

ஒரு காலத்தில், வெளியூரிலோ, வெளிநாட்டிலோ வசிக்கும் நம் உறவினர்களுடன் பேசுவது கூட கடினமான செயலாகும். டிரங்கால் புக் செய்துவிட்டு காத்துக்கொண்டிருக்க வேண்டும், அதிக செலவில் ஐஎஸ்டி செய்திட வேண்டும். ஆனால், இப்போது, வீடியோ கால்கள் மூலமாக, நாம் அவர்களை நேரடியாகப் பார்த்துப் பேசி, அவர்களின் அன்றாட வாழ்வை, கொண்டாட்டங்களை, மற்றும் முக்கியமான தருணங்களைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது. மேலும், அவசரத் தகவல்கள், சுப நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள், அல்லது ஒரு எளிய 'ஹாய்' அனுப்புவதற்கும் உதவுகிறது. இது உறவுகளுக்குள் பிரிந்திருக்கும் தவிப்பைக் குறைத்து ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.
இருப்பினும், எப்போதும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பில் உள்ள நன்மைகளை விடவும், தீமைகளே அதிகமும் நம்மை ஈர்த்துவிடுகின்றன. சமூக வலைத்தளங்களால் ஏற்படும் சிக்கல்களை இங்கே பார்க்கலாம்.
1. சமூக ஊடகங்கள் மூலம் வரும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் நம்மைக் குழப்புகின்றன. உடல்நலம், அரசியல் குறித்த ஃபார்வர்ட் மெசேஜ்களை சரிபார்க்காமல் பகிர்வதால், முரண்பாடுகள், தவறான புரிதல்கள் மற்றும் தேவையற்ற விவாதங்கள் எழுகின்றன. இது, சமயங்களில் நட்பை, உறவைச் சிதைக்கும் அளவுக்கும் போய்விடுகிறது.
2. குடும்ப உறுப்பினர்கள் ஒரு வீட்டில் அருகருகே இருந்தாலும், நேருக்கு நேர் பேசிப் பழகும் நேரம் குறைந்துவிடுகிறது. அனைவரும் அவரவர் செல்போன்களில் மூழ்கி, தனித்தனி உலகங்களில் வாழ்கிறார்கள். இது உறவுகளுக்குள் ஒரு இடைவெளியை (Emotional Gap) உருவாக்குகிறது.
3. சமூக ஊடகங்களில், முதிர்ச்சியற்ற சிலர் தங்கள் தனிப்பட்ட குடும்பப் பிரச்சினைகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது குடும்ப உறுப்பினர்களுக்குள் சங்கடத்தையும், உரிமை மீறலையும் ஏற்படுத்துகிறது.
4. சமூக வலைத்தளங்களில் வரும் படங்களும், பதிவுகளும் பெரும்பாலும் ஒரு சிறந்த வாழ்க்கையின் பிம்பங்களையே காட்டுகின்றன. இது சிலருக்கு, "நாம் ஏன் அப்படி இல்லை, நம் குடும்பம் ஏன் அப்படி இல்லை?" என்ற தேவையற்ற ஒப்பீடுகளையும், தாழ்வு மனப்பான்மையையும், ஏற்படுத்துகிறது.
5. மது போதைக்கு ஆளாவதைப்போலவே, ஸ்க்ரீன்களுக்கும் நாம் மெல்ல மெல்ல அடிமையாகிவிடுகிறோம். இதனால் அர்த்தமற்ற செய்திகளிலும், ரீல்ஸ்களிலும் அதிக நேரத்தைச் செலவிடுகிறோம். இதனால், நமது ஆளுமை, செயல்திறன், வேலை மற்றும் அன்றாடப் பணிகள் மீதான ஈடுபாடு போன்றவை குறைந்துவிடுகிறது. போட்டிகள் நிறைந்த உலகில், வெல்லத் தேவையான ஈடுபாடு மற்றும் உழைப்பு இரண்டையும் நாம் இழக்க நேரிட்டால் வாழ்வில் வெற்றி பெறுவது மிகக் கடினமாகிவிடுகிறது. பெரியவர்களுக்கே இந்தச் சிக்கல் எனில், குழந்தைகளுக்குக் கேட்கவா வேண்டும்? படிப்பின் மீதான ஆர்வமும், புரிதலும் குறைந்துபோய் விடும்.
இதிலிருந்து தப்புவதற்கு, நாம் எவ்வளவு நேரம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நாம் போனில் செலவிடும் நேரத்தைக் கணக்கீடு செய்ய சில செயலிகள் இருக்கின்றன. அவற்றின் மூலமாக நாமும், நம் குழந்தைகளும் போனைப் பயன்படுத்தும் நேரத்தை அவ்வப்போது கவனிப்பது நல்லது.
தினமும் ஒரு நேரமாவது சாப்பிடும் நேரத்தில், போன், லேப்டாப், டிவி போன்றவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு, குடும்பத்தோடு பேசி, சிரித்தபடி உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் போனை ஒதுக்கி வைத்துவிட்டு குடும்ப உறுப்பினர்களோடு செஸ், கேரம் போர்டு போன்ற உள்விளையாட்டுகளை விளையாட சில மணி நேரங்களாவது ஒதுக்குவது நல்லது.
சமூக ஊடகங்கள் ஒரு கத்தி போன்றவை - அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் அதன் நன்மை தீமைகள் அடங்கியுள்ளன. அளவோடும், கவனத்தோடும் அவற்றைப் பயன்படுத்துவோம், குடும்ப ஆரோக்கியம் பேணுவோம்.