கில்லர் காயின் டாஸ்க்கை ஆக்கிரமித்த விக்ரம்! #Biggboss Day 88

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கின், ஆறாவது டாஸ்க்காக கில்லர் காயின் டாஸ்க்கை கொண்டு வந்தார்கள். இது ஏற்கனவே ஒரு டெரரான டாஸ்க், இதில், ஒருவருக்கொருவர் உடல்ரீதியாக மோதிக்கொள்ளவும், அடிபடவும் வாய்ப்பு அதிகம்.
Gana Vinoth , Subhiksha,Aurora Sinclair and Vikkals Vikram
Gana Vinoth , Subhiksha,Aurora Sinclair and Vikkals Vikram@jiohotstar
Published on

புருஷன், பொண்டாட்டி சண்டை போல, பாருவுக்கும், கமருவுக்கும் நடுவில் பஞ்சாயத்து செய்ய, போன வாரம் முழுதும் போராடிக்கொண்டிருந்த அத்தனை பேரையும் ஜோக்கராக்கி விட்டு, பாருவுயும் கமருவும், அவர்களாகவே சமாதானமாகிக் கொண்டிருந்தார்கள். நேற்று தொடங்கிய தன் முயற்சியில் கமரு முழுதுமாக வெற்றியடைந்திருந்தார். பாரு மீதிருந்த காதல் உணர்வால் அதைச் செய்தாரா, அல்லது, கொஞ்சம் ஓவராகத்தான் போய்விட்டோம், வீக்கெண்டில் வைத்துப் பொறித்து விடுவார்கள், அதனால் இதை நாமே முடிந்தவரை உழப்பிவிட்டுவிடுவோம் என்று திட்டமிட்டாரா என்று தெரியவில்லை. இரவோடிரவாக, பாருவின் படுக்கைக்குப் போய் அவர் மேல் படுத்துக்கொண்டே கொஞ்சிய படி மன்னிப்புக் கேட்க, அவரும் அதை ஏற்றுக்கொண்டார். பார்க்க, புருஷன், பொண்டாட்டிகளின் ஊடலுக்குப் பிறகான கூடல் மாதிரியே இருந்தது அது. இதுவே, பிக்பாஸ் வீடாக இல்லாமலிருந்தால், அடுத்தக் கட்டத்துக்கேக்கூட போயிருப்பார்கள் போலிருக்கிறது.

இந்த எதிர்பாராத திருப்பதால் நம்மை விடவும், மற்ற போட்டியாளர்களை விடவும், சாண்ட்ராதான் அதிகமாக அதிர்ச்சி அடைந்திருப்பார். இந்தப் பாரு எனும் கோமாளியை நம்பி அவளுடன் நான்கு நாட்களாக பேசிக் கொண்டிருந்ததற்கு இது தமக்குத் தேவைதான் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, பாருவையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே, கமரு, சாண்ட்ராவுடன் வம்புச்சண்டையைக் ஆரம்பித்தார். ‘கனி ஒரு நேர்மையான, உண்மையான பிளேயர், அவருக்கு மட்டும் சண்டை போடத் தெரிந்திருந்தால், வெளியே போயிருக்க மாட்டார்’ என்று சாண்ட்ராவோடு ஒப்பிட்டு சாடை பேச, ‘நான் யாரோடு சண்டை போட்டேன்? எனக்கு சண்டை என்றால் என்னவென்றே தெரியாதே!’ என்று சாண்ட்ரா விட்ட டயலாக்கில், கந்தர்வகோட்டை சமஸ்தானமே கதிகலங்கிப் போயிருக்கும்.  

Gana Vinoth
Gana Vinoth@jiohotstar

அது அப்படியே வளர்ந்து, ஒரு கட்டத்தில், ‘நீயெல்லாம் ஒரு ஃபிராடு!’ என்று கமரு, சாண்ட்ராவைத் திட்டிவிட, பிரச்சினை பெரிதானது. அவ்வளவு நேரமும் பாரு பக்கத்தில் உட்கார்ந்து, மிக்சர் தின்றுகொண்டிருக்க, சாண்ட்ரா, ‘என்ன பாரு இது? அவன் என்னை என்னவெல்லாம் சொல்கிறான்? நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்க, பாரு, ‘இல்லை சாண்ட்ரா, நான் சும்மா இல்லை, மனதுக்குள் அவனைத் திட்டிக்கொண்டிருந்தேன், உனக்குதான் அது தெரியவில்லை’ என்று சொன்னது அல்டிமேட்! நடிப்பு அரக்கி சாண்ட்ரா, தனது அழுகை ஆயுதத்தை எடுத்துக்கொண்டு வெளியே ஓட, ‘என்னடா, மறுபடியும் எவன் இந்த மோட்டாரை ஸ்டார்ட் செய்துவிட்டது?’ என்ற அதிர்ச்சியில் மற்றவர்கள் விசாரிக்க ஓடிவந்தார்கள்.

வினோத், முடிந்தவரை கமருவைக் கேள்வி கேட்க, ‘எனது பிஆர் பற்றி அவர் பேசிய விசயம் எனக்குப் பிடிக்கவில்லை’ என்றார் கமரு. ஆக, அதுதான் கமரு தன்னிச்சையாகப் போய் வம்பு வளர்த்ததற்கான காரணம் போலிருக்கிறது. பாரு, கமருவை சாண்ட்ராவிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்ல, அவரும் மனைவி சொல்லே மந்திரம் என்பது போல எழுந்து போனார். ஆனால், ‘உனது மன்னிப்பைக் கொண்டு குப்பையில் போடு’ என்று சாண்ட்ரா மீண்டும் முறுக்கிக் கொண்டார். திவ்யாவையும், கனியையும் போட்டுப் பாடாய்ப் படுத்தினது எல்லாம், ஒரு விநாடி அவர் கண்முன்னால் வந்து போயிருக்கும்!

Ticket to finale task
Ticket to finale task@jiohotstar

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கின், ஆறாவது டாஸ்க்காக கில்லர் காயின் டாஸ்க்கை கொண்டு வந்தார்கள். இது ஏற்கனவே ஒரு டெரரான டாஸ்க், இதில், ஒருவருக்கொருவர் உடல்ரீதியாக மோதிக்கொள்ளவும், அடிபடவும் வாய்ப்பு அதிகம். இங்கே ஏற்கனவே, ஒரு பிளேயரும் சரியில்லை, இந்த டாஸ்க்கில் என்ன பஞ்சாயத்தைக் கூட்டப் போகிறார்களோ என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால், நல்லவேளையாக, விக்ரம் இதை முழுக்க அவரது கண்ட்ரோலில் எடுத்துக்கொண்டார். எலிமினேஷன் லிஸ்ட்டை அவர் தயார் செய்ய, அதற்கு பலரும் ஒத்துக்கொண்டு, வரிசையாக சபரி, கமரு, பாரு என பக்காவாக அமுக்கிப் பிடித்து அவுட்டாக்கி வெளியே தள்ளிக்கொண்டே வந்து இறுதியில் முதலிடத்தை வினோத்துக்கு விட்டுக்கொடுத்து, ஆட்டம் முழுதாக என் கையில் இல்லை என்றும் ஒரு பூச்சுப் பூசி முடித்துவிட்டார்.

நடுவில் இது, இப்படித்தான் போகிறது என்பதை அறிந்ததும், நாம் கமருவுக்கு உதவவில்லை எனில் நம் மீது பஞ்சாயத்து வந்துவிடுமோ என்ற நினைப்பில், ’வெளியே வந்துவிடு கமரு, வெளியே வந்துவிடு’ என்று, ‘தள்ளு தள்ளு’ காமெடி போல் வாயால் மட்டும் பாரு, கமருவுக்கு உதவி செய்து கொண்டிருந்தது நிஜமான காமெடி! ஆனால், அவரையும் அதே முறையில் அவுட்டாக்கிய போது, கோபத்தில் வெல்க்ரோ ஜாக்கெட்டைக் கிழித்து எறிந்து, ‘த்தூ, கருமம்’ என்று சொல்லி, கெட்டவார்த்தைகளை விழுங்கிக்கொண்டு திட்டியபடி சென்றதெல்லாம் அநாகரீகத்தின் உச்சம்! விக்ரமின் இந்தத் திட்டம், சரியானது இல்லைதான் என்றாலும், இந்த இழவெடுத்த டாஸ்க், இந்த வகையில் யாருக்கும் ஆபத்தில்லாமல் முடிந்த வகையில் சரிதான்!

அடுத்து, புத்தாண்டுக் கொண்டாட்டமாக புத்தாடைகள், லான் டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் அதில் ஆர்வமானார்கள்!

Puthuyugam
www.puthuyugam.com