ஒரு அணிக்கு அளவற்ற சாப்பாடு, இன்னொரு அணிக்கு சமைப்பதற்கே உரிமையில்லை எனும் சூழ்நிலை ஏற்பட்டால் அது பெரிய சிக்கலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்பது நாம் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். அதுவேதான் நடந்தது.
முனியம்மா கேமராவைப் பார்த்து, ’என்னால் பசி தாங்க முடியவில்லை பிக்பாஸ். நான் அவர்கள் வைத்திருப்பதை எடுத்துச் சாப்பிடப் போகிறேன். நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் பரவாயில்லை’ என்று புலம்பிக் கொண்டிருந்தார். இவர் எப்போதும் அப்படித்தான். போட்டிகளையோ விதிமுறைகளையோ மதிப்பதில்லை, அதற்குத் தண்டனை கொடுத்தால் அதையும் மதிப்பதில்லை. அதையும் மீறி ஜெயிலில் கொண்டு போய் போட்டால், ஏதோ தனக்கு மட்டும்தான் இப்படி நடப்பது போல உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார்.
இன்னொரு புறம் வாசன் முனியம்மாவைப் போல பேசிக் கொண்டிருக்காமல், பசி தாங்க முடியாமல் நேரே போய் நீல அணியினர் சமைத்துக் கொண்டிருந்தபோது அவர்கள் முன்னாலேயே அதை எடுத்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார். பக்கத்தில் வைத்திருந்த மைசூர் பாக் டப்பாவையும் எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்.
உண்மையில் நீல அணியினருக்கு இதை எப்படி எதிர்கொள்வது என்றே புரியவில்லை. ஒருபுறம் அவர்கள் சாப்பிடவில்லையே என்று இரக்கப்படுவதா, அல்லது இவன் இப்படிச் செய்கிறானே என்ன செய்வது என்றும் புரியவில்லை. ”இப்படி அடுத்தவர் உணவைத் திருடி சாப்பிடாதே. உழைச்சி சம்பாதிச்சி சாப்பிடணும்டா. வேண்டுமானால் விளையாட்டில் வெற்றி பெற்று இதை எல்லாம் வாங்கிக் கொள்” என்று சொல்லியபடி வாசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் வினோத்.
ஆனால், அதையெல்லாம் வாசன் கண்டு கொள்ளவில்லை. ”எங்களை சமைக்கக் கூடாது என்றுதான் பிக்பாஸ் சொல்லியிருக்கிறாரே தவிர, நீங்கள் சமைத்ததைச் சாப்பிடக்கூடாது என்று சொல்லவில்லை. நான் அப்படித்தான் செய்வேன். நீ உன்னால் ஆனதைச் செய்து கொள்” என்று சொல்லிவிட்டு சாப்பிடுவதில் குறியாக இருந்தார்.
வினோத் அதைத் ’திருட்டு திருட்டு’ என்று சொல்லி வாசனை வெறுப்பேற்ற முயற்சி செய்தார். வாசனை அது கொஞ்சம் கடுப்பேற்றினாலும் பொறுத்துக் கொண்டார். மற்றவர்களும் வளவளவென்று வாசனுக்கு எதிராகக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த குளறுபடிகளுக்கு நடுவே மேலும் சில சிவப்பு அணியினர் உள்ளே வந்து கைக்குக் கிடைத்ததை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார்கள்.
இப்படிச் சாப்பிட்டால் அதற்கு பிக்பாஸ் ஏதாவது தண்டனை கொடுப்பார் அல்லது வீக்கெண்டில் விஜய் சேதுபதியிடம் மாட்டிக்கொள்வார்கள், நன்றாக சாப்பிடட்டும் என்று நினைத்து, ”முடிந்தால் இதைச் சாப்பிடு, முடிந்தால் அதைச் சாப்பிடு” என்று சமைத்து வைத்த எல்லா பொருட்களையும் கொண்டுவந்து வாசனுக்கு முன்னால் நீட்டிக் கொண்டு இருந்தார் ஷாதிகா. தண்டனை கிடைக்கிறதோ இல்லையோ, ஒரு தடவை சாப்பிட்டாயிற்று, இனி கொஞ்சமாக சாப்பிட்டால் என்ன அதிகமாக சாப்பிட்டால் என்ன எல்லாம் ஒன்றுதான் என்று நினைத்துக் கொண்டு ஷாதிகா கொண்டு வந்து கொடுத்ததை எல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் வாசன்.
இதைப் பற்றி நீல அணியினர் ஒன்று கூடி தனியே விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது முகேஷ் சரியான ஒரு கருத்தைச் சொன்னார் ”இந்த விளையாட்டு இப்படித்தான் போகும். நாம் ஜாலியாக சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டும் அவர்கள் பட்டினி கிடந்து கொண்டும் இருந்தால் ஆட்டம் சுவாரசியமிருக்காது. அவர்கள் இப்படி எதையாவது விதிகளை உடைத்து மெல்ல மெல்ல முன்னேறி வரும் போதுதான் சுவாரஸ்யம் கிடைக்கும். அந்த வகையில் வாசன் செய்வது சரிதான். ஆனால், இதனால் அவர்களுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும். அதற்காக நாம் தந்திரமாக அவர்களை அடக்கி வைக்க முயன்றுகொண்டே இருப்போம்”. இதை அணியினர் ஓரளவுக்கு ஒப்புக்கொண்டனர்.
அதன் பிறகு இந்தப் பிரச்சினைகளைப் பற்றி ஒரு மீட்டிங் போட்டார்கள். அதில் நீல அணியினர் செய்யும் சேட்டைகளை எதிரணியின் தலைவர் பிருத்வி ஒழுங்காக எடுத்துச் சொல்லவும், அன்சார், ”உங்கள் கஷ்டம் புரிகிறது. அப்படியானால் எங்களுக்கான பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளை செய்து விட்டு, அதற்கு ஊதியமாக எங்களிடமிருந்து பழங்களையும் பொருட்களையும் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று சொன்னார். இது உண்மையில் ஒரு நல்ல ஐடியாதான். விளையாட்டுக்களில் தோற்றதால் இப்படிச் செய்து, சாப்பிடுவதற்கான ஒரு வழியை உருவாக்கிக் கொள்வது தவறில்லைதான். ஆனால், ”இது எங்களை அசிங்கப்படுத்துவது போல இருக்கிறது. இதை நாங்கள் செய்ய மாட்டோம்” என்று எல்லோரும் போட்டு உழப்பி விட்டு, அன்சாரை அழ வைத்தார்கள்.
கொஞ்ச நேரம் கழித்து நீல அணியினர் உட்காந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, தான் எந்த அணியில் இருக்கிறோம் என்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த ஜேசன், பாத்திரங்களை கழுவி வைத்துக் கொண்டிருந்தார். அப்போது பசியில் யாருடன் வம்பிழுக்கலாம் என்று சுற்றிக் கொண்டிருந்த முனியம்மா, ”ஏதோ மரியாதையோடு எதிரணிக்குப் போகிறேன் என்று சொன்னாயே, அங்கே எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அவர்களோடு சமமாக உட்கார்ந்து சாப்பிடாமல், அவர்களுக்கு இப்படி முறைவாசல் செய்து கொண்டிருக்கிறாயே. இப்படித்தான் நீ சாப்பிடணுமா? அப்ப நீதான் அவங்களுக்கு வேலைக்காரனா?” என்று கேட்டு விட்டார்.
முனியம்மா சொன்னது நிச்சயம் தவறுதான். வீட்டு வேலை செய்பவர்களை இழிவு செய்வதாகத்தான் இருந்தது. ஆனால், அது அவரது நோக்கமாக இருக்க வாய்ப்பில்லை. அதற்கு ஜேசன், ’என் பாட்டி ஒரு காலத்தில் வீட்டு வேலை செய்துதான் பிழைத்தார் என்பதால், அதைச் சொல்லிக் காண்பிப்பதுதான் முனியம்மாவின் நோக்கம்’ என்று தேவையில்லாத கற்பனைகளைச் சேர்த்துக் கொண்டு கடுமையாக கொந்தளித்தபடி, ’ஐம் அ மேன், ஐம் அ மேன்’ என்று மீண்டும் கத்தி வீட்டையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தார். அதற்காக ஜேசனை அடக்க வந்த வாசன், வினோத் போன்றோருடன் வாக்குவாதம் திசை திரும்பிக் கொண்டிருந்தது.
அடுத்து அவ்வப்போது சிலர் எதையோ எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், எதிரணியினர் முழுமையாக சாப்பிட முடியாமல் இருந்தது, நீல அணியினரை ரொம்பவே குழப்பத்திற்கு ஆளாக்கியது. வினோத் ஒரு பத்து நிமிடத்திற்கு மட்டும் அவர்களை கிச்சனுக்குள் அனுமதிக்கலாம் என்று முடிவு செய்து, கிச்சன் அனுமதிக்கான விளக்கை எரிய விட்டார். இது ஒரு ஹீரோ மொமெண்டாக இருக்கலாம் என்று அவர் நினைத்திருக்கலாம் அல்லது ஏதாவது சிக்கல் வந்தாலும் பார்த்துக் கொள்வோம், வேறு வழியில்லை என்றும் நினைத்திருக்கலாம். அதைப் பயன்படுத்தி சிவப்பு அணியிலிருந்து சிலர் ஓடி வந்து சமைத்தார்கள், சாப்பிடவும் ஆரம்பித்தார்கள். ஒரு சிலர் அதைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். இதற்குள் பிக்பாஸ் வினோத்தைக் கூப்பிட்டு, ”லைட்டை ஆன் செய்ய உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று கடுப்படித்துவிட்டு, இனி அதை வாபஸ் வாங்கும் உரிமை உங்களுக்கு இல்லை என்று சொல்லிவிட்டார். இதில் வினோத்துக்கு அதிர்ச்சிதான்.
அடுத்து இன்றைக்கான ஒரு டாஸ்க் வைத்தார்கள். சொட்டாங்கல், பம்பரம், பாட்டில் ஃபிளிப் என்று குட்டி விளையாட்டுகளைக் குழுவாகச் சேர்த்து விளையாட வைத்தார்கள். இதிலும் நீல அணியே வென்றதால், சிவப்பு அணியின் நிலைமை, சோதனை மேல் சோதனை என்பது போல ஆகிவிட்டது. இம்முறை மீண்டும் கிச்சனில் கை வைத்துவிடக்கூடாது என்று கவனமாக யோசித்து சிவப்பு அணியினர் அவர்களது ’பர்சனல் பொருட்களை’ பயன்படுத்தக்கூடாது என்ற தண்டனையைக் கொடுத்தார்கள். அதில் என்ன கூத்துகள் நடந்தன என்பதை நாளை பார்ப்போம்.