ஜேசன், ’சிவப்பு அணியின் தலைவர் அவிநாஷின் நடவடிக்கைகள் தனக்குப் பிடிக்கவில்லை. அதனால், நான் நீல அணிக்குப் போகிறேன்’ என்று சீருடையைக் கழற்றிப் போட்டுவிட்டுக் கிளம்பினார். இந்த விளையாட்டில் இப்படி அணிமாற்றம் செய்யலாமா என்பதே தெரியவில்லை. இவர்களாக ஏதாவது முடிவு செய்துகொண்டு எப்படியெப்படியோ விளையாடுகிறார்கள். புகை பிடிக்கும் அறைக்குள் நடந்த டீலிங்கின்படி அவிநாஷ், வாசன், ஜேசன் மூவரும் பேசி வைத்துக் கொண்டபடிதான் இந்த சண்டை நடக்கிறதா? அல்லது அந்த டீலிங்கை மறந்துவிட்டு நிஜமாகவே சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்களா என்பதும் நமக்கு புரியவில்லை. அந்த அளவுக்கு அவினாஷும், ஜேசனும் எகிறிக் கொண்டார்கள். அவினாஷ் அந்த டீலிங்கைக்கூட குறிப்பிட்டுப் பேசினார். அதனால், நமக்கும் இது என்னவோ நிஜமான சண்டை மாதிரிதான் தெரிகிறது. வார இறுதியில் விசே வந்தால்தான் உண்மை வெளிப்படும். அப்போதும்கூட விசே பாராட்டினால், இது நடிப்புச் சண்டை என்றும், திட்டினால் இது நிஜமான சண்டைதான் என்று ஜேசன் நேக்காக உருட்டிவிடவும் வாய்ப்பிருக்கிறது.
ஜேசன் நீல அணிக்கு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு வந்த போது, தன்யா, லட்சுமி போன்ற ஒரு சிலர் ’இவர் இங்கே வருவதில் ஏதாவது உள்குத்து இருக்கப் போகிறது’ என்று சந்தேகப்பட்டார்கள். ஆனால், அன்சார் மற்றும் வினோத் இருவரும் ஜேசனுக்காகக் கேரண்டி கையெழுத்துப் போட்டுக் குழுவில் சேர்த்துக் கொண்டார்கள்.
லக்சுரி பொருட்களை வென்ற நீல அணியினர் நேற்றிலிருந்து எக்கச்சக்கமான சிக்கன், பிரான்ஸ் என்று சமைத்து, சிவப்பு அணியினரை வெறுப்பேற்றும்படி அவர்கள் முன்னாலேயே வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இது பார்ப்பதற்கு கொஞ்சமும் சகிக்கவில்லை. குறிப்பாக ஷமா, தன்யா ஆகியோர் இந்த வேலையை ஆர்வமாகச் செய்துகொண்டிருந்தார்கள். இவர்கள்தான் இப்படி என்றால் எதிரணியைச் சேர்ந்த முனியம்மா, இவர்கள் சாப்பிடும் போது பக்கத்திலேயே வந்து பார்த்துக் கொண்டிருந்தது இன்னும் கொடுமை!
இந்த அழகில், முந்திரி, பாதாம் பிஸ்தாவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த நீல அணிப் பெண்கள் முன்னால் போய் உட்கார்ந்த முனியம்மா, அவர்களைப் பார்த்து ’என்னை மாதிரி ஆள் ஆசைப்பட்டால் பரவாயில்லை, நீங்கள் எல்லோரும் செலிபிரிட்டிதானே... பிறகு ஏன் இப்படிக் காணாததைக் கண்டது போல் பறக்கிறீர்கள்?’ என்று கேலி செய்தார். அதில் அவர்களை விளையாட்டாக வெறுப்பேற்றும் நோக்கம் இருந்ததாகத் தெரியவில்லை, மாறாக அந்த உணவு தமக்குக் கிடைக்கவில்லையே என்ற வெறுப்புதான் தெரிந்தது. முனியம்மாவின் இந்தக் கேள்விக்கு அந்த பெண்களும் பதில் சொல்லத் தெரியாமல் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தார்கள். உண்மையில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், செலிபிரிட்டியாக இருந்தாலும் நான்கு நாட்கள் பட்டினி போட்டு வைத்திருந்தால், பழங்கஞ்சியைக்கூட ஆவலாக ஓடி வந்துதான் சாப்பிடுவார்கள். கிட்டத்தட்ட ஆறேழு வாரங்களாக சாப்பாட்டுக்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இவர்கள் இப்படி ஏதாவது கிடைத்தால் ஆர்வமாக சாப்பிடுவது என்பது இயல்புதான்.
அதோடு விடாத முனியம்மா அடுத்து கிச்சனில் போய் நின்று கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த நெய் டப்பாக்களை தட்டி விட்டு தனது வெறுப்பை வெளிப்படுத்தினார். அதை எதிர் அணியினர் மட்டுமின்றி, அவருடைய சிவப்பு அணியினர் கூட தடுத்து அப்படிச் செய்யக்கூடாது என்று சொல்லியும், மீண்டும் மீண்டும் அதையே செய்து எல்லோரையும் கடுப்பேற்றிக் கொண்டிருந்தார். ’உங்கள் அணியில் இருக்கும் ஒருவரை உங்களால் கட்டுப்படுத்த முடியாதா? நீங்கள் எல்லாம் என்ன தலைவர்?’ என்று நீல அணியின் தலைவர் வினோத், சிவப்பு அணித் தலைவரான அவினாஷைக் கேட்க, அவர் ’உங்கள் முன்னால்தானே இப்படிக் கத்திக் கொண்டிருக்கிறேன். நான் அல்ல, யார் சொன்னாலும் அவர் எதையும் கேட்க மாட்டார்’ என்று எகிறிக்கொண்டு போக, அவர்களுக்கிடையே ஒரு சண்டை தொடங்கியது. முனியம்மாவுக்கு அதில் ஒரு சந்தோஷம்.
முனியம்மாவைப் பார்க்கும் போது வனிதா, மீரா மிதுன், சாண்ட்ரா போன்ற டாக்சிக் பிளேயர்கள் எல்லாம் ஒரு தடவை நம் மனக்கண் முன்னால் வந்து போகிறார்கள்.
அடுத்து, ’இன்றைய விளையாட்டை நடத்தவேண்டாமா? எனக்கு இரண்டு அணியிலும் 8 பேர் இருந்தாக வேண்டும்’ என்றார் பிக்பாஸ். ஜேசனுக்குப் பதிலாக நீல அணியிலிருந்து யாரும் சிவப்பு அணிக்குப் போகத் தயாராக இல்லை என்பதால், மீண்டும் ஜேசனையே அனுப்பி வைத்தார்கள். அவர் அவரது பங்குக்கு, ’தலைவராக அவினாஷுக்குப் பதிலாக, பிருத்வியை தலைவராக்கினால் வருகிறேன்’ என்று கண்டிஷன் போட்டார். இந்த மாதிரி சமயங்களில்தான் தலைவராக இருப்பவர் ஹீரோயிசத்தைக் காண்பிக்க முடியும். ஆனால், அந்த யோசனை இங்கே யாருக்கும் வருவதில்லை. ஜேசனின் கண்டிஷனை ஏற்றுக்கொண்டு அவினாஷ் பதவி விலகினார்.
மீண்டும் ஒரு குழு விளையாட்டு நடத்தப்பட்டது. ஒரு சிறிய ரேம்ப்பில் ஒரு குடம் தண்ணீரை எடுத்துக்கொண்டு அடுத்த முனைக்குப் போக வேண்டும். அதை மற்றவர்கள் இடைஞ்சல் செய்ய வேண்டும். இதிலும் நீல அணி வென்றது. அதனால் அவர்கள், சிவப்பு அணியின் சமைக்கும் உரிமையைத் தடை செய்தார்கள்.
இனி அவர்கள் பச்சைக் காய்கறிகள்தான் தின்ன வேண்டும் என்று பிக்பாஸ் சொல்ல, அது எப்படி, எவ்வளவு நேரம் என்று தெரியாமல் சிவப்பு அணி விழி பிதுங்கிக் கொண்டிருந்தது. ஏற்கனவே அடிப்படை உணவு மட்டும்தான். இதில், அதையும் சமைக்க முடியாது என்று சொல்வது நமக்குச் சரியாகப் படவில்லை. ஓர் அணியின் பசியோடு விளையாடுவது சரியல்ல. ஆனாலும் ஜேசன் மட்டும் நான் சிவப்பு அணியில் இருந்தாலும், நான் மனதார நீல அணிதான் என்று சொல்லிக்கொண்டு அவர்களுடன் போய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
வாசன், ’நாம்தானே சமைக்கக் கூடாது, அவர்கள் சமைத்ததைப் பிடுங்கியோ, திருடியோ சாப்பிடலாம் அல்லவா?’ என்று மற்றவர்களிடம் சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார். அதன் பின்னர் என்ன குளறுபடிகளைச் செய்து வைத்தார்கள் என்பதை நாளைதான் பார்க்க வேண்டும்!