ஒரு நண்பரை எதிரே உட்கார வைத்துக் கொண்டு, ’என்னைக் கொஞ்சம் புகழ்ந்து பேசேன், கேட்போம்’ என்று கேட்பது எப்படிப்பட்ட நார்ஸிஸ்டிக் வேலையோ, அதை விட, ’நம் இருவருக்கும் பொதுவான மற்ற நண்பர்களின் லட்சணத்தை கொஞ்சம் இகழ்ந்து சொல்லேன், கேட்டு மகிழ்வோம்’ என்று கேட்பது அதனிலும் மேலான கேவலமான செயல். இந்த மாதிரி வேலையையெல்லாம் பாருவைத் தவிர வேறு யாரால் செய்ய முடியும்?
கமருவின் தோளில், ஒரு சோபாவில் சாய்வது போல வசதியாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு எதிரே வினோத்தை உட்கார வைத்து, இப்படி ஒரு விளையாட்டை நடத்திக்கொண்டிருந்தார் பாரு.
‘இங்கே யாரெல்லாம் உண்மையாக இருக்கிறார்கள்? யாரெல்லாம் எவ்வளவு பர்சண்டேஜ் போலியாக இருக்கிறார்கள்?’ என்ற பாருவின் கேள்விக்கு, இந்த வினோத்தும் அறிவு கெட்டத்தனமாக சின்சியராக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒவ்வொருவருக்கும், 30%, 60%, 70% என போலித்தனத்தை அளந்து வினோத் சொல்லச்சொல்ல பாருவுக்கு உற்சாகத்தைப் பார்க்க வேண்டுமே! அதைவிட ட்விஸ்ட் ஒன்று நடந்தது.. ஒரு சிலருக்கு 50% போலித்தனம் என்று சொன்னபோது பாரு கெக்கபிக்கே என சிரித்து "சரியா சொல்ற.. சரியா சொல்ற... நானும் நெனைச்சேன்" என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். அரோரா 50% போலி என்றபோது எக்காளமிட்டுச் சிரித்து "கரெக்டா சொல்றான்" என்று குதூகலித்தார். அடுத்ததே "பாருவும் 50-50" என்றார் வினோத். என்னடா இப்டி சொல்றான் என்றார் பாரு.. தட் ரத்தம் - தக்காளிச்சட்னி மொமண்ட்.
அடுத்து, ஃபினாலே டிக்கெட்டுக்கான 7வது டாஸ்க்காக குவிஸ் போன்ற பொது அறிவுப் போட்டியை நடத்தினார் பிக்பாஸ்! பொது அறிவுக்கும், இந்த நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை, ஃபார்மாலிடிக்காக இப்படி ஒரு குட்டி டாஸ்க்கையும், ஒவ்வொரு சீசனிலும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த போட்டியில் அரோரா வெற்றி பெற்றார். நடுவில் வந்த, ’அதிகபட்ச மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு எது?’ என்ற கேள்விக்கு ’தாய்லாந்து’ என வினோத் சொன்ன பதிலைக் கேட்டு அத்தனை பேரும் சிரித்துக் கொண்டிருந்தனர். பிக்பாஸ் குரலிலும் கூட இப்படி ஒரு சிரிப்பை நாம் இதுவரை பார்த்தது போல நினைவில்லை.
அடுத்து 8வதும், கடைசியுமான டாஸ்க் வந்தது. ஒரு சின்னக் காருக்குள் போட்டியாளர்கள் ஒன்பது பேரும் அடைந்துகொள்ள வேண்டும். கடைசி வரை வெளியேறாமல் இருப்பவர் வெற்றியாளர். சாண்ட்ரா, பாரு, வினோத் ஆகிய மூவரும் சரியான இடத்தைப் பிடித்துக் கொண்டு காருக்குள் செட்டிலாகிவிட, மற்ற அனைவரும் ஒருவர் மேல் ஒருவர் நெருக்கியடித்துக் கொண்டு சமாளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் பிரச்சினை வேறு ரூபத்தில் வந்தது.
சாண்ட்ராவின் அருகே பாருவும், கமருவும் நெருக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். ஏற்கனவே, சாண்ட்ராவின் மீது பழைய வன்மத்தை நேற்றிலிருந்து காட்டத் தொடங்கியிருந்த கமரு, இந்த இடத்திலும் அந்தப் பேச்சை ஆரம்பித்தார் அவர். அவருக்கு ஒத்து ஊதுவதற்கு பக்கத்திலேயே பாருவும் இருந்ததால் வசதியாகப் போய்விட்டது. எடுத்த எடுப்பிலேயே,
’சாண்ட்ராவாம், சாண்ட்ரா! சரியான Scamdra!’ என்று நேரடியாகவே சொல்லிவிட, நடிப்பு அரக்கி சாண்ட்ராவால் அதைக் கேட்டுவிட்டு எப்படி வாயைப் பொத்திக்கொண்டு இருக்க முடியும்? பதிலுக்கு,
‘நீயும் கமருதீன் அல்ல, காமருதீன்!’
என்று சொன்னார். கமருவும், பாருவும் உள்ளே செய்துகொண்டிருக்கும் வேலைகளைப் பார்த்தால் நமக்கேக்கூட இது காதலா, அல்லது வேறு மாதிரி உணர்வா என்று சந்தேகப்படுமளவுக்குதான் இருக்கிறது. அந்த வகையிலும், பெயருக்கு ரைமிங்காக இருக்கும் வகையிலும் அதுவொன்றும் பெரிய அளவில் நமக்குத் தவறாகத் தெரியவில்லை. ஆனால், அதைப் பிடித்துக்கொண்டு கமருதீன் ஆடிய வன்ம விளையாட்டுதான் இதுவரை இல்லாத அளவுக்கு எல்லை மீறிப் போய்விட்டது.
‘இவள் எப்படி என்னைக் காமருதீன் என்று சொல்லலாம்? இவள் வந்து பார்த்தாளா? இவள் காமம் செய்யாமலா குழந்தை பெற்றுக் கொண்டாள்? வாயில் அசிங்கம் அசிங்கமாக கேட்டுவிடுவேன். ஆளையும், மூஞ்சியையும் பாரேன், செருப்புப் பிய்ந்துவிடும், செருப்பைக் கழற்றி அடிப்பேன்! மூஞ்சியில் காறித்துப்பி விடுவேன். வாயை மூடுடி!’
என்று வயது வித்தியாசம், நாகரீகம் எதையும் பார்க்காமல், சாக்கடைத்தனமாக பேசி நாறடித்துவிட்டான். இவன் மண்டை முழுக்க சாக்கடையாகத்தான் இருப்பான் போலிருக்கிறது. பாரு, ஒவ்வொரு வாக்கியத்துக்கும், ஒத்து ஊதியதையும், எடுத்துக் கொடுத்து கமருவைத் தூண்டிவிட்டதையும், தானும் கூடச்சேர்ந்து தாக்கியதைப் பார்க்க வேண்டுமே! சகுனியெல்லாம் பாருவிடம் பிச்சை எடுக்க வேண்டும்! கமருவை ‘காமருதீன்’ என்று சொன்னதைப் போல, பாருவையும் சாண்ட்ரா, ‘பொறுக்கி’ என்று சொன்னதன் விளைவு அது. இத்தனை நாட்களாக தன்னோடு சேர்த்து வைத்துக்கொண்டு, ஆறுதல் தந்த சாண்ட்ராவுக்கு பாரு செய்துகாட்டிய பதில் நன்றியுணர்ச்சிதான் இது! பாம்புக்குப் பால் வார்க்கக்கூடாது என்று சொல்வது இதற்காகத்தான் போலிருக்கிறது என்று ஒரு விநாடி பழமொழியெல்லாம் நமக்கு நினைவுக்கு வந்து போனது.
இடையிடையே, அத்தனைத் தாக்குதலையும் பொறுத்துக்கொண்டு, வேறு வழியில்லாமல் வாயைப் பொத்திக் கொண்டிருக்க சாண்ட்ராவே முயற்சித்ததும் கூட ஆச்சரியம்தான். ஆனாலும் இந்த இரண்டு பீடைகளும் அவரை அமைதியாக இருக்கவே விடவில்லை, மீண்டும் மீண்டும் வம்பிழுத்துக் கடித்துக் குதறிவிட்டார்கள்.
இவர்கள் பண்ணிய அநியாயத்தை விடவும், இதையெல்லாம் உள்ளே உட்கார்ந்துகொண்டு ஒரு சிலர் வாயை மூடிக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்ததுதான் பெரிய அநியாயமாக நமக்குப் பட்டது. சபரி, வினோத், விக்ரம் மட்டும்தான் அவ்வப்போது குறுக்கிட்டுக் கத்தி, இதை நிறுத்தப் போராடிக் கொண்டிருந்தார்கள்.
அடுத்து, நெருக்கடி தாங்கமுடியாமல் முதல் ஆளாக காரிலிருந்து விக்ரம் வெளியேறினார். அதைத் தொடர்ந்த கொஞ்ச நேரத்தில், வன்மத்தில் உச்சிக்குப் போன பாருவும், கமருவும் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த சாண்ட்ராவை கதவைத் திறந்து தள்ளிவிட முயற்சித்தனர். போராடிய சாண்ட்ராவை இருவருமாகச் சேர்ந்து மிதித்து வெளியே தள்ளிய காட்சியைப் பார்ப்பதற்கெல்லாம் காணக் கண்கோடி வேண்டும். வெளியே தள்ளிவிட்டு, சந்திரமுகி போல முழு ஆங்காரத்தோடு, விழிகளை உருட்டிக்கொண்டு இருப்புக்கொள்ளாமல் உட்கார்ந்திருந்தார் பாரு!
இதற்கு முன்பே இந்த இருவரும் செய்த அநியாயங்களுக்கு, எல்லோ கார்டு தந்திருக்கலாம் அல்லது ரெட் கொடுத்துக்கூட அனுப்பியிருக்கலாம். குறைந்தபட்சமாக வீக்கெண்டிலேயே இயல்பாகவே அனுப்புவது போலாகவாவது அனுப்பியிருக்கலாம். அதையெல்லாம் செய்யாமல் ‘கண்டெண்ட்’ கிடைக்காதா என்று வேடிக்கை பார்த்த பிக்பாஸ், விஜய்சேதுபதி குழுவுக்குக் கிடைத்த வெற்றிதான் இது. இதைத்தான், குழந்தைகள் உள்ளிட்ட சமூகமாக நாம் உட்கார்ந்து பார்க்க வேண்டும் போலிருக்கிறது.
வெளியே விழுந்த சாண்ட்ரா மயங்கிவிட, ஏற்கனவே வெளியே இருந்த விக்ரம் அவருக்கு உதவ முயற்சி செய்தார். கூடவே, சபரியும், வினோத்தும் ஆட்டத்தைத் துறந்து அவருக்கு உதவ இறங்கி ஓடினார்கள். பாருவோ அப்போதும், ‘அதெல்லாம் மெடிகல் டீம் பார்த்துக் கொள்வார்கள், நேற்று கில்லர் காயின் டாஸ்க்கில் என்னை அமுக்கிப் பிடித்துக்கொண்டு எல்லோரும் காயினை ஒட்டியது சரி என்றால் நான் செய்ததும் சரிதான்’ என்று கத்திக்கொண்டிருந்தார்.
ஆட்டம் முடிவை நெருங்கிவிட்டது, அதனால் ரெட் கார்டு கொடுத்து, அதனால் வரும் பரபரப்பால் இன்னும் டிஆர்பியை ஏற்றிக்கொள்ளலாம் என்று பிக்பாஸ் குழு நினைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, நாளை அது நடக்கலாம். அதெல்லாமில்லை, இன்னும் மிச்சமிருக்கும் நாட்களுக்கும் எங்களுக்கு கண்டெண்ட் வேண்டும் என்று இவர்களை உட்கார வைத்தாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை!