கவனிச்சிருக்கீங்களா.. விம்பிள்டன் கோப்பையில் ஓர் அன்னாசிப்பழம்!

கோப்பையின் உச்சியில் ஓர் அன்னாசிப்பழம் இருப்பது நாமெல்லாம் கவனிக்காமல் கடந்து சென்றுவிடும் ஒரு சிறிய சுவாரசியம். ஆனால், அது தற்செயலான அலங்கார வேலைப்பாடல்ல. அதற்குப் பின்னால் ஒரு காலகட்டத்தின், கலாச்சாரப் பொருளும் அடங்கியிருக்கிறது.
Wimbledon trophy
Wimbledon trophy
Published on

டென்னிஸ் உலகின் மிக உயரிய பட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுவது விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டம். உலகின் தலைசிறந்த வீரர்கள் பலரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது அந்த வெற்றிக் கோப்பையைத் தங்கள் கைகளில் ஏந்த வேண்டும் என்று கனவு காண்பார்கள். பல தலைமுறை சாம்பியன்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் அந்தக் கோப்பையை நீங்கள் உற்றுப் பார்த்திருக்கிறீர்களா? அதன் உச்சியில் இருப்பது என்ன என்பதைக் கவனித்திருக்கிறீர்களா?

ஓர் அன்னாசிப்பழம்!

புகழ்பெற்ற டென்னிஸ் கோப்பைகளுள் ஒன்றான விம்பிள்டன் கோப்பையின் உச்சியில் எப்படி ஓர் அன்னாசிப்பழம் இடம் பிடித்தது?

முதலில் அந்தக் கோப்பையைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம். 1877-ல் தொடங்கி விம்பிள்டன் போட்டிகள் நடக்கின்றன. முதலில் வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வந்த கோப்பைகள், 1887-ம் ஆண்டு முதல் சேலஞ்சர் கோப்பை என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இதுவே ஆடவர் ஒற்றையர் (Gentlemen’s Singles Challenge Cup) போட்டிக்கானதாகும். இந்தக் கோப்பை வெள்ளியில் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டது. சுமார் 44.5 சென்டிமீட்டர் உயரமும், அதன் அடிப்பீடத்தைத் தவிர்த்து சுமார் 3.5 கிலோ எடையும் கொண்டது. அதில் “The All England Lawn Tennis Club Single Handed Championship of the World” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் இருபுறமும் கைப்பிடிகள் உள்ளன. மூடியின் கீழ் சிறகுகள் போன்ற அமைப்பும், கோப்பை முழுவதும் மலர் வடிவங்களும், பாரம்பரிய அலங்கார வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. அதன் உச்சியில்தான், இவை அனைத்துக்கும் மேலாக ஓர் அன்னாசிப்பழம் அமர்ந்திருக்கிறது.

தொடக்க காலத்தில் தொடர்ந்து 3 முறை வென்றால் இந்தக் கோப்பையை ஒரு வீரர் சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது. அதன் தொடக்க கால கட்டத்திலேயே, வில்லியம் ரான்ஷா (William Renshaw) என்பவர் இரண்டு தடவைகள் தொடர்ச்சியாக 3 தடவைகள் வென்று இரண்டு கோப்பைகளை வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டார். கம்பெனிக்குக் கட்டுபடியாகவில்லையோ என்னவோ பின்னர் விதிமுறைகளை மாற்றி, அது சுழற்கோப்பையாக மாற்றப்பட்டது. பதிலாக, வென்றவர்களுக்கு அந்த ஒரிஜினல் கோப்பையின் அளவில் முக்கால் பங்கு அளவில் இருக்கும் ரெப்ளிகா கோப்பை வழங்கப்பட்டு வருகிறது.

இப்போது அன்னாசிப்பழத்துக்கு வருவோம்.

Wimbledon trophy
Wimbledon trophy

விம்பிள்டன் கோப்பை மூடியின் உச்சியில் ஒரு சிறிய அன்னாசிப்பழம் அலங்காரச் சிற்பமாக இடம்பிடித்திருக்கிறது.  இன்று அன்னாசிப்பழம் என்பது நமக்கு சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் ஒரு பழம். ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் அதன் நிலை அப்படி இல்லை. அன்னாசிப்பழம் தென் அமெரிக்காவைச் சேர்ந்த, வெப்பமண்டலப் பகுதியில் விளையும் ஒரு பழமாகும். ஐரோப்பியர்களுக்கு அது புதிதாக அறிமுகமான காலத்தில், அதை வளர்ப்பதும், தொலைதூர நாடுகளிலிருந்து கொண்டு வருவதும் எளிதான காரியமாக இருக்கவில்லை. அதனால் அது விலை உயர்ந்த, அரிதான, ஆடம்பரமான உணவுப்பொருளாகக் கருதப்பட்டது. அதன் வடிவமும் தனித்துவமானதாக இருந்தது. மேலே கிரீடம் போன்ற இலைகள், கீழே பெரிய பழம். அதனால் ஆடம்பரம் மற்றும் செல்வச் செழிப்பின் அடையாளமாகவும் கருதப்பட்டது. விம்பிள்டன் அமைப்பின் சொந்த விளக்கத்தில், கோப்பையின் உச்சியில் இருக்கும் அன்னாசிப்பழம் வரவேற்பையும் விருந்தோம்பலையும் (Welcome and Hospitality) குறிக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது, உலகின் மிக உயர்ந்த டென்னிஸ் வெற்றிக்கான கோப்பையின் உச்சியில் ஓர் அன்னாசிப்பழம் இருப்பது நாமெல்லாம் கவனிக்காமல் கடந்து சென்றுவிடும் ஒரு சிறிய சுவாரசியம். ஆனால், அது தற்செயலான அலங்கார வேலைப்பாடல்ல. அதற்குப் பின்னால் ஒரு காலகட்டத்தின், கலாச்சாரப் பொருளும் அடங்கியிருக்கிறது.

Puthuyugam
www.puthuyugam.com