ஃபைனல் மேடையில் விஜய் சேதுபதிக்கு இடப்புறமும், வலப்புறமும் நிற்கக்கூடிய வாய்ப்பு எந்த இரண்டு கிடைக்கும்’ என்று அனைவரையும் சொல்லச் சொன்னார் பிக்பாஸ். ஆளாளுக்கு எழுந்து தான் ஒரு புறமும், இன்னொருவர் மறுபுறமும் என்று சொல்லிவிட்டு போனார்கள். பெரும்பாலும், அந்த இன்னொருவராக விக்ரம் மற்றும் வினோத்தைச் குறிப்பிட்டார்கள். சொன்ன டாஸ்க்கை மட்டும் செய்யுங்கள் என்று மெனக்கெட்டு பிக்பாஸ் சொல்லியிருந்த பிறகும், ஆதிரை, ’நான் வினோத்தை எக்ஸ்போஸ் செய்யப்போகிறேன்’ என்று ஒரு பஞ்சாயத்தைக் கூட்டினார்.
’தர்பூசணியின் வெளியேற்றத்துக்கு வினோத்தான் காரணம். இவர்தான் அவர் பின்னாடியே போய் வேண்டுமென்றே, வம்பிழுத்துக் கொண்டு இருந்தார்’ என்று சொன்னார். ஆனால், வினோத் கொஞ்ச நாள் அவரை வம்பிழுத்துக் கொண்டிருந்ததனால்தான் அந்தாள் அத்தனை நாள் வீட்டுக்குள் தாக்குப்பிடிக்க முடிந்தது என்பதுதான் உண்மை. ஆதிரைக்கு பதில் சொல்லுகிறேன், என்று வினோத் எழுந்து வாக்குவாதத்தை ஆரம்பிக்க, அவருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சிலர் பேச, அதைத் தொடர்ந்து வியானாவுக்கும், விக்ரமுக்கும் பஞ்சாயத்து ஏற்பட்டு, ஆலமரத்தடி மீண்டும் ஒரு சந்தைக் கடை நிலைமைக்குப் போனது.
வியானாவின் துணி ஊறவைத்த வாளியைக் கொண்டு வந்து நடுவீட்டில் வைத்த நேற்றைய பிரச்சனையை வியானா எடுத்துக்கொண்டு, விக்ரமை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். அப்போது, யாரோ எதையோ சொன்னதற்கு விக்ரம் ஏன் கேள்வி கேட்கவில்லை என்பது வியானாவின் வாதம். சொன்ன ஆளை விட்டுவிட்டு, விக்ரமைப் போட்டு ஏன் குடைந்து கொண்டிருக்க வேண்டும்? விக்ரம், மூச்சைத் தொலைத்து விளக்கம் கொடுத்தும், வியனா மல்லுக்கு நிற்க, விக்ரம், அழவே ஆரம்பித்துவிட்டார். அய்யய்யோ நம் மீது பழி வந்துவிடப் போகிறதோ என்று வியானாவும் அழுதுகொண்டே ஓடிவிட்டார். அடிபட்ட குழந்தை அழ ஆரம்பித்துவிட்டால், அடித்த குழந்தையும் சேர்ந்து அழுது உழப்பி விடுவார்களே, அது போலிருந்தது இந்தக் காட்சி!
ஆஹா, நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று வியானாவின் பின்னாலேயே போய், அவரைச் சமாதானப்படுத்தும் நோக்கத்தில் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தார் சாண்ட்ரா. அதற்குள், இன்னொரு மூலையில், ’அடடா, இங்கு இத்தாப் பெரிய ரவுடி என்று நாம் ஒருத்தர் இருக்கும்போது, நம்மை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளாமல் இவர்களாகவே ஒரு கலவரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்களே, இது நியாயமா?’ என்று பாருவுக்குத் தோன்றியிருக்கும் போலிருக்கிறது. வினோத்தைக் கூப்பிட்டு வைத்துக்கொண்டு, ’பாரு வினோத், இங்கு எல்லாமே நாடகம்தான். எல்லாருமே அவரவர் கேமை ஆடிக் கொண்டிருக்கிறார்கள். என்னைத் தவிர வேறு யார் என்ன சொன்னாலும், அதை யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படியே நம்பி விடக்கூடாது. சூதானமா இருந்துக்கோ’ என்று அறிவுரை செய்து கொண்டிருந்தார். என்ன விஷயம் என்று பார்த்தால், அதற்கு சற்று முன்னர்தான் அரோரா, வினோத்திடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. அதற்காகத்தான் பாருவின் இந்தத் திருவிளையாடல் நடந்திருக்கிறது! அதை அருகிலிருந்து பார்த்த திவ்யா, அரோராவைக் கூப்பிட்டு உன்னைப் பற்றிதான், வினோத்திடம் அவள் ஏதோ போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என்று போட்டு விட்டார். அதைத் தொடர்ந்து அரோரா, பாருவிடம் போய், ’என்னைப் பற்றி அவனிடம் என்ன பேசிக் கொண்டிருந்தாய்?’ என்று கேட்கவும், ’நான் யாரைப் பற்றியும் பேசவில்லை, அவனுக்கு பொதுவான அறிவுரைதான் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் யார் பெயரையும் சொல்லவில்லை’ என்று சமாளிக்க முயற்சித்தார். அது அரோராவிடம் எடுபடவில்லை, ‘நீ என்னைத் தவிர வேறு யாரைப் பற்றிப் பேசப்போகிறாய்? உன் மண்டை எப்படி வேலை செய்யும் என்று எனக்குத் தெரியாதா?’ என்று பதிலடி கொடுத்தார். பாருவை, நம்மை விடவும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கும் ஓர் ஆள் யார் இருக்கிறார் என்றால் அது அரோரா மட்டும்தான்!
’எதுவானாலும் நேர்ல பேசு, இப்படி ஜாடை பேசறத விடு என்று உனக்கு பல தடவை சொல்லிட்டேன். உங்கிட்டயும் சொல்லிட்டேன், இதோ இந்த தடிமாடுகிட்டயும் சொல்லச் சொல்லி சொல்லிட்டேன். இதனாலேயே நீ சீரழியப்போற!’ என்று பாருவைச் சரியான கோணத்தில் டீல் செய்து கொண்டிருந்தார் அரோரா. இவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்வதை, யாருக்கு சப்போர்ட் செய்வது என்று தெரியாமல் திணறியபடி பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார் கமரு. இதுவே அந்த இடத்தில், அரோராவை தவிர வேறு யாராவது இருந்திருந்தால், அவ்வளவுதான் பாருவை எதிர்த்துப் பேசியதற்கு, வீட்டையே ரெண்டாக்கியிருப்பார்!
அடுத்து பெஸ்ட், வொர்ஸ்ட் பெர்ஃபார்மெர்ஸ் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அடுத்த வாரத்துக்கான நாமினேஷன் ஃப்ரீ ஆட்கள், கேப்டன் போட்டிக்கான ஆட்கள் என எல்லோரும் ஏற்கனவே தேர்வாகி விட்டதால், இந்த நிகழ்ச்சி இந்த வாரம் இருக்காது என்று நாம் நினைத்திருந்தோம். பதிலாக ஜெயில் என்று ஒன்று எதற்காகக் கட்டி வைத்திருக்கிறோம், அதில் கொஞ்சம் பேரைத் தூக்கி போடுவோம் என்று இதை நடத்திக் கொண்டிருந்தார் பிக்பாஸ்! அதிலும், மூன்று பேர் உள்ளே போனாலே இட நெருக்கடியாக இருக்கும் அந்த ஜெயிலில் பத்து பேரை உள்ளே தள்ள ஏற்பாடு செய்தது வேற லெவல்!
சாண்ட்ரா, விக்ரம், அரோரா, கனி, பிரஜின், சபரி ஆகியோர் காப்பாற்றப்பட, மற்ற அனைவரும் ஜெயிலுக்குப் போனார்கள். ஒவ்வொரு மணி அடிக்கும் போதும், ஜெயிலுக்குள் இருப்பவர்கள் கூடிப்பேசி, ஒருவரை ரிலீஸ் செய்யலாம் என்று அடுத்தொரு வேலையைக் கொடுத்தார் பிக்பாஸ்! கூடிப்பேசி? விளங்கினாப்பலதான்!
காட்சிகள் பெரும்பாலும் எடிட் செய்யப்பட்டுவிட்டதால், பெரிய சண்டையில்லாமல், ஒவ்வொருவராக வெளியே வந்துவிட்டனர் போலிருக்கிறது. இறுதியாக மிச்சமிருந்த வினோத், திவ்யா, ஆதிரை மூவரும் சிறை தண்டனைக்கு ஆளாகினர். நடந்தது அநியாயம் என்று திவ்யா மட்டும் கொந்தளித்துக் கொண்டிருந்தார்.
இன்றைய சோகம்:
பாரு, அரோரா, கமரு, ஆதிரை நான்கு பேரும் வட்டமாக நின்று கொண்டு எதையோ சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அது விவாதமா, வாக்குவாதமா, சண்டையா என்றெல்லாம் நமக்குத் தெரியவில்லை. அதே சந்தேகம் வீட்டு தல ரம்யாவுக்கும் வந்திருக்கும் போலிருக்கிறது. நாளைக்கு ஏதும் நம்ம தலையை உருட்டிவிடப் போகிறார்களோஎன்ற பயத்தில், பக்கத்தில் வந்து, ’எப்பா நீங்க பேசிட்டு இருக்கீங்களா, இல்ல சண்டை போட்டு இருக்கீங்களா?’ என்று கேட்டார். ’நாங்க பேசிட்டுதான்இருக்கோம்’ என்று சொன்ன பிறகு, ’நல்லது, சண்டை போடாம அப்படியே பேசிட்டு இருங்கடா, ஒருவேளை சண்டையாயிடுச்சின்னா சொல்லிவிடுங்க, வீட்டுத்தலயா வந்து பஞ்சாயத்து பண்றேன்’ என்று சொல்லிவிட்டு கிளம்பியது.