபப்படுத்தி வன்முறையில் ஈடுபட வைத்து, ரெட் கார்டு வாங்க வைத்துதான் வெளியே அனுப்பமுடியும். அதற்கான வேலைகளை நாம் பார்க்க வேண்டும்” என்று ஓதிக்கொண்டிருந்தார்.

ஆதி தாமிரா

விஜய் சேதுபதி உடல் நலம் சரி இல்லாமல், இந்த வாரம் மெடிக்கல் லீவில் போய்விட்டதால், நிகழ்ச்சியை நடத்த ரம்யா கிருஷ்ணன் மேடைக்கு வந்தார். இந்த வாரம் பேசப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தாலும் ரம்யா கிருஷ்ணன் சரளமாக பேசக்கூடியவர் அல்ல என்பதும், டாக் பேக்கில் சொல்லப்படும் விஷயங்களை கேட்டு அதன்படி ஒப்பேற்றக்கூடியவர் என்பதும் ஏற்கனவே தெரியும் என்பதால் பெரிய எதிர்பார்ப்புகள் நமக்கில்லை. ஆனாலும் பெரிதாகக் குறை சொல்லும்படி இல்லாமல், ரம்யா இந்த வாரத்தைச் சமாளித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

முதலில் வெள்ளிக்கிழமை எபிசோடைக் காண்பித்தார்கள். வினோத் தலைமையிலான நீல அணியினர் எல்லாப் போட்டிகளிலும் வென்று, லக்சுரி உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல், சிவப்பு அணியினரின் படுக்கை அறை, சமையலறை போன்ற வசதிகளையும் நிறுத்தினார்கள் என்றாலும், சிவப்பு அணியினர் அதனால் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக எந்நேரமும் நீல அணியைக் கேலி செய்து கொண்டும், வம்பிழுத்துக் கொண்டும், அவர்களது உணவை எடுத்துச் சாப்பிட்டு சேட்டை செய்தபடியும் இருந்தனர். அது விதி மீறல் என்றாலும், அதனால் என்ன பின்விளைவுகள் வந்தாலும், நடப்பது நடக்கட்டும் என்று ஜாலியாக இருந்தனர்.

ஆனால், அவற்றைச் சமாளிக்க முடியாமல், அவர்களோடு எந்நேரமும் வளவளவென்று பேசிக்கொண்டும், புலம்பிக்கொண்டும், அழுதுகொண்டும் திரிந்து கொண்டிருந்தனர் நீல அணியினர். இந்த வாரம் முழுதும் நடந்த அதே காட்சிகள்தான் வெள்ளிக்கிழமையும் நடந்தன. படுக்கையறை மூடப்பட்டதால், சிவப்பு அணியினர் லானில் படுக்கச் சொல்லப்பட்டனர். மழை பெய்தால் தாராளமாக வராண்டாவில் படுக்க முடியும். ஆனால், மழை பெய்கிறது என்று சொல்லி, வீட்டுக்குள் வந்து படுத்துக்கொண்டு வம்பிழுத்துக் கொண்டிருந்தனர் வாசனும், முனியம்மாவும். வழக்கம்போல நீல அணி இதைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது.

அதோடு வீக்கெண்ட் பார்வையாளர்களின் ஆரவாரத்தை வைத்து வாசனுக்கு வெளியே இருக்கும் போராதரவைக் கணித்த ஜேசன், வாசனை நாமினேட் செய்து மக்கள் வாக்கெடுப்பு மூலமாகவெல்லாம் வெளியே அனுப்பமுடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டார். அதனால், ஏற்கனவே செய்துகொண்டிருக்கிற ஆகாவழிக் காரியங்கள் போதாதென்று, முகேஷின் காதில், ”அவனைக் கோபப்படுத்தி வன்முறையில் ஈடுபட வைத்து, ரெட் கார்டு வாங்க வைத்துதான் வெளியே அனுப்பமுடியும். அதற்கான வேலைகளை நாம் பார்க்க வேண்டும்” என்று ஓதிக்கொண்டிருந்தார். இந்தக் கேவலமான திட்டத்தைக் கேட்டு முகேஷ், முத்தழகி, தன்யா போன்றோர் மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தது இன்னும் கொடுமை. இதெல்லாமா ஸ்ட்ரேட்டஜியில் வரும்? அப்படி ஏதாவது சின்னதாக முயற்சித்தாலும், அது வாசனுக்கு ஆதரவாகவே போய் முடியும் என்பது இவர்களுக்குத் தெரியவில்லை.

முதலில் ரம்யா, ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு கட்டத்தில் போட்டியாளர்களைப் பார்த்துக் கேட்கப்படும் அந்தக் கஷ்டமான கேள்வியை கேட்டார்.

”நீங்கள் பார்வையாளர்களை என்டர்டெயின் செய்வதற்காக வேறு யாராலும் செய்ய முடியாத எந்த வேலையைச் இந்த வீட்டுக்குள் செய்கிறீர்கள்? எந்த தனித்திறமை உங்களிடம் இருக்கிறது?”  என்பதுதான் அது.

இந்த கேள்விக்கு எந்த கொம்பனாலும் சரியாகப் பதில் சொல்ல முடியாது. இதற்குப் பதிலை யோசித்தாலே நம்மிடம் எந்த தனித்திறமையும் இல்லையோ என்று முடிவுக்குதான் ஒவ்வொருவரும் வருவார்கள். அவர்களுடைய தன்னம்பிக்கை உடைந்து போகும். அந்தக் கேள்வியின் நோக்கமும் அதுதான். இந்த கேள்விக்கு பதில் சொல்லும்படி முதலில் எழுப்பப்பட்ட முகேஷின் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வராமல் அப்படித்தான் திணறிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் மற்றவர்களைக் கேட்ட போதும், ”நான் டாஸ்க் நன்றாக விளையாடுகிறேன். நான் சமையல் செய்கிறேன். நான் கக்கூஸ் கழுவுகிறேன்” என்று எல்லா சீசனிலும் எல்லோரும் சொல்வதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதிக பட்சமாக ஓரிருவர் பாட்டுப் பாடுவேன், மிமிக்ரி செய்வேன் என்று சொல்லலாம். அதைச் சொன்னாலும், எளிதாக மடக்கப்பட்டு விடுவார்கள். உண்மையில் அந்த வீட்டுக்குள் வாழ்வதே ஒரு பெரிய தனித்திறமைதான்.

அடுத்து ஜேசனின் பஞ்சாயத்துக்கு வந்தார் ரம்யா. முக்கியமாக இரண்டு சிக்கல்கள். ஒன்று இரண்டு குழுக்களுக்குள்ளும் மாறி மாறி சென்று ஆட்டத்தைக் குழப்பிவிட்டது, அடுத்தது முனியம்மா பேசியதைத் திரித்து சண்டைக்குப் போனது.

முதல் பிரச்சனைக்கு, ”நான் அப்படி ஆகும் என்று நினைத்தேன், நான் இப்படி ஆகும் என்று நினைத்தேன்” என்று வளவளவென்று எதையோ சொல்லி சமாளிக்கப் பார்த்தார். ஆனாலும் தப்பிக்க முடியவில்லை. குறிப்பாக ’டாஸ்க்கை நியாயமாக விளையாடினேன்’ என்று திரும்பத் திரும்பச் சொன்ன ஜேசனின் நேர்மையை, கண்ணாமூச்சி ஆட்டத்தில் அன்சாரைக் கண்டுபிடிக்காமல் விட்டதை வைத்துச் சந்தேகத்துக்குள்ளாக்கினர். பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் அன்சாரின் பர்ஃப்யூம் வாசனையை உணர்ந்தபோது, ஜேசனுக்கு மட்டும் அது தெரியவில்லை என்பது சந்தேகம். நியாயமானதுதான்.

அடுத்து முனியம்மாவிடம் ஜேசன் எகிறிக்கொண்டு போன பிரச்சினையைப் பேசினார். (அது என்னவென்பதை இந்த இணைப்பில் காண்க)

BB 10 Tamil Day 48

அதற்குக் குறும்படம் போட்டுக் காண்பித்து, முனியம்மா பேசியதில் எந்தத் தவறும் இல்லை, இயல்பாகத்தான் கேட்டார் என்பதும் நிரூபிக்கப்பட்டது. ஆனால், அதை ஒத்துக் கொள்ளாததோடு ரம்யா கிருஷ்ணனைப் பேச விடாமல் அடிக்கடிக் குறுக்கிட்டுக் கொண்டிருந்தார் ஜேசன். ரம்யா கிருஷ்ணன் ’நான் பேச வாய்ப்பு தருகிறேன், அமைதியாக இருங்கள், உட்காருங்கள்’ என்று சொன்னபோதும் கேட்காமல் அவரை டென்ஷனாக்கிக் கொண்டிருந்தார் ஜேசன். ஒரு கட்டத்தில், ’இந்த விசயத்தில் என்னைக் குற்றம் சொன்னால், நான் இந்த ஷோவிலிருந்தே வெளியே போய்விடுவேன்’ என்றும் சொன்னார்.

இந்த இடத்தில் விசே இருந்திருந்தால், கடுப்பில் வெளியே போகவே சொல்லியிருப்பார், அவருக்கு ஈகோ கொஞ்சம் அதிகம்தான். ஒரு வார கேப்பில் வந்த நாம் அப்படி பேசிவிடக்கூடாது என்று கவனமாக இருந்தாலும், ரம்யாவுக்கும் சற்று கடுப்புதான். ’அதை நீங்க சொல்ல முடியாது, பிக்பாஸ்தான் சொல்ல முடியும்’ என்று சமாளித்தார். பதிலுக்கு ’ஐயாம் எ மேன்’ என்று ஜேசன் கத்தியதை நடித்துக் காண்பித்து நக்கல் செய்தும், ’வடை கடை போடுற பொம்பளை என்று நான் கேட்கட்டுமா?’ என்று ஜேசன் சொன்னதன் பொருளை விளக்கியும் ஜேசனை முடிந்தவரை ரோஸ்ட் செய்து விட்டார். அங்கு முடிந்தது சனிக்கிழமை எபிசோடு. மிச்சத்தை நாளை பார்ப்போம்.

முடிவாக இன்னும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடே ஒளிபரப்பாகவில்லை. அதற்குள் இந்த வாரம் வெளியேற்றப்பட்ட ஷமா விதிகளை மீறி பொதுவெளியில் பேட்டியே கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதனால், இந்த வாரம் வெளியேற்றப்பட்டது ஷமா என்பது உறுதியாகியிருக்கிறது.