

சில வாரங்களுக்கு முன்னால், ’சொந்தக்கதை சோகக்கதை’ டாஸ்க் நடந்துகொண்டிருந்த போது நாமினேஷனில் இருந்த லட்சுமி, கிச்சன் குழுவில் போடப்பட்டிருந்தார். அப்போது லீடராக இருந்த ஷமாவிடம் போய், ”நான் நாமினேஷன் செய்யப்பட்டது கொஞ்சமும் நியாயமில்லாத விசயம். அதனால் எனக்குக் கிச்சனில் வேலை செய்ய விருப்பமில்லை. நான் வேலை செய்ய வேண்டுமானால், நீ எனக்கு ஃபேவராக நடந்து கொள்ள வேண்டும். இந்த வாரம் யாரையாவது காப்பாற்ற உனக்கு வாய்ப்புக் கிடைத்தால் முதல் ஆளாக நீ என்னைத்தான் காப்பாற்ற வேண்டும்” என்று கேட்டார். ’அது எப்படி உனக்கு மட்டும் செய்வது’ என்று முதலில் குழப்பத்தில் திரிந்த ஷமா, கடைசியில் வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டார்.
இந்த பேக்கரி டீலிங் வீட்டுக்குள் இருந்த வேறு யாருக்குமே தெரியாது. கடந்த வாரம் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த கரிஷ்மா, இந்த விஷயத்தை எல்லோரிடமும் போட்டுக்கொடுத்து விட்டார். இதன் மூலம் ’ஷமா அதிகாரத் துஷ்பிரயோகம் பண்ணி விட்டார், இது அப்பட்டமான துரோகம்’ என்று எல்லா போட்டியாளர்களும் அவரை போட்டு கும்மியெடுத்து விட்டார்கள். முதலில் இது ஒன்றும் அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை. அப்படியே அது ஒரு தவறு என்றாலும், அதில் லட்சுமிக்கும் சம பங்கு இருக்கத்தான் செய்கிறது. இன்றைக்கு வந்ததுமே விஜய் சேதுபதி, இந்த இடியாப்பச் சிக்கல் நிறைந்த பஞ்சாயத்தைத்தான் கையில் எடுத்துக் கொண்டார்.
முதலில் கரிஷ்மாவை எழுப்பி, ”என்னம்மா நீங்க சொன்ன மாதிரியே கொளுத்திப் போட்டுட்டீங்க போலிருக்கு. என்னாச்சுனு சொல்லுங்க?” என்று கேட்டார். அதாவது இந்தக் கதையை ஆதியோடு அந்தமாக விளக்கி, என்ன நடந்தது, யார் என்னென்ன சொன்னார்கள் என்று தெளிவாகச் சொல்லி நான்கு பேரைக் கோத்துவிடுவார், அதைத் தொடர்ந்து மற்றவர்களிடம் கேள்வி கேட்கலாம் என்பது விஜய் சேதுபதியின் நினைப்பு. ஆனால், ’நான் ஃபிளவர் இல்லை ஃபயர்’ என்று மேடையில் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போன கரிஷ்மா, இந்த ஒரு பஞ்சாயத்தைக் கிளப்பிவிட்டது தவிர, வேறு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. வேறு யாரைப் பற்றியும், எதைப்பற்றியும் கருத்துக்கூட சொல்வதில்லை. இப்போது சேதுபதி கேட்டால் மட்டும் சொல்லிவிடவாப் போகிறார்?
”ஆமா சார், அவங்க டீல் போட்டதைச் எல்லோர்கிட்டயும் சொல்லிட்டேன். அவ்வளவுதான்” என்று ஊர், உலகத்துக்கே தெரிந்த விசயத்தை மூடர்கூடம் பாணியில் சொல்லிவிட்டு அமைதியாக நின்றபடி விசேவைக் கடுப்படித்தார். கடுப்பான விசே அவரை உட்காரச்சொல்லிவிட்டு, விக்னேஷை எழுப்பி ’உங்களுக்கு என்ன புரிஞ்சதுனு சொல்லுங்க’ என்றார். ’எவிக்சன் போர்டில் என் பெயரை வைக்கக்கூடாதுனு டீல் போட்டிருக்கிறார்’ என்று அவரும் ஒரே வாக்கியத்தில் பதில் சொல்லி அவர் பங்குக்குக் கடுப்படித்தார்.
’இவங்களோட மாரடிக்கிறதுக்கு, பேசாம ஒரு போஜ்புரி படத்துக்கு ஒத்துக்கிட்டு கால்ஷீட்டாவது கொடுத்திருக்கலாம் போலிருக்கிறதே’ என்ற விசேவின் மைண்ட் வாய்ஸ் நமக்குத் தெளிவாகக் கேட்டது.
அதைத் தொடர்ந்து அந்த சம்பவத்தில், ஷமாவும் லட்சுமியும் பேசிக்கொண்ட விஷயங்கள் அனைத்தையும் தொகுத்து ஒரு குறும்படமாகப் போட்டு காண்பித்தார் விசே. அதைப் பார்த்ததும் மற்ற அனைவரும், ’ஷமா மீது நாம் அவ்வளவு தூரம் கோபப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும், அதே நேரத்தில் ஷமா செய்ததில் தவறு இருக்கத்தானே செய்கிறது?’ என்பது போலவும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஷமா செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று நிரூபிப்பதுதான் விஜய் சேதுபதியின் இப்போதைய நோக்கமாக இருந்தது. அந்த வகையில் இந்தப் பஞ்சாயத்தே அவசியமில்லை என்பதுதான் நமது கருத்து.
இதுபோல ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஒவ்வொருவர் மீதும், அவர்கள் காரணமாக இருந்தாலும் அல்லது இல்லாமல் போனாலுமே கூட சில முத்திரைகள் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் இதையுமே அப்படியே விட்டிருக்கலாம். இருப்பினும், ஷமா தன் மீது விழுந்த கறை துடைக்கப்பட்டு விட்டது என்று ஆனந்தக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். லட்சுமி தாம் எதுவும் தவறும் செய்து விட்டோமோ என்ற எந்த சந்தேகமும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். எழுந்து போய் ஷமாவையே கட்டியணைத்து ஆறுதல் வேறு சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்தக் குறும்படத்துக்கு விமர்சனமாக, ஷாதிகா எழுந்து, ’ஷமா செய்தது அன்ஃபேர்’ என்றார். சாந்தினி எழுந்து ’ஷமா இதை எதிரணியிரடமாவது சொல்லியிருக்கலாம்’ என்றார். ராகவ் எழுந்து, ’இதில் ஷமாவின் சுயநலம் தெரிகிற மாதிரி இருக்குது’ என்றார். ’நான் இவ்வளவு தூரம் சொன்னதுக்கப்புறமும், குறும்படம் போட்டுக் காண்பித்த பின்னாடியும் ஒத்துக்கொள்ள மாட்டீங்களா, இப்பப் பாருங்க...’ எனும் மைண்ட் வாய்ஸுடன், ”அதெப்படி அன்ஃபேர் ஆகும்? அதெதுக்கு லீடர் சொல்லணும்? அதெப்படி சுயநலமாகும், அதுவொரு பொதுநலம்!” என்று எடுத்துச் சொல்லி அனைவரது வாயிலும் மண்ணள்ளிப்போட்டு உட்கார வைத்தார்.
அடுத்து அக்சிதாவின் லீடர்ஷிப் எப்படி இருந்தது என்ற, வழக்கமான பொழுதுபோக்குக் கேள்வியைக் கேட்டு கொஞ்ச நேரம் பொழுது போக்கினார். கதவு திறந்து விடுகிற பனிஷ்மெண்ட் டாஸ்க்கைச் செய்யாமல் சுற்றிக்கொண்டிருந்த கரிஷ்மாவுக்கு ஒரு கொட்டு வைத்தார். கிச்சனில் நடக்கும் ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் சீனி போன்ற பெரிய பதுக்கல் அநியாயங்களை எதிர்த்துக் கேள்வி கேட்டார். கடைசியில் இந்த வாரம் பாட்டில் டாஸ்க்கில் எல்லோரும் சிறப்பாக விளையாடியதால் எவிக்ஷன் கிடையாது என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். ஒவ்வொரு சீசனில் ஒரு வாரம் மட்டும் எவிக்ஷன் இருக்காது என்பது ஊரறிந்த விசயம்தான். அதற்கு இப்படி ஒரு காரணம் யார் கேட்டது?
அடுத்து, இந்த வாரம் சிறப்பாக விளையாண்டார் என்று காரணம் சொல்லி இரண்டாவது எவிக்ஷன் ஃப்ரீ பாஸை பிக்பாஸ், ஜேசனுக்குக் கொடுத்தார். ஏதோ ஃபைனல் கப்பே கிடைத்துவிட்டது போல எல்லோரும் அவருக்கு வாழ்த்துச் சொல்ல, அவரும் புளகாங்கிதம் அடைந்துகொண்டிருந்தார்.