அஞ்சனா மற்றும் அகில்  
செய்திகள்

திருமணசேலையுடன் புதைக்கப்பட்ட மணப்பெண்... கேரளாவில் பெருந்துயரம்!

இரு நாட்களுக்கு முன்பு சாலையில் இருந்த பெரும்துளையில் விழுந்த ஒரு இளம் பெண்ணின் மரணம் மிக கொடூரமாக இருந்தது. அதோடு, அவரின் இறுதி அடக்கத்தை பார்த்த மக்கள் தாங்க முடியாத அளவுக்கு துயரத்தில் ஆழ்ந்தனர்.

எம். குமரேசன்

நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களால், வாகன விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. சாலை விபத்துகளுக்கு ஏற்ப உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், சாலை விபத்துகள் மற்றும் சாலை விபத்து உயிரிழப்புகள் தொடர்பாக மத்திய அரசு கடந்த 2023- ஆம் ஆண்டு ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டது. அதில், அதிகம் சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலமாக இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளா இரண்டாவது இடத்தில் உள்ளது. கேரளாவில் விபத்துகள் நடப்பதற்கு முக்கிய காரணம் தாறுமாறான வேகம், குறுகிய சாலைகள் மற்றும் சாலையிலுள்ள பொத்தல்கள் போன்றவை முக்கிய காரணமாக கூறப்படுகிறது . இரு நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கிய இளம் பெண்ணின் மரணம் மிக கொடூரமாக இருந்தது. அதோடு, அவரின் இறுதி அடக்கத்தை பார்த்த மக்கள் தாங்க முடியாத அளவுக்கு துயரத்தில் ஆழ்ந்தனர்.

கொல்லம் நகரை சேர்ந்தவர் அஞ்சனா. 25 வயதான இவர் அங்குள்ள வங்கியில் ஊழியராக பணி புரிந்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அஞ்சனா கொல்லத்தில் தான் வேலை பார்த்த வங்கிக்கு இருசக்கர வாகனத்தில்சென்று கொண்டிருந்தார் ஓக்கன்முக்கு என்ற பகுதியில் சென்ற போது, சாலையில் இருந்த பெரும் துளை ஒன்றின் அருகே வாகனத்தைச் செலுத்த தடுமாறிக் கொண்டிருந்தார். அப்போது, பள்ளி பஸ் ஒன்று இடித்ததில் அஞ்சனா தலைகுப்புற அந்தத் துளையில் விழுந்தார். இந்த சமயத்தில் , பின்னால் வந்த தனியார் பஸ் அஞ்சனாவின் தலை மீது ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அஞ்சனா துடி துடித்து இறந்து போனார். இதில், மற்றொரு சோகம் என்னவென்றால், விபத்தில் உயிரிழந்த அஞ்சனாவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்ததுதான். மணமேடை காணவிருந்த அஞ்சனாவை சடலமாக கண்ட உறவினர்கள் துடி துடித்து போனார்கள்.

அஞ்சனாவின் தந்தை எஸ்.பி மோகனன் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தவர். தாயார் அஜிதா அங்குள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். மோகனன் 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட, தாயின் அரவணைப்பில் வளர்ந்த அஞ்சனாவுக்கு ஒரு மூத்த சகோதரியும் உண்டு. கடந்த சில மாங்களுக்கு முன்புதான் அவருக்கு வங்கியில் பணி கிடைத்தது. இது, அவரின் கனவு வேலையாகும். இதையடுத்து, அஞ்சனாவுக்கு திருமணமும் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி வருவாய்துறையில் வேலை பார்த்த அகில் என்பவருடன் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

திருமணத்துக்காக இரு குடும்பத்தினரும் மும்முரமாக இருந்தனர். இந்தநிலையில்தான், அஞ்சனா விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து போனர். அஞ்சனாவின் இறப்பு இரு வீடுகளையுமே புரட்டிப் போட்டு விட்டது. அஞ்சனாவின் இறப்புச் செய்தி கிடைத்த போது, அவரின் வருங்கால கணவரான அகில் , திருமண அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார். தகவல் கிடைத்ததும் பதறிப் போய், பரணிகாவு என்ற இடத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். அங்கே, சடலமாக அஞ்சனாவைக் கண்டு செய்வதறியாமல் திகைத்து நின்றுள்ளார் அகில். தொடர்ந்து, மருத்துவமனையில் அனைத்து பார்மாலிட்டிகளையும் முடித்து, தனது வருங்கால மனைவியின் உடலை, அவரின் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார் அகில். மணமேடை காண காத்திருந்த மணமகன், வருங்கால மனைவியின் சடலத்துடன் வீடு திரும்பியதை கண்டு உறவினர்கள் துடி துடித்து போனார்கள். என்ன வார்த்தை கூறி அகிலை தேற்றுவது என தெரியாமல் உறவினர்களும் நண்பர்களும் தவித்தனர்.

அஞ்சனாவின் திருமணத்துக்காக வாங்கிய புதிய பட்டுசேலையை அவருக்குக் கட்டினர். மக்கள் அஞ்சலிக்காக வைத்தபிறகு, உறவினர்கள் கண்ணீரில் மூழ்க திருமணப்புடவையுடன் அஞ்சனாவின் உடல் மண்ணுக்குள் புதைக்கப்பட்டது.

திருமணத்துக்காக வாங்கிய புத்தம் புதிய சேலையுடன் வருங்கால மனைவியின் உடல் மண்ணுக்குள் புதைக்கப்பட்டதை கண்டு முகம் புதைத்துக் கொண்டு அழுத அகிலை தேற்ற வார்த்தைகள் இல்லாமல் உறவினர் தடுமாறினர். இந்த சம்பவம் கேரளாவையே மிகப்பெரும் துயரில் ஆற்றி பேசுபொருளாகியுள்ளது.