Social Media Freepik
அறிவோம்

வதந்திகள்: சமூக வலைத்தளங்களின் நச்சு

சமூக வலைத்தளங்கள் முக்கிய ஊடகமாக மாறிவிட்டன.

ஆதி தாமிரா

இன்றைய மின்னணு ஊடக உலகில், சமூக வலைத்தளங்கள் நமது தகவல்கள் பரிமாற்றத்துக்கான முக்கிய ஊடகமாக மாறிவிட்டன. ஒரு காலத்தில் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் போன்றவை செய்திகளின் மூலங்களாக இருந்தன. அவை உண்மைக்கு நெருக்கமாகவும் இருந்தன. அவற்றைச் சார்ந்தும்,
ஆய்ந்தும் எழுதும் கட்டுரைகளில் வேண்டுமானால் சற்றே எழுதுபவர்களின் உளச்சார்புகள் வெளிப்படலாமே தவிர ஆதாரச் செய்திகள் உண்மையாக இருந்தன.ஆனால், இன்று யார் வேண்டுமானாலும் எந்தத் தகவலையும், வதந்தியையும் நொடிப் பொழுதில் எழுத்தாக, விடியோவாக, படங்களாகப் பரப்ப முடியும். இதன் விளைவாக, உண்மையையும், பொய்யையும் பிரித்துப் பார்க்கும் முக்கியமான வேலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.

ஏன் வதந்திகள் எளிதாகப் பரவுகின்றன?

பல சமயங்களில், பொய்யான தகவல்கள் நிஜம் போலவே நமது உணர்ச்சிகளைத்தூண்டும் விதமாக வடிவமைக்கப்படுகின்றன. கோபம், பயம் அல்லது ஆச்சரியம் போன்ற உணர்வுகளைத் தூண்டி, அதை உடனடியாகப் பகிரத் தூண்டுகின்றன. கவர்ச்சியான தலைப்புகள், முழுமையான தகவலைப் படிக்காமல், ஒரு செய்தியைப்பகிர நம்மைத் தூண்டுகின்றன. பல செய்திகளுக்கு ஆதாரம் இருப்பதில்லை. ஆனால், அவை சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் பகிரப்படுவதால், அவை உண்மையைப் போலவே தோற்றமளிக்கின்றன.


பல சமயங்களில், வதந்திகளையும், பொய்களையும் பரப்புவோர், சமூகம் நன்கறிந்த அரசியல்வாதியாகவோ, பதவியில் இருப்பவர்களாகவோ, பிரபலங்களாகவோ இருக்கின்றனர். ஆகவே எளிய மனிதர்கள் அவற்றை உண்மையெனக் கொள்ள
வாய்ப்பேற்பட்டுவிடுகிறது. நமக்கு ஒரு தலைவரைப் பிடிக்கவில்லை, ஒரு நடிகரைப் பிடிக்கவில்லை எனில், அவர் குறித்து வரும் விரோதமான தகவல்களை நாம் உடனே நம்ப ஆசைப்படுகிறோம்.இவர்களுக்கெல்லாம் வியாபார நோக்கம், எதிரிகளை மக்கள் மன்றத்தில் வீழ்த்தும் நோக்கம், அரசியல் லாபம் என பெரிய உள்நோக்கமிருக்கிறது.

Fake News
பொய்யான தகவல்களை அணுகுவது எப்படி?

சாதி, மத மோதல்களை ஏற்படுத்தும் வதந்திகள் நம் சமூகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு நீடித்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அப்படியான ஒரு செய்தியைப் பகிர்வதற்கு முன், அதன் ஆதாரம் என்ன என்பதை சரிபார்க்க வேண்டும். அது ஒரு நம்பகமான செய்தி நிறுவனமா அல்லது தனிப்பட்ட ஒருவரின் கணக்கா என்பதை அறிய வேண்டும்.

வதந்திகள் சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரிடையே குழப்பத்தையும், வெறுப்பையும், பகைமையையும் உருவாக்கிவிடக்கூடியவை. அபப்டியான ஒரு செய்தியின் உண்மையை உறுதிப்படுத்த, அதே செய்தியை வேறு சில நம்பகமான செய்தித் தளங்களில் தேடிப் பார்க்க வேண்டும். அதற்குப் பொறுமை இல்லையெனில் உண்மை வெளிப்பட ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டும். பல சமயங்களில், பழைய படங்கள் அல்லது வீடியோக்கள் தவறான சூழ்நிலைகளில்
பயன்படுத்தப்படுகின்றன. இப்போது படங்கள் மற்றும் விடியோ கிளிப்புகளை உருவாக்கும் AI நுட்பங்கள் மூலமாக உருவாக்கப்படும் படங்கள், விடியோக்கள் அதிகளவில் பரப்பப்படுகின்றன. கூகுள் இமேஜ் தேடல் போன்ற கருவிகளைப்
பயன்படுத்தி, அவற்றின் மூலத்தை அறியலாம். ஒரு செய்தி உங்களைக் கோபப்படுத்தினால் அல்லது அதிர்ச்சிக்கு உள்ளாக்கினால், அதை உடனடியாகப் பகிரும் முன் ஒரு நிமிடம் சிந்திப்பது அவசியம். இது சமூகத்தில் எப்படியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று யோசியுங்கள். பதற்றமேற்படுத்தும் செய்தியாயின், அதைத் தன்னிச்சையாகப்பரப்பாமல் அரசு மற்றும் செய்தி மீடியாக்கள் அவற்றை உறுதிப் படுத்தும் வர
காத்திருங்கள்.

தகவல்கள் தனி நபர்கள் பற்றியதாக இருப்பின், தனிநபரின் சுதந்திரத்தை,அவரது உரிமையைப் பாதிக்குமா என்பதைப் பற்றி சிந்தியுங்கள். மருத்துவம், தடுப்பூசிகள், வீட்டிலேயே பிரசவம் போன்ற ஆதாரமற்ற, அறிவியலுக்குப் புறம்பான தகவல்கள், தனி மனிதர்களுக்கு உயிராபத்தை விளைவிக்கக்கூடியவை. அவற்றைப் பரப்புவதற்கு துணைபோகாதீர்கள்.

வதந்திகளுக்கும், பொய்களுக்கும் எதிரான நமது போர் நிச்சயமாக ஒரு சவால்தான். இந்தச் சவாலை எதிர்கொள்ள, நாம் ஒவ்வொருவரும் தகவலைப் பகிரும் முன் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அதுவே, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உதவும்.