மீண்டும் தன் வேலையைக் காட்டிய பாரு! #Biggboss Day 60

எவ்விதமான கெடு சிந்தனையும் இல்லாத தூய்மையானவர்கள் மட்டும்தான் இந்த வீட்டில் ஜொலிப்பார்கள், ஓவியாவைப் போல! ஆனால், அவர்களாலும் இந்த வீட்டுக்குள் இருக்கவும் முடியாது, ஜெயிக்கவும் முடியாது.
VJ Paaru , Viyana & Sandra Amy
VJ Paaru , Viyana & Sandra Amy@Jiohotstar
Published on

‘என்னடா விளையாடுறீங்க, எந்த நேரம் பார்த்தாலும் கத்திக்கிட்டே இருக்கீங்க, நிகழ்ச்சியை நடத்துறதா வேண்டாமா?’ என்று நேற்றுதான் பிக்பாஸ் கதறிவிட்டுப் போயிருக்கிறார். ஆனால், இன்றைக்கும் மொத்தக் கூட்டமும் அதே வேலையைத்தான் பாத்துக் கொண்டிருந்தது.

நெக்லஸைத் தேடுகிறேன் பேர்வழி என்று, பாரு அரோராவின் துணிமணிகளை அலசிக் கொண்டிருந்தார். கூடுதலாக, அவரது பொருட்களைப் பற்றிய  கமெண்ட்டையும் அடித்துக் கொண்டிருந்தார். இதற்கு பதில் சொல்ல முயன்ற அரோராவைப் பிடித்துக் கொண்டு வார்த்தைக்கு வார்த்தை, சொன்னதையே சொல்லி, அவரை மட்டுமல்லாமல், பார்வையாளர்களான நம்மையும் இரிடேட் செய்து கொண்டிருந்தார். அரோராவாவது பாருவின் பேச்சைத் தாங்க முடியாமல் வெளியே போய் வினோத்திடம் அழுது அரற்றி மனதைத் தேற்றிக்கொண்டார். நாம் எங்கே போய் யாரிடம் அழுவது என்றுதான் தெரியவில்லை. இருப்பது போதாது என்று அரோராவை சமாதானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, ‘உனக்கும்தானே கமருவோடு ஃபீலிங்ஸ் இருக்கிறது என்று சொன்னாய்’ என்று வினோத் சொல்லவும், ’அடப்பாவிகளா! எவ்வளவு தெளிவாக எடுத்துச் சொன்னேன். எனக்கு அவனோடு ஒரு மண்ணு ஃபீலிங்க்ஸும் கிடையாது. அவனைப் போலவே எனக்கும் அப்பா அம்மா இல்லை என்ற அந்த உணர்வால் ஏற்பட்ட நட்போடுதான் அவனோடு பழகிக் கொண்டிருந்தேன். பாரு பேசுவதைத்தான் தாங்க முடியவில்லை என்று பார்த்தால், நீங்கள் பேசுவது அதைவிடக் கொடுமையாக இருக்கிறது. இதைவிட தெளிவாக ஒருத்தி எப்படிச் சொல்லமுடியும்? இதைப் போய் ஃபீலிங்ஸ் என்று சொல்லி என்னை அசிங்கப்படுத்துகிறாயே’ என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார் அரோரா.

அடுத்து இன்னொரு பிரச்சனையை கிளப்பிவிட்டார் பாரு. யாரோ, பாத்ரூமில் துணியை ஊற வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு வந்து, ’அது யாருடையது?’ என்று விக்ரமிடம் கேட்டார். யார் அதை ஊற வைத்திருந்தால் இந்தப் பாருவுக்கு என்ன? அதோடு அதற்கும், விக்ரமுக்கும் என்ன சம்பந்தம்? விக்ரமிடம் ஏன் வந்து கேட்க வேண்டும்? அப்படியே, அவருக்கு ஏதாவது கேட்க வேண்டும் என்று தோன்றினால், அவரே எல்லோரையும் கேட்டிருக்கலாமே! இந்தப் பிரச்சினை தல ரம்யாவிடம் வரவும், அவர் விக்ரமைப் பார்த்து அந்த வாளியை கொண்டு வந்து நடுவீட்டில் வை என்று சொன்னார். விக்ரமும் கடமையே என்று அதைக் கொண்டு வந்து நடுவீட்டில் வைத்தார். அதாவது, பாரு கொண்டு வந்த பஞ்சாயத்துக்கு தீர்வு கண்டுபிடிக்கிறார்களாம்! கடைசியில் எல்லோரும், ’அது யாருடையது என்று கேட்க வேண்டியதானே, அதைவிட்டுவிட்டு நடுவீட்டில் ஏன் கொண்டு வந்து வைத்தீர்கள்’ என்று கேட்க பஞ்சாயத்து ரம்யா, விக்ரம் இருவர் மீதுமே திசை திரும்பிவிட்டது.

வியானா, இதற்குள் வந்த பிறகுதான் அது அவருடையது என்று தெரியவந்தது. ’என் துணியை எப்படி இங்கே கொண்டு வந்து வைக்கலாம்?’ என்று விக்ரமிடம் வியானா மல்லுக்கு நிற்கவும், அவர், ‘அம்மா தாயே, நான் கொண்டு வந்து வைக்கவில்லை, தல சொன்னார், நான் செய்தேன், எதுவானாலும் அவரைக்கேளு’ என்று சொல்லிவிட்டார். வியானா ரம்யாவைப் பார்க்க, ரம்யா ‘என்னடா இது பாரெழவாப்போச்சு’ என்று பாருவைப் பார்க்க, பாரு, ’நான் அது யாருடையது என்றுதானே கேட்டேன்? அதைக் கொண்டு வந்து நடுவீட்டிலா வைக்கச் சொன்னேன், அது யாருடையதாக இருந்தால் எனக்கென்ன?’ என்று பல்டி அடித்து ரம்யாவுக்கு பைத்தியம் பிடிக்க வைத்துக்கொண்டிருந்தார். இப்போது பிரச்சினைக்குள் வந்த அரோரா, ‘இந்த வீட்டில் முதன்முதலாக, பாத்ரூமில் கிடக்கும் மற்றவர்களின் துணியை கொண்டு வந்து வீட்டுக்குள் போட்டுப் பஞ்சாயத்து செய்யும் பழக்கத்தைத் தொடங்கியது யார்?’ என்று கேட்டார். நல்ல கேள்வி! அந்தத் திருக்காரியத்தைத் தொடங்கி வைத்ததே வியானாதானாம். அம்மையார், ‘இப்ப என்ன, துணிதானே! எடுத்துக்கொண்டு போய் திரும்ப வைத்துவிட்டால் போச்சு’ என்பது போல பஞ்சாயத்தை வாபஸ் வாங்கிக்கொண்டார்.

அடுத்து மோசமாக விளையாடியதற்காக எஃப்ஜே, அவரது குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரும், ’நான் மிகச் சிறப்பாகத்தான் விளையாடினேன், அதை மக்கள் பார்த்திருப்பார்கள். அது போதும் எனக்கு’ என்று சொல்லிவிட்டு வெளியேறினார். நமக்குதான் அப்படி எதையும் பார்த்தது போல நினைவில்லை! இந்தப் பஞ்சாயத்திலும் தன் வேலையை காட்டினார் ஃபுல் ஃபார்மில் இருந்த பாரு! காலையில் அரோராவைக் கதறி அழவைத்தது போல, இப்போது தல ரம்யாவையும் கதறி அழவைத்தார்! நிச்சயமாக, பிக்பாஸும் அவரது கேபினுக்குள் உட்கார்ந்து கதறி அழுதிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. பாருவின் அட்டகாசம், எல்லை மீறிப் போய்க்கொண்டு இருக்கிறது. என் கணிப்பு சரியாக இருந்தால், இந்த வாரம் சுபிக்குப் பதிலாக, பாரு அல்லது கமரு வெளியே போகக்கூடும்!

தினசரி டாஸ்க் அறிவிப்புக்காக, ஆலமரத்தடியில் மக்களைக் கூட்டிவைத்து, விக்ரம் டாஸ்க்கை வாசிக்க ஆரம்பித்தார். இந்த சமயத்தில், ஒரு குழு தினசரி டாஸ்க்காவது, மண்ணாவது என்று எழுந்து ஓடிப்போய் மற்ற குழுவின் நெக்லஸை எடுக்க முயன்றார்கள். இது என்ன மாதிரியான விளையாட்டு என்றே நமக்குப் புரியவில்லை. எதிரணி பார்த்துக்கொண்டிருக்கும் போது எடுக்கக்கூடாது என்று சொல்லி பிக்பாஸே நேற்றுதான் உள்ளே புகுந்து, அப்படிச் செய்த சபரிக்குத் தண்டனை கொடுத்திருக்கிறார். அதற்குள் இது! எதிரணியாவது, இவர்கள் அழுகுணியாட்டம் ஆடுகிறார்கள், நாம் விக்ரமைக் கவனிப்போம் என்று உட்கார்ந்திருக்கலாம். ஆனால், அவர்களும் தபதபவென்று ஓடிப்போய் விழுந்து, அங்கே ஒரு தள்ளுமுள்ளு நடத்திக்கொண்டிருந்தார்கள். இதில், சுபி, வினோத், திவ்யா, பிரஜின், கமரு ஆகியோர் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்டார்கள்!

Kamurudin & VJ Paaru
Kamurudin & VJ Paaru@jiohotstar

மீண்டும் அனைவரும் ஆலமரத்தடிக்கு அழைத்துவரப்பட்ட பிறகும், எஃப்ஜே, பாரு, கமருவின் அட்டகாசம் தொடர்ந்தது. பிக்பாஸ் தலையிட்டு, ‘கொஞ்சம் பொறுங்கடா, அறிவிப்பைக் கேளுங்க’ என்று சொன்ன பிறகும், ’நீ யாருடா வெண்ண’ என்பது போல அவரது திருவாயை மூடவே இல்லை பாரு!

அடுத்து ஒரு தினசரி டாஸ்க், கடமைக்கு நடந்தது. தொடர்ந்து, ’நீங்க விளையாடிய லட்சணம் போதும்’ என்று நெக்லஸ் டாஸ்க்கையே வழக்கத்துக்கு மாறாக சீக்கிரமாகவே முடித்து வைத்தார் பிக்பாஸ்.

அதற்கு சற்று முன்னதாக, வெளியே கிடந்த சோஃபாவில் உட்கார்ந்து சாண்ட்ரா, சுபியை ஸ்கூபிடூ நாயோடு ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தார். கேட்டுக்கொண்டிருந்தது, வியானாவும், ரம்யாவும். அதாவது சான்ட்ரா, இதற்கு முன்னரும் கோபத்தில் சுபியை நாய் என்று சொல்லி இருக்கிறார் போலிருக்கிறது. நாளை சான்ட்ராவின் இந்த லட்சணத்தைப் பற்றிச்சொல்லி, இதையெல்லாம் கண்டிக்க மாட்டீர்களா என்று விஜய் சேதுபதியிடம் யாரும் கேட்டு விடக்கூடாது அல்லவா? அதற்காகத்தான், ’நான் நாய் என்று அவரைச் சொல்லவில்லை, ஸ்கூபிடூ நாயின் குணத்தோடுதான் சுபியோடு ஒப்பிட்டுச் சொன்னேன்’ என்று ரெஜிஸ்டர் செய்வதற்காகத்தான் இந்த வேலை நடந்துகொண்டிருந்தது. இதனால், இந்தப் பஞ்சாயத்து இந்த வாரயிறுதியில் எடுக்கப்படாது, அல்லது, விஜய் சேதுபதி இந்த வாரயிறுதியில் ஸ்கூபிடூவின் புகழைப் பாடுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.

இப்போதுதான் நமக்கு இன்னொரு சந்தேகம் வருகிறது. ஒருவேளை, ’மாடு மேய்ச்சா மாதிரியும் ஆச்சு, மச்சானுக்குப் பொண்ணு பார்த்தா மாதிரியும் ஆச்சு' என்பது போல சிந்தித்து, தம் நண்பன், வேலையும், புகழ் வெளிச்சமுமின்றிக் கிடக்கிறானே… அவனுக்கு உதவி செய்வோம், அவன் ஏற்கனவே ஒரு திறமைசாலி, கப்பு ஜெயிக்கவும் கூட வாய்ப்பு இருக்கிறது என்ற காரணத்தாலும், நிகழ்ச்சி ஏற்கனவே ரொம்ப லட்சணமாய் போய்க் கொண்டிருக்கிறது. இதில் சரியான ஹிண்ட்ஸ் கொடுத்து பிரஜினையும், சான்ட்ராவைவும் உள்ளே அனுப்பினால் விளையாட்டும் களைகட்டிவிடும் என்ற காரணத்தாலும், ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடிக்கலாம்’ என்று நினைத்து விஜய் சேதுபதியே சிபாரிசு செய்து இவர்களை பிக்பாஸுக்குள் அனுப்பி இருப்பாரோ என்று தோன்றுகிறது. இங்குதான் விஜய் சேதுபதி ஒரு தவறு செய்திருக்கிறார். வெளியே என்னதான் திறமைசாலியாகவும், டிப்ளமேட்டிக்காகவும், நல்லவராகவும் ஒருவர் இருந்தாலும், அது எதுவுமே இந்த வீட்டுக்குள் சரிப்பட்டு வராது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸாக இருப்பதோ, நிகழ்ச்சி நடத்தும் ஹோஸ்ட்டாக இருப்பதோ போலல்ல, உள்ளே போட்டியாளர்களாக இருப்பது. இந்த வீடு, மனதின் உள்ளுக்குள் இருக்கும் அத்தனை அழுக்குகளையும் வெளியே கொண்டு வந்து போட்டுவிடும். அதுவே, வெளி உலகத்தில் ஒரு பிரச்சினை நடந்தால், அது ஒரு சிலருக்குள் முடிந்துபோய், சம்பந்தப்பட்டவரே அதைப்பற்றி ஆய்ந்து தன்னைத் திருத்திக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும். நாமெல்லோருமே, அப்படியான தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டுதான் முதிர்ச்சியை அடைகிறோம். ஆனால், அதுவே இந்த வீட்டுக்குள் நடந்தால் ஒருவரின் இமேஜ், பொதுவெளியில் சரிவதைத் தடுக்கவே முடியாது. அடிப்படையிலேயே, எவ்விதமான கெடு சிந்தனையும் இல்லாத தூய்மையானவர்கள் மட்டும்தான் இந்த வீட்டில் ஜொலிப்பார்கள், ஓவியாவைப் போல! ஆனால், அவர்களாலும் இந்த வீட்டுக்குள் இருக்கவும் முடியாது, ஜெயிக்கவும் முடியாது.

Daily Task
Daily Task@jiohotstar

இந்த விளையாட்டில் ஜெயிக்க வேண்டுமானால், கொஞ்சம் நல்ல சிந்தனை, பிறர் மீது அன்பு, கண்ணியம் இவற்றோடு, மனமுதிர்ச்சி, விட்டுக்கொடுத்தல், கட்டுப்பாடு, துணிச்சல், வெளிப்படையான அணுகல், நல்ல பேச்சுத்திறன், மன அழுத்தத்தைக் கையாளும் திறன் இவற்றின் சரியான கலவையாக ஒருவர் இருக்க வேண்டும். அப்படியான ஆட்கள் சமூகத்தில் மிகவும் குறைவு. பவா செல்லதுரை போன்ற நபர்களே கூட அவர்களின் கோபத்தின் மீதான கட்டுப்பாடு இல்லாமல் போனதால், சிந்தை தவறிப்போய் நடந்துகொண்டதைப் பார்த்திருக்கிறோம். இதுவரை ஜெயித்தவர்களுக்கு இந்தக் குணமெல்லாம் இருந்ததா கேட்டால், சக போட்டியாளர்களை விட பெட்டராக இருந்திருக்கலாம் என்பது நம் கருத்து. இப்படி இந்த நிகழ்ச்சியை ஆய்ந்து அணுகி, கருத்துச் சொல்லும் நம்மாலோ, விஜய் சேதுபதியாலோ கூட உள்ளே இருக்க முடியாது. நான்கே நாட்களில் நம் குட்டு வெளிப்பட்டு விடும்! இந்த நிலையில், விஜய் சேதுபதிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பிரஜினையும், சான்ட்ராவையும் கைவிடுவது மட்டும்தான்! மாறாக, அவர்களைக் காப்பாற்ற நினைத்தால், அது அவர்களையும் கெடுத்து, தானும் கெட்டு, நிகழ்ச்சியையும் கெடுப்பதாகத்தான் அமையும்!

Puthuyugam
www.puthuyugam.com