பிக்பாஸ் 10 -நாள் 41:  வாசனின் வெற்றியும், ஜேசனின் பொறாமையும்! #BiggBoss10

முதலாவதாக, ஓபன் நாமினேஷனில் ஊரோடு மொத்தமாக கரிஷ்மாவுக்கும், வாசனுக்கும் வாக்குப் போட்டு வாக்குகளை வீணடித்த அனைவரையும் எழுப்பி ’கொஞ்சமாவது ஒரு டாஸ்க் ஏன் தரப்படுகிறது என்று யோசிக்க மாட்டீர்களா?’ என்று கொட்டு வைத்தார் விசே!
BB 10 Tamil Day 41
BB 10 Tamil Day 41Jiohotstar
Published on: 

வைரக் கொள்ளை டாஸ்க்கில், டிடிஎஃப் வாசன் தனி ஆளாக இந்த வாரம் கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கிளப்பிவிட்டிருந்ததால் ஆடியன்ஸ் சற்று உற்சாகமாக இருந்தார்கள். விஜய் சேதுபதி வந்ததும், கைத்தட்டலும் வரவேற்பும் வழக்கத்தை விட பலமாக இருந்தது.

விசே வழக்கம் போல், முதலில் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காண்பித்தார். தன்யாவும், வாசனும் ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். ’வைரம் வைத்த இடத்தில் இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்து விடு’ என்று வாசனைப் பயமுறுத்தினார் தன்யா. வெள்ளிக்கிழமை ஓய்வு நாள் என்பதால் பெரும்பாலான போட்டியாளர்கள் மதிய நேரத்தில் பெட்ரூமில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். தேவையே இல்லாமல் வாசன் இன்னொரு முறை பாத்ரூமுக்குச் சென்று, ஏசி வெண்டைத் திறந்து வைத்த இடத்தில் வைரம் இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்து விட்டு வந்தார். நமக்குத்தான் அதற்குள் யாராவது பார்த்துத் தொலைந்துவிடப் போகிறார்களோ என்று பதட்டமாக இருந்தது. மற்றபடி வெள்ளிக்கிழமை நிகழ்வுகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை.

முதலாவதாக, ஓபன் நாமினேஷனில் ஊரோடு மொத்தமாக கரிஷ்மாவுக்கும், வாசனுக்கும் வாக்குப் போட்டு வாக்குகளை வீணடித்த அனைவரையும் எழுப்பி ’கொஞ்சமாவது ஒரு டாஸ்க் ஏன் தரப்படுகிறது என்று யோசிக்க மாட்டீர்களா?’ என்று கொட்டு வைத்தார்.

அடுத்து வைரத் திருட்டு டாஸ்க்கை பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். யார் யார் கூட்டு சேர்ந்து விளையாடினீர்கள் என்று கேட்டார் விசே! முதலில் அன்சார் எழுந்து, ”முனியம்மாவும் நானும் கூட்டுச் சேர்ந்து விளையாடினோம். முதல் நாள் ரொம்ப ஆர்வத்தில் எல்லோரும் வைரத்தின் பக்கத்திலேயே தூங்காமல் உட்கார்ந்திருப்பார்கள். அப்போது நாம் முழுவதுமாகத் தூங்கி ஓய்வெடுத்துவிட்டு, இரண்டாம் நாள் நள்ளிரவில் அனைவரும் சோர்வாக இருக்கும் போது வைரத்தை லவட்டிவிடலாம் என்று திட்டமிட்டோம். ஆனால், எத்தனை நாளானாலும் பரவாயில்லை என்று ஏடிஎம் செக்யூரிட்டி போல அங்கேயே உட்கார்ந்து விட்டார்கள் சார். எங்களால் எடுக்க முடியவில்லை” என்று சொன்னார்.

அடுத்து முகேஷும், ஷாதிகாவும் ஜோடியாக எழுந்து, ”நாங்கள் ஜோடியாக விளையாடினோம் சார். தன்யாவைக் கூப்பிட்டு, நீ வைரத்தை எடுத்துக்கொண்டு வா. நாம் மூவரும் குழுவாக இருக்கலாம் என்று டீல் போட்டோம். ஆனால், தன்யா எடுத்துக்கொண்டு வந்து தரவில்லை சார்” என்றார்கள். ”தன்யா வைரத்தை எடுக்க ஏதாவது திட்டம் போட்டுக் கொடுத்தீர்களா அல்லது உதவியாவது செய்தீர்களா?” என்று விசே கேட்டதற்கு, ”ஊஹூம், மத்தவங்களுக்கு சந்தேகம் வந்துவிடும் என்று நாங்கள் எதுவும் செய்யவில்லை” என்று சொன்னார் ஷாதிகா. ”அதாவது நீங்க ஒண்ணுமே பண்ணாம, இன்னொருத்தர் உங்களுக்கு வைரத்தைக் கொண்டு வந்து தரணும்னு சும்மா உக்காந்துகிட்டு இருந்திருக்கீங்க. சரியா?” என்று கேட்டதற்கும், ஆம் என்பது போல பலமாக தலையாட்டினார் ஷாதிகா. ’இதுக்கு நீங்க வெக்கப்படணும் செண்ட்ராயன்’ என்பது போல ஷாதிகாவை அசிங்கப்படுத்தி உட்கார வைத்தார் விசே.

லட்சுமி பிரியா, அவிநாஷ், அஷ்மிதா மூவரும் கூட்டுச் சேர்ந்து விளையாடியிருக்கிறார்கள் போலிருக்கிறது. அஷ்மிதாவைக் கேட்டபோது, ”இவர்கள் எடுக்கவில்லை என்றால், எடுக்கும் ஆளுடன் கூட்டுச் சேர்ந்துகொள்ளலாம் என்று திட்டம் வைத்திருந்தேன் சார். இவர்கள் மட்டும் எனக்கு துரோகம் செய்யக்கூடாது என்று பிராமிஸ் வாங்கி வைத்திருந்தேன்” என்றார். அடாடா!

அடுத்து ’நான் எந்த திட்டமும் போடவில்லை. என் இஷ்டத்துக்கு விளையாடினேன். அதுதான் எனக்குத் தெரியும்’ என்று சொல்லிவிட்டு, அதற்குப் பாராட்டுவார் என்று காத்துக்கொண்டிருந்த முனியம்மாவுக்கு ’நீங்கள் செய்தது அலட்சியம். யோசிக்க வேண்டிய இடங்களில் யோசிக்க வேண்டும்’ என்று ஒரு கொட்டு வைத்தார்.

BB 10 Tamil Day 41
BB 10 Tamil Day 41Jiohotstar

அடுத்து ஜேசன் எழுந்து வீட்டில் இருந்த அத்தனை பேரோடும், தான் போட்டு வைத்திருந்த டீலைப் பற்றிச் சொன்னார். ஆனால், வைரத்தை எடுக்க எந்த முயற்சியும் அவர் செய்யவில்லை. அதைப் பற்றி கேட்டதற்கு, ’தனக்குக் கிச்சனில் பொறுப்பான சமையல் வேலை இருந்ததால் செய்ய முடியவில்லை’ என்று சொன்னார். இல்லாவிட்டாலும் அப்படியே அறுத்துக் குவித்திருக்கக்கூடிய ஆள்தான். இதெல்லாம் ஒரு சாக்கு, அவ்வளவுதான். ஏதாவது அவருக்குச் சாதகமாக நடந்தால் அதன்மூலம் வெளிச்சம் பெறுவது, இல்லாவிட்டால் ஏதாவது பிரச்சனையில் வெற்றுக் கூச்சல் போட்டு, பெரிய புத்திசாலி போல காட்டிக் கொள்வது... இதைத்தான் அவர் இன்றுவரை செய்து கொண்டிருக்கிறார்.

அடுத்து இந்த வைரக் கொள்ளை டாஸ்க் எப்படி நடந்தது, வாசன் எப்படி இடத்தைத் தயார் செய்தார், வைரத்தைக் எப்படி எப்போது எடுத்துக் கொண்டுபோய் மறைத்து வைத்தார், அதன் பின் நடந்த விஷயங்கள் என்னென்ன என்பதையெல்லாம் இரண்டு பெரிய குறும்படங்களாக போட்டு காண்பித்து, வாசனையும் பாராட்டினார் விஜய் சேதுபதி. குறும்படங்கள் ஓடிக்கொண்டிருந்த போது ஆடியன்ஸோடு சேர்த்து வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்களும் மிக உற்சாகமாக கை தட்டி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். முடிந்தவுடன் வாசனுக்குக் கை கொடுத்து வாழ்த்துக்கள் சொன்னார்கள். அவிநாஷ் போட்டி மனப்பான்மையை எல்லாம் விட்டுவிட்டு விசில் அடித்து உற்சாகமாக வாசனை வாழ்த்தினார். வீட்டில் அத்தனை பேரும் மகிழ்ச்சியோடு பாராட்டிக் கொண்டிருந்தபோது, ஜேசன் மட்டும் இருக்கையை விட்டு எழுந்திருக்கக்கூட இல்லை. அத்தனையும் பொறாமைதான். ’இது பார்க்க நல்லா இல்ல ஜேசன், எழுந்து அவர வாழ்த்துங்க’ என்று விஜய் சேதுபதியே எடுத்துச் சொல்கிற அளவில்தான் அவருடைய முகபாவம் இருந்தது, கடைசியாக, இந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடிய வாசனுக்கு மூன்றாவதும், கடைசியுமான ’எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ்’ வழங்கப்பட்டது. வாசன் செய்த இந்த ஒரு காரியம், அவரை இறுதி மேடை வரை கொண்டு சென்றுவிடும் என்று தோன்றுகிறது. பார்ப்போம்.