புரட்சி தொடங்கும் இடம்! #RosaParks

ரோசா பார்க்ஸ் பேருந்தில் எழுந்திருக்க மறுத்தது தற்செயலாக நிகழ்ந்த ஒரு தனிப்பட்ட கோபத்தின் வெளிப்பாடு அல்ல. அதற்குப் பின்னால் ஒரு சமூகத்தின் அநீதியைப் பற்றிய புரிதலும், அதற்கு எதிராக நிற்க வேண்டும் என்ற அரசியல் உணர்வும் இருந்தன.
Rosa Parks
Rosa Parks
Published on

ஒரு பேருந்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள். அப்போது ஒருவர் வந்து, “எழுந்திருங்கள். உங்கள் இருக்கை இன்னொருவருக்குத் தேவைப்படுகிறது” என்கிறார். நீங்கள் எழுந்துகொண்டு அதை விட்டுக்கொடுக்க மறுக்கிறீர்கள். அதற்காக போலீஸ் உங்களைக் கைது செய்கிறது. இது இன்றைய காலத்தில் நடக்காது. நடந்தாலுமே, இனவெறி, நிறவெறி, மதவெறி பற்றிய வரலாறுகளை அறிந்துகொள்ளாத நமக்கு வியப்பாகவே இருக்கும்.

ஆனால், 1955-ல் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் இதுதான் நடந்தது. அந்தப் பேருந்தில் இருந்த பெண்ணின் பெயர் ரோசா பார்க்ஸ் (Rosa Parks). ஒரு சிறிய நிகழ்வு. ஆனால், ஒரு பெரிய போராட்ட வரலாற்றில் ஒரு தீப்பொறியைப்போல தொடக்கப்புள்ளியாக அமைந்த நிகழ்வு.

ரோசா பார்க்ஸ் 1913-ம் ஆண்டு அலபாமாவில் பிறந்தவர். அப்போது அமெரிக்காவின் தென் மாநிலங்களில் கறுப்பின மக்களுக்கு எதிராகக் கடுமையான இனப்பாகுபாடும், நடைமுறைகளும் இருந்தன. சட்டங்களும் கூட அவற்றுக்குத் துணைபோவதாகவே இருந்தன. பள்ளிகள், உணவகங்கள், பொதுக் கட்டிடங்கள், போக்குவரத்து எனப் பொது இடங்களில் வெள்ளையர்களுக்கும், கறுப்பின மக்களுக்கும் தனித்தனி விதிமுறைகள் இருந்தன. பேருந்துகளிலும் இந்தப் பிரிவினை இருந்தது. பேருந்தின் முன்பகுதி வெள்ளையர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. கறுப்பின மக்கள் பின்பகுதியில் அமர வேண்டும். பேருந்தில் வெள்ளையர்கள் அதிகமாகிவிட்டால், கறுப்பினப் பயணிகள் தங்கள் இருக்கையை விட்டுக்கொடுத்து எழுந்து நிற்க வேண்டிய நிலையும் இருந்தது.

1955 டிசம்பர் 1 அன்று, ரோசா பார்க்ஸ் மாண்ட்கோமெரி (Montgomery) நகரப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது வெள்ளையர்களுக்கான இருக்கைகள் நிரம்பிவிட்டன. ஒரு வெள்ளைப் பயணிக்காக ரோசா பார்க்ஸும், அவருடன் இருந்த மற்ற கறுப்பினப் பயணிகளும் தங்கள் இருக்கைகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ஓட்டுநர் உத்தரவிட்டார். மற்றவர்கள் முதலில் எழுந்தனர். ரோசா பார்க்ஸ் மட்டும் எழுந்திருக்கவில்லை. ஓட்டுநர் மீண்டும் கேட்டார். அவர் மீண்டும் மறுத்தார். அதன் பிறகு காவல்துறை அழைக்கப்பட்டது. ரோசா பார்க்ஸ் கைது செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, அந்த நகரின் கறுப்பின மக்கள் பேருந்துகளைப் புறக்கணிக்க முடிவு செய்தனர். பேருந்தில் பயணம் செய்யாமல் நடந்து செல்வது, கார்களில் கூட்டாகப் பயணம் செய்வது என்று போராட்டம் தொடங்கியது. சாதாரனமாகத் தொடங்கிய இந்தப் புறக்கணிப்பு 381 நாட்கள் நீடித்தது. வயதான பெண்கள் கூட தெருக்களில் நடந்து சென்றார்கள். இதுதான் வரலாற்றில் Montgomery Bus Boycott என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் போதுதான் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தேசிய அளவில் ஒரு முக்கியமான தலைவராக உருவெடுத்தார். அவர் தலைமையில் நடந்த இந்தப் போராட்டம், அமெரிக்க குடிமை உரிமைப் போராட்டத்திற்கு ஒரு புதிய வேகத்தைக் கொடுத்தது. இறுதியில் சட்டப் போராட்டமும் வெற்றி பெற்றது. அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, மாண்ட்கோமெரி நகரப் பேருந்துகளில் இனப்பிரிவினை சட்டவிரோதமானதாக மாறியது. இதற்குப் பின்னால் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்த கறுப்பின மக்களின் போராட்டம், அமைப்பு ரீதியான செயல்பாடுகள், சட்டப் போராட்டங்கள், சமூக இயக்கங்கள் எனப் பல விஷயங்கள் இருந்தன. ஆனால் ரோசா பார்க்ஸின் அந்தச் செயல், அந்தப் போராட்டத்திற்கு ஒரு மிகப்பெரிய அடையாளத்தை வழங்கியது.

இங்கேதான் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். ரோசா பார்க்ஸ் ஒரு சாதாரண, எளிமையான பெண்தான். ஆனால், அவர் சமூக அநீதிகளைப் பற்றிய அரசியல் அறிவு கொண்டிருந்தார். NAACP எனப்படும் குடிமை உரிமை அமைப்புடன் அவர் ஏற்கெனவே தொடர்பில் இருந்தார். அதனால், அவர் அன்று பேருந்தில் எழுந்திருக்க மறுத்தது தற்செயலாக நிகழ்ந்த ஒரு தனிப்பட்ட கோபத்தின் வெளிப்பாடு அல்ல. அதற்குப் பின்னால் ஒரு சமூகத்தின் அநீதியைப் பற்றிய புரிதலும், அதற்கு எதிராக நிற்க வேண்டும் என்ற அரசியல் உணர்வும் இருந்தன.

Rosa parks bus
Rosa parks bus

மேலும், எல்லா போராட்டங்களையும் அதிகார வர்க்கம் எப்படியாவது கொச்சைப்படுத்தவே முயலும். அப்படியே, ’அன்று அவர் மிகவும் களைப்பாக இருந்ததால் எழுந்திருக்க மறுத்தார்’ என்ற கதை பின்னாளில் ஊடகங்களில் பிரபலமாக்கப்பட்டது. ஆனால், ரோசா பார்க்ஸ் தன்னுடைய சுயசரிதையில் இதை மறுத்தார். உடல் களைப்பைவிட, அநீதிக்கு அடிபணிந்து கொண்டிருப்பதுதான் உண்மையான களைப்பு என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய கைது ஒரு தனிப்பட்ட சம்பவமாக முடிந்துவிடவில்லை. அவர் பயணம் செய்த பேருந்தும், அவர் அமர்ந்திருந்த இருக்கையும் பின்னாளில் வரலாற்றின் அடையாளங்களாக மாறின. அந்தப் பேருந்து இன்று அமெரிக்காவின் ஹென்றி ஃபோர்டு அருங்காட்சியகத்தில் (Henry Ford Museum) பாதுகாக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சின்னங்கள் மூலமாக வரலாறுகள் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட வேண்டும். இல்லையென்றால், அவை மீண்டும் நிகழும்!

ரோசா பார்க்ஸின் கதை என்பது “எனக்கான இருக்கையைத் தாருங்கள்”, “எனக்கான சலுகையைக் கொடுங்கள்” என்று கேட்ட பெண்ணின் கதையல்ல. “இது அநீதி. எனவே நான் இதற்கு இணங்க மாட்டேன்” என்று சொன்ன ஒரு துணிவின் கதை. அதனால்தான் அது ஒரு தனிப்பட்ட மறுப்பாக இல்லாமல், ஒரு சமூகத்தின் மறுப்பாக மாறியது. அநீதிக்கு எதிராகப் போராடுவது என்பது எப்போதும் கையில் ஆயுதம் எடுத்துக்கொண்டிருப்பதாகவே இருக்க வேண்டியதில்லை. சில சமயங்களில், வரலாற்றை மாற்றியமைக்கும் ஒரு தருணம் இப்படித்தான் மிகவும் அமைதியாக, மிக எளிமையானதாகவும்கூட நடந்துவிடுகிறது.

Puthuyugam
www.puthuyugam.com