வழக்கு ஒன்றில் முன்ஜாமீன் பெற்ற ஆத்திரத்தில், மணமகன் ஒருவரைத் கொடூரமாகத் தாக்கி, பொய் வழக்குப் பதிவு செய்து வாழ்க்கையைச் சீரழித்த எஸ்.ஐ மற்றும் போலீஸார் ஒருவருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் டோனாவூரை சேர்ந்தவர் ஜோசப் செல்வகுமார். இவர், சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு இவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, செல்வகுமார் விடுமுறையில் சவுதியில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். திருமணத்திற்காக தனது வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க நெல்சன் என்ற பெயிண்டரை செல்வகுமார் ஏற்பாடு செய்திருந்தார். நெல்சன் வீட்டுக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டில் வசித்த ஜெபா தாய் என்ற பெண்ணிடத்தில் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த ஜெபா தாய் ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் போலீசார் நெல்சனை முதல் குற்றவாளியாகவும் (A1 ) சம்பவம் நடந்த போது, வெளியே இருந்த ஜோசப் செல்வகுமாரை இரண்டாவது குற்றவாளியாகவும் (A2) போலீசார் சேர்த்தனர். திருமணம் நெருங்கி விட்டதால், செய்வறியாது திகைத்த செல்வகுமார் உடனடியாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையை அணுகி முன் ஜாமீன் பெற்றார். தினமும் ஏர்வாடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது. நீதிமன்றம் தந்த முன்ஜாமீன் காரணமாக ஜோசப் செல்வகுமாருக்கு நல்லபடியாக திருமணமும் நடந்து முடிந்தது.
ஆனால், அதற்கு பிறகு நடந்த சம்பவங்கள்தான் போலீசாரின் கொடூர முகத்தை வெளியுலகுக்கு காட்டியுது.
திருமணம் முடிந்த பிறகு, நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்திடுவதற்காக செல்வகுமார் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி ஏர்வாடி போலீஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த காவலர் முத்துகுமார், "உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்குமளவுக்கு தைரியமா?" எனக் கேட்டு செல்வகுமாரை அடித்துள்ளார். 'உன்னை எஸ்.ஐ. இம்மானுவேல் தேடிக்கொண்டிருக்கிறார் ... கையில் சிக்கினால் சின்னாபின்னமாகி விடுவாய்!' என்று கூறியும் மிரட்டியுள்ளார். அடுத்த நாள், எஸ்.ஐ. இம்மானுவேல் இருந்தபோது காவல் நிலையத்துக்கு செல்வகுமார் கையெழுத்திடச் சென்றுள்ளார். அப்போது, எஸ்.ஐ. இம்மானுவேல் மற்றும் காவலர் முத்துகுமார் இருவரும் செல்வகுமார் சவுதியில் வசிப்பதைப் பற்றி கீழ்மையாகக் கூறியும் திருமணத்தைப் பற்றிக் கேலி செய்தும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். போலீசாரின் அச்செயலை செல்வகுமார் தனது செல்போனில் வீடியோ எடுக்க முயன்றுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த இருவரும் அவரிடமிருந்து போனைப் பறித்தனர். பின்னர், லத்தியால் கொடூரமாகத் தாக்கியும், காலால் எட்டி உதைத்தும் சித்திரவதை செய்துள்ளனர். தொடர்ந்து, புகார் கொடுத்த ஜெபா தாயின் மருமகள் அன்பரசி என்பவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து, செல்வகுமார் அன்பரசியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாக ஒரு பொய் புகாரைப் பெற்று, மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த பிரச்னை காரணமாக, ஜோசப் செல்வகுமாரின் மனைவி பிரிந்து சென்று விட்டார். திருமணக் கனவுடன் சவுதியில் இருந்து வந்த ஜோசப் செல்வகுமாருக்கு வாழ்க்கையே சூனியமாகி போனது. இதையடுத்து, போலீசாரின் அராஜாகத்தை வெளிச்சம் போட்டு காட்ட செல்வகுமார் முடிவு செய்தார். தொடர்ந்து, தனக்கு ஏற்பட்ட இந்த அவல நிலை குறித்து செல்வக்குமார் நெல்லை மாவட்ட மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்திருந்தார். இந்த வழக்கில் நெல்லை மனித உரிமை ஆணையம் நேற்று தீர்ப்பளித்தது.
இந்த வழக்கை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் வி. கண்ணதாசன் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
"போலீசார் செல்வகுமார் மீது பதிவு செய்த இரண்டாவது வழக்கில் முதல் தகவல் அறிக்கையில், புகார் கொடுத்த அன்பரசி என்ற பெண்ணின் பெயரை 'கலையரசி' என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். புகார் தாரரான அன்பரசி, குறுக்கு விசாரணையின்போது, சம்பவம் நடந்த தேதி மற்றும் பிற விவரங்கள் குறித்து முன்னுக்குப் பின் முரணாகத் பதிலளித்துள்ளார். காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆணையத்தில் சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர். எனவே, எஸ்.ஐ இம்மானுவேல் மற்றும் காவலர் முத்துகுமார் ஆகியோர் ஜோசப் செல்வகுமாரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்து, துன்புறுத்தியது சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது . இதனால், பாதிக்கப்பட்ட ஜோசப் செல்வகுமாருக்கு, தமிழக அரசு ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்தத் தொகையை சார்பு ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் காவலர் முத்துகுமார் ஆகியோரிடமிருந்து தலா ரூ.50,000 வீதம் வசூலிக்க வேண்டும். மேலும், அவர்கள் இருவர் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்."
என்னதான் இப்போது, ஜோசப் செல்வகுமாருக்கு நியாயம் கிடைத்திருந்தாலும், போலீசார் செய்த டார்ச்சரால், மனைவியும் பிரிந்து சென்று விட்டார். வழக்கு காரணமாக பாஸ்போர்ட் முடக்கப்பட, சவுதி அரேபியா வேலையையும் அவர் இழந்து விட்டார்.
போலீசார், நினைத்தால், ஒருவரின் வாழ்க்கையை அழிக்க முடியுமென்பதற்கு இந்த சம்பவம் உதாரணம் என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.