

இன்று பிரிட்டனுக்கும் ஐரோப்பியக் கண்டத்துக்கும் இடையில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல்தான் இருக்கிறது. வடகடலில் கப்பல்கள் செல்கின்றன. மீன்பிடி படகுகள் மீன் பிடிக்கின்றன. கடலுக்கு அடியில் எண்ணெய்- எரிவாயு எடுத்தல், கடலுக்கு மேலே காற்றாலைத் திட்டங்கள் என நவீன உலகின் பல்வேறு நடவடிக்கைகள் அங்கே நடக்கின்றன. ஆனால் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் கடல் இல்லை. அங்கு மனிதர்கள் நடமாடினார்கள். ஆறுகளும் ஏரிகளும் இருந்தன. சதுப்பு நிலங்களும் புல்வெளிகளும் இருந்தன. சில பகுதிகளில் அடர்ந்த காடுகளும் இருந்தன. அந்தக் கடல் கொண்டுபோன நிலப்பரப்புக்குத்தான் டாகர்லேண்ட் (Doggerland) என்று பெயர். சமீபத்திய ஆய்வுகள் டாகர்லேண்டின் ஒரு பகுதி பிரிட்டனுக்கும் ஐரோப்பியக் கண்டத்துக்கும் இடையே ஒரு பரந்த சமவெளியாக இருந்ததை நிரூபிக்கின்றன.
கடைசி பனிக்காலத்தில் வடக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதி பனியால் மூடப்பட்டிருந்தது. உலகின் ஏராளமான நீர், பனிப்பாறைகள் உருவிலிருந்ததால், கடல் மட்டம் இன்றைய அளவைவிட மிகவும் தாழ்ந்திருந்தது. சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து புவி வெப்பமடையத் தொடங்கியபோது பனிப்பாறைகள் உருகி, அதன் விளைவாக கடல் மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது. அன்று நிலப்பரப்பாக இருந்த பல பகுதிகள் இப்போது கடலுக்குள் இருப்பதற்கு அதுவே காரணம். அந்த நிலப்பரப்புகளில் ஒன்றுதான் டாகர்லேண்ட்.
அங்கு வாழ்ந்தவர்கள் வேட்டையாடி சமூக மக்கள். அவர்கள் நிரந்தரமான குடியிருப்புகளைக் உருவாக்கிடவில்லை. ஆனால், மான் உள்ளிட்ட விலங்குகளை அவர்கள் வேட்டையாடினர்; மீன் பிடித்தனர்; தாவரங்களையும் பிற இயற்கை வளங்களையும் பயன்படுத்தினர். மெல்ல மெல்ல அந்த இடம் மூழ்கத்தொடங்கி சில ஆயிரம் வருடங்களில் அது மூழ்கி அந்த நிலப்பரப்பு இன்றுள்ள வடிவத்துக்கு நெருக்கமாக மாறிவிட்டது.
ஆனால், கடல் ஒரு நிலப்பரப்பை அழிக்கும்போது, அதன் எல்லா தடயங்களையும் அழித்துவிடுவதில்லை. சில இடங்களில் பழைய நிலப்பரப்புகள் மண், மணல் போன்ற படிவங்களுக்குள் புதைந்துபோகின்றன. ஆக்சிஜன் குறைவான இந்தச் சூழல் மரம் போன்ற கரிமப் பொருட்கள் சிதைவதை மெதுவாக்குகிறது. அதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மரங்களின் எச்சங்கள், விதைகள், தாவர எச்சங்கள், விலங்குகளின் எலும்புகள் போன்றவை பாதுகாக்கப்படுகின்றன. அதனால்தான் அங்கே மீன் பிடிக்கும் படகுகளின் வலைகளில் சில சமயம் மீன்களோடு பதிலாக பழங்கால எலும்புகளும், மனிதர்கள் பயன்படுத்திய கருவிகளும் கிடைக்கின்றன.
இந்தக் கடலடி ஆய்வுகளுக்காக எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளுக்காக சேகரிக்கப்பட்ட புவியியல் தரவுகளைத் (seismic data) தொல்லியல் ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்தபோது, கடலடியில் புதைந்திருந்த பழைய ஆறுகள், பள்ளத்தாக்குகள், ஏரிகள், கடற்கரைப் பகுதிகள் போன்ற நிலப்பரப்புகளின் வடிவங்கள் தெரிந்தன. அத்தோடு அந்தத் தகவல்கள் காலநிலைத் தரவுகள், கடல் மட்ட மாற்றங்களின் மாதிரிகள், தொல்லியல் கண்டுபிடிப்புகள், படிமங்களின் ரேடியோகார்பன் தேதி போன்ற பல தகவல்களுடன் இணைக்கப்பட்டு இப்போது விஞ்ஞானிகள் டாகர்லேண்ட் எப்படியிருந்திருக்கலாம் என்பதை கணினியில் மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள்.
சில இடங்களில் ஆராய்ச்சியாளர்கள் டைவிங் மூலம் நேரடியாக ஆய்வு செய்தாலும், அது சாதாரண மக்கள் ஸ்கூபா டைவிங் செய்து சுற்றுலாவாக பார்த்துக் களிக்கும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. ஆனால், அருங்காட்சியகங்கள், கண்காட்சிகள், ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் குறிப்பாக டிஜிட்டல் வடிவங்கள் மூலம் அந்த மூழ்கிய உலகையும், காடுகளையும் நாம் காண முடிகிறது.
டாகர்லேண்டின் கதை ஒரு விசித்திரமான வரலாற்றுக் கதை மட்டுமல்ல. இன்று நிலம் என்று நாம் நினைப்பது எப்போதும் நிலமாக இருந்ததில்லை என்பதையும் அது நினைவூட்டுகிறது. காடுகள் மறைகின்றன. கண்டங்கள் நகர்கின்றன. நிலங்கள் கடல்களுக்குள் மறைகின்றன. கடலுக்குள்ளிருந்து புதிய நிலங்கள் வெளிப்படுகின்றன. ஒரு கடற்கரை என்பது நிரந்தரமான கோடு அல்ல; அது தொடர்ந்து நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு எல்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.