கிளாட் (Claude) ஏஐயை உருவாக்கிய ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம் 2026 ஆகஸ்ட் 2 முதல் அதிகாரப்பூர்வமாக ஒரு தொழில்நுட்ப வேலையைச் செய்திருக்கிறது. அதாவது ஏஐ உருவாக்கும் படங்களில், குறியீடுகள் இடப்படுவதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், இப்போது ஏஐ உதவியோடு எழுதப்படும் கட்டுரைகள் மற்றும் எழுத்துப் பணிகளிலும் மனிதனுக்குத் தெரியாத நுணுக்கமான அடையாளக் குறியீட்டை ஏற்படுத்தியிருக்கிறது. இது காப்பி பேஸ்ட் செய்தாலும் நீங்காத ஒரு நுட்பமான வேலையாகும்.
இது, எப்படி வேலை செய்கிறது?
இந்த முறையில் எழுதப்படும் ஒரு பக்கத்தில் எந்த மறைமுக எழுத்தோ, குறியீடோ சேர்க்கப்படாது. மாறாக விநோதமான தொடர்பு இருக்கும்படியாக எழுத்துகள், அல்லது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து ஏஐ எழுதுகிறது. அதனால் இதை மனிதர்களால் உணரவும் முடியாது, காப்பி பேஸ்ட் செய்யும் போதும் குறியீடு தொடர்கிறது. இதை மீண்டும் ஒரு ஏஐயால் மட்டுமே டிகோடிங் செய்ய முடியும். இது ஏற்கனவே கூகுள் டீப்மைண்ட் உருவாக்கிய சிந்த்ஐடி (SynthID-Text) எனும் நுட்பத்தின் மேம்பட்ட வடிவம் என்று சொல்லப்படுகிறது.
இதன் நோக்கங்கள் என்னென்ன?
1. ஐரோப்பிய ஒன்றியத்தின் AI சட்ட வரையறைகளின் படி, ஒரு AI உருவாக்கும் படைப்புக்கு வெளிப்படையான அடையாளம் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இதற்கு இணங்கவே இந்த நுட்பம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
2. AI- உருவாக்கும் படைப்புகள் பெருகிவரும் இன்றைய சூழலில், ஒரு படைப்பு யாரால் உருவாக்கப்பட்டது, எங்கிருந்து வந்தது என்பதற்கான அடையாளம் அவசியம் என்பது தொழில்நுட்பவியலாளர்களின் கருத்து. ஏனென்றால் ஏஐக்கள் எப்போதும் ஏற்கனவே இருக்கும் படைப்புகள் மூலமாகவே, பயிற்சி செய்து தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்கின்றன. அவற்றுக்கு மீண்டும் மீண்டும் அவை உருவாக்கிய பன்முகத்தன்மையற்ற, தனித்துவமற்ற படைப்புகளே கிடைத்தால் ஒரு கட்டத்தில் அவை தரமிழந்து போகும் அபாயமிருக்கிறது. ஆகவே, ஏஐ உருவாக்கிய படைப்புகளை அவை கண்டறிந்து அதை பயிற்சிக்கு எடுத்துக்கொள்ளாமல் ஏஐயே தவிர்த்துவிடும்.
3. பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கள் பிராஜக்டுகளை முழுவதுமாக ஏஐ மூலமாக எழுதி உருவாக்கிக் கொள்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு உலகெங்கும் பெருகிவருகிறது. இதைத் தவிர்க்கவும், மாணவர்கள் சொந்தமாக பிராஜக்டுகளை உருவாக்கவும் இந்தத் தீர்வு உதவும்.
4. ஆந்த்ரோபிக் மட்டுமல்லாது, மிக விரைவில் மெட்டா, மைக்ரோசாஃப்ட், ஓபன் ஏஐ உட்பட அனைத்து நிறுவனங்களும் இதை மேற்கொள்ளவிருக்கின்றன.
இது மனிதர்களின் தனிப்பட்ட அடையாளத்தையா காட்டுமா?
இல்லை என்று ஆந்தோபிக் தெளிவாகச் சொல்கிறது. இந்தக் குறியீட்டால் எந்தவொரு தனிநபரோ, நிறுவனமோ, குறிப்பிட்ட உரையாடலையோ அடையாளம் காணப்படாது. இது ’இது AI உருவாக்கியதா’ என்பதை மட்டுமே கண்டறியப் பயன்படும். அதே நேரம், இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, குறிப்பாக ஆன்லைனில், பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ’என் சொந்த சிந்தனையை, படைப்பை சிறிதளவு AI உதவியோடு மேம்படுத்தினாலும், அது AI- படைப்பு என்று முத்திரை குத்தப்படுமோ’ என்ற கவலையும், ’இது தவறான கிரியேடிவ் சுதந்திரத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்குமோ’ என்ற அச்சமும் அதில் இருந்தது. ஆனால், இது ஒரு ஸ்பை டூல் இல்லை, மொத்த சமூக நலனையும், ஏஐகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நுட்பம். ஒரு கட்டுரை ஏஐயால் எழுதி வாங்கப்பட்டு, அதில் எத்தனை தூரம் எடிட்டிங் செய்யப்படுகிறதோ, அத்தனை தூரம் அதன் குறியீடு பலமிழக்கும் என்று ஆந்த்ரோபிக் சொல்கிறது. மிகச் சிறிய ஏஐ தலையீடு இருந்தால், டிகோடிங் நுட்பத்தால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு குறியீடும் மிகப் பலவீனமாக இருக்கும் என்று சொல்கிறது ஆந்த்ரோபிக்.
(மேலும் விவரங்களுக்கு: anthropic.com/news/claude-text-watermark)