விஜய் சேதுபதி வந்ததும் வழக்கம் போல வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காண்பித்தார். வழக்கமாக, பத்து நிமிடங்கள் அவை காண்பிக்கப்பட்டு, நிகழ்ச்சி ஹோஸ்ட்டின் கைகளுக்கு மாறும். ஆனால், இன்று நிகழ்ச்சியின் முக்கால் பங்கை அந்த நிகழ்வுகளே பிடித்துக் கொண்டன. அந்த அளவுக்கு சாண்ட்ரா காரிலிருந்து வெளியே தள்ளப்பட்ட பிறகு நடந்த விவாதங்களும், சண்டைகளும், போட்டியாளர்களின் நடவடிக்கைகளும் இருந்தன.
முதலில் காரிலிருந்து விளையாட்டை விட்டுவிட்டு இறங்கிய சபரி மற்றும் வினோத், விக்ரமோடு இணைந்து கொண்டு, சாண்ட்ராவைத் தூக்கிப் போய் பிக்பாஸ் குழுவினரிடம் சிகிச்சைக்காக ஒப்படைத்தனர். சாண்ட்ராவைக் காரில் இருந்து வெளியே தள்ளியதைக் கூட விளையாட்டின் ஒரு அங்கமாக நம்மால் பார்க்க முடியும். இப்படித்தான் சில டாஸ்க்குகள் விளையாடப்படுகின்றன. ஆனால், அவரைத் தள்ளி விடுவதற்கு முன்பு கமரு, பாருவோடு சேர்ந்து கொண்டு வார்த்தைகளால் அவரை காயப்படுத்தியதுதான் இங்கே நடந்த பெரிய தவறு. போலவே, அவரைத் தள்ளிவிட்டதற்குப் பிறகும், அவரது தொடையில் கார் கதவு சிக்கிக் கொண்டிருந்த நிலையில் பாரு கொஞ்சமும் அதைப்பற்றி சிந்திக்காமல் கார் கதவை இழுத்துக் கொண்டிருந்தார். இந்த இரண்டு காரணங்கள்தான் நம்மை மிகவும் உறுத்திக் கொண்டிருந்தன. காருக்குள் இருந்தபோது சாண்ட்ரா சில வார்த்தைகளை விட்டாலும் கூட அதை எல்லாம் தாண்டி எல்லை மீறிய கமருவின் வார்த்தைகள் ஒரு ’Verbal Abuse’ ஆக இருந்தன என்பதுதான் உண்மை. பார்வையாளர்களான நமக்கு இருந்த இதே எண்ணம்தான் உடனிருந்த மற்ற போட்டியாளர்களுக்கும் இருந்தது என்பதை உணர முடிந்தது.
ஆனால், இதைப் பாரு கொஞ்சமும் உணரவே இல்லை, உணரவும் மாட்டார். கொஞ்சம் எடுத்துச் சொன்னால், கமரு கூட அதைப் புரிந்து கொண்டு உடனடியாக இறங்கி வந்திருப்பார். ஆனால், அவரது முன்கோபம் ஒருபுறம் இருக்க, பாருவும் சேர்ந்து அவரைக் கொஞ்சமும் சிந்திக்க விடாமல் தூண்டி விட்டுக் கொண்டே இருந்ததில் எல்லை மீறிப் போய்விட்டார். பாருவின் கைகளில் இருந்த கத்தி என்பது போன்ற ஆபத்தான நிலையில்தான் கமரு இருந்தார். இத்தனையையும் செய்து விட்டு, ஒரு பெண் நம்மால், ‘பேனிக் அட்டாக்’குக்கு ஆளாகி சிகிச்சைக்குப் போயிருக்கிறாரே எனும் குற்றவுணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல், இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததுதான் கொடுமை!
‘தவறாகவே இருந்தாலும் ஒரு பெண்ணுக்குப் பெண் தள்ளி விடுகிறார் என்ற அளவிலாவது போய் இருக்கும். ஆனால், பார்வதியோடு சேர்ந்து கொண்டு இவனும் முழு பலத்தைப் பயன்படுத்தி அவரை மிதித்து வெளியே தள்ளுகிறான்டா, அதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை’ என்று வினோத் ஒரு புறம் புலம்பிக் கொண்டிருந்தார்.
இன்னொரு புறம் விக்ரம் வெளியே போய், ’இவ்வளவு தூரம் ஆன பிறகு அவர்களை ஜெயிக்க விடவே கூடாது, மிச்சமிருக்கும் அரோரா, திவ்யா, சுபி ஆகிய மூன்று பேரும் காரிலிருந்து எக்காரணம் கொண்டும் இறங்கி விடாதீர்கள்’ என்று ஆக்ரோஷமாக சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது கமரு குறுக்கிட்டு விக்ரமிடமும், சபரியிடமும் வாயைக் கொடுக்க கோபத்தில் விக்ரம் சென்னையின் பிரபலமான கெட்ட வார்த்தையை பயன்படுத்தினார். அதைக் கேட்ட கமரு இன்னும் ஆத்திரமாகி ’வெளியே வந்தால் உன் வாயை உடைத்து விடுவேன்’ என்று மிரட்ட, பதிலுக்கு விக்ரமும் ’வாடா, நிகழ்ச்சியை விட்டு இரண்டு பேரும் வெளியே போனாலும் பரவாயில்லை. இறங்கி வாடா, வந்து கை வைத்துப் பாரடா’ என்று மல்லுக்கு நின்று கொண்டிருந்தார்.
சபரி, ‘அவள் பேச்சைக் கேட்டு இப்படி உன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறாயே, இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தால் போதும், அவள் சாண்ட்ராவைத் தள்ளி விட்டது போலவே உன்னையும் தள்ளி விட்டுவிடுவாள். அப்படிப்பட்டவள்தான் பாரு’ என்று கொந்தளித்துக் கொண்டிருந்தார். அதுவும் சரிதான்!
இப்போது இப்படிக் கொந்தளிக்கும் இவர்கள், சம்பவம் நடக்கும் போது இந்த அளவுக்குக் கேட்காமல் இருந்தது ஏமாற்றம்தான். இதை நாம் நேற்றே குறிப்பிட்டிருந்தோம். விஜய் சேதுபதியும் கூட இதைக் குறிப்பிட்டுக் கேட்டார்.
அவ்வளவு நேரம் சிரித்துக்கொண்டிருந்த பாருவுக்கு, அய்யய்யோ, பெரிய சம்பவம் ஏதோ செய்துவிட்டோம் போலிருக்கிறது, எல்லாமே நமக்கு எதிராகப் போய்க் கொண்டிருக்கிறதே, இந்த கமரு எனும் மழுமட்டையை வைத்துக் கொண்டு நாம் தப்பிப்பது சிரமமாகி விடுமே, என்ற பயம் மெல்ல மெல்ல வரத் தொடங்கியிருந்தது. அதனால், காருக்குள் வைத்து கமருவிடம் சொல்வதைப் போல பார்வையாளர்களான நமக்கு விபூதி அடிக்கும் முயற்சியை ஆரம்பித்தார். முகத்தை சாந்தமாக வைத்துக்கொண்டு, ‘நாம் இருவரும், நம் மனதார இதுவரை யாரையாவது தவறாக ஒரு வார்த்தை பேசி இருப்போமா பேபி? அவள் எப்படிப்பட்ட தரக்குறைவான ‘காமம்’ என்ற வார்த்தையை வைத்து நம்மை பிராண்ட் செய்யப்பார்த்தாள்? அது எவ்வளவு பெரிய தவறு? அதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதானே இருப்பார்கள்? நேற்று கில்லர் காயின் டாஸ்க்கில், எவ்வளவு முரட்டுத்தனமாக நம்மைப் போட்டு அமுக்கி ஒரு விளையாட்டு விளையாடினார்கள்? அதைப் போன்ற ஸ்ட்ராடஜியைத்தானே நாம் செய்தோம்? இதில் என்ன தவறு இருக்கிறது? நீ கவலைப்படாதே பேபி’ என்று பாயிண்டுகளை அடுக்கிக் கொண்டே இருந்தார். கமருவும் ஒரு பேக்கு போல, ’ஆமாம் பேபி’ என்று மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தார். பாருவைப் போன்ற ஒரு வன்மவாதியை நாம் எங்குமே பார்க்க முடியாது என்றால், கமருவைப் போன்ற ஒரு மழுமட்டையையும் நாம் எங்குமே பார்க்க முடியாது.
பொதுவாக பெண்கள் சலிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள்தான் என்றாலும், முதலில் சில மணி நேரங்கள் சாண்ட்ராவுடன் மல்லுக் கட்டியது, அதன் பிறகு மணிக்கணக்கில் கமருவிடம் பேசிக் கொண்டிருந்தது, அதன் பிறகு திவ்யாவிடமும், அரோராவிடமும் மணிக்கணக்கில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தது போன்றவற்றையெல்லாம் பார்த்தால், இந்தப் பாருவின் எனர்ஜியைப் பார்த்து, வாயைப் பார்த்து நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை.
அடுத்து, நேரமாக நேரமாக பாருவும், கமருவும் ஒவ்வொருவராக தூங்கி விழுந்ததால் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின் இதுவரை எடுத்த மதிப்பெண்களை கணக்கில் கொண்டு திவ்யாவும், அரோராவும் வெளியேற, இந்த டாஸ்க்கில் சுபி வென்றார். இத்துடன் டிக்கெட் டு ஃபினாலே தொடர் டாஸ்க்குகள் நிறைவடைந்தன. இதில் மொத்தமாக அதிக மதிப்பெண் பெற்ற வகையில் அரோரா ஃபினாலே டிக்கெட்டை வென்றார்!
அதன் பிறகுதான் நடிப்பு அரக்கி சாண்ட்ராவின் சம்பவம் ஒன்று நடந்தது. பாரு, கமருவின் வன்ம விளையாட்டை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல நான் செய்கிறேன் பார் ஒரு விக்டிம் கார்டு விளையாட்டு என்று இறங்கி ஆடினார் சாண்ட்ரா. எங்கோ கிச்சனில் உட்கார்ந்து, சாப்பிட்டுக்கொண்டிருந்த கமருவைப் பார்த்து, பெட்ரூமில் படுத்திருந்த சாண்ட்ரா, பேய்ப் படத்தில் வரும் காட்சிகளைப் போல, அலறியடித்து, ஓலமிட்டு, போர்வையை எடுத்து வீசி, கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொள்வது போல ஒரு கோர தாண்டவம் ஆடிவிட்டார். காரிலிருந்து தள்ளப்பட்டு மயக்கம் வந்தததையெல்லாம் ‘பேனிக் அட்டாக்’ என்று நாம் ஒப்புக்கொள்ளலாம். ஆனால், இந்த ஓவராக்டிங்கை எல்லாம் பேனிக் அட்டாக் என்று சொல்லி விஜய் சேதுபதி, முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் ஒளித்து வைக்க முயற்சிக்கிறார். அதெல்லாம் டூ மச்! ஒருவேளை நிஜமாகவே அப்படி ஒரு நிலை அவருக்கு இருக்குமானால், உடனடியாக அவரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றி சிகிச்சை அளிப்பது மட்டுமே சரியான முடிவாக இருக்க முடியும்!
கடைசியாக சாண்ட்ரா, பாரு, கமருவைத் தவிர மற்ற அனைவரிடமும் நடந்த சம்பவம் பற்றியக் கருத்துக்களைக் கேட்டார். ஒவ்வொருவரும் அவரவர் கருத்துக்களைச் சொன்னார்கள். பின்பு பாரு, கமருவிடம் அதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா என்று கேட்டார். அவர்களால், எந்த பதிலைச் சொல்ல முடியும்? இருவருக்கும் ரெட் கார்டைக் காட்டி வெளியேற்றிவிட்டார். வழக்கமான செண்ட் ஆஃப், வாழ்த்து, மேடை மரியாதை எதுவுமின்றி இருவரும் வெளியேற்றப்பட்டார்கள்.
நிச்சயமாக இவர்கள் இருவரும் இப்படிப்பட்ட நிலைமைக்கு தகுதியானவர்கள்தான், அதில் சந்தேகமில்லை. ஆனால், இவர்களைத் தகுந்த நேரத்தில், தகுந்தபடி எச்சரிக்கை தந்து, எல்லோ கார்டுகளை காண்பித்து சரியாக வழிகாட்டியிருக்க முடியும். அப்படிச் செய்தும் பயனில்லை என்ற நிலை ஏற்பட்டால், வழக்கப்படியான வீக்கென்ட் எபிசோட்களிலேயே மரியாதையோடு வெளியேற்றவும் செய்திருக்கலாம். ஒரு கட்டத்தில் இவர்கள் இப்படிச் சிக்கல்களில் மாட்டிக் கொள்வார்கள் என்று நம்மாலேயே கணிக்க முடியும் போது, இந்த பிக்பாஸ் இயக்குநர் குழுவால் அதைக் கணிக்க முடியாமல் இருந்திக்காது. இதிலிருந்தெல்லாம் தப்பிக்கத்தான் மக்கள் ஓட்டு எனும் தந்திரத்தைக் கையில் வைத்திருக்கிறார்கள்.
இந்த இடத்தில்தான், நாம் பிக்பாஸ் விளையாட்டு பற்றி யோசிக்க வேண்டிய உள்ளது. கண்டெண்ட் பசி! இத்தனை வாரங்கள் இவர்களை வைத்து கண்டெண்ட் தேற்றியது டிஆர்பிக்கு என்றால், ஓடவிட்டு பின்மண்டையில் அடிப்பதைப் போல இத்தனை வாரங்களாக இத்தனைக் கடுமையாக அவர்கள் நடந்துகொள்ள வழியமைத்துக் கொடுத்துவிட்டு, இந்த வாரம் பழியனைத்தையும் அவர்கள் மீது போட்டு, இந்தியாவிலேயே முதல் முறையாக இரட்டை ரெட் கார்டுகள் கொடுக்கப்படுகிறது என்ற புதிய கண்டெண்டையும் டிஆர்பிக்காக உருவாக்கிக் கொண்டுவிட்டார்கள். இதன் மூலம் வெற்றி போட்டியாளர்களுக்கோ, பார்வையாளர்களுக்கோ அல்ல, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத்தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது!