கூகுளின் ஏஐ மோடு #Google AI Mode #Education

சின்னக் குழந்தைகள், ஒரு கணித வகுப்பில் என்னென்ன கற்றுக்கொள்கிறார்கள்? நினைவில் கொள்கிறார்கள் (Memory), கவனிக்கிறார்கள் (Attention), ஒப்பிடுகிறார்கள் (Comparison), தொடர்புபடுத்துகிறார்கள் (Association), காரணம் கண்டுபிடிக்கிறார்கள் (Reasoning).
Google AI Mode
Google AI Mode
Published on

நாம் மிக வேகமாக ஏஐ பயனாளர்களாக மாறிக்கொண்டிருக்கிறோம். இன்னும் நம் பள்ளிகளுக்குள் அவை நுழையவில்லை. ஆனால், மிக விரைவில் அதுவும் நடக்கலாம். ஏஐ மிகப்பரந்த அறிவு வெளியை நம் பிள்ளைகளின் கல்விக்காக திறந்து கொடுத்திருக்கிறது.  ஆர்வமும், திறனும் இருக்கும் மாணவர்களை கற்றல் வெளியில், இதுவரையில்லாத உயரங்களுக்கு ஏஐ அழைத்துச் செல்லப்போகிறது. ஆனால், அதெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயது/ வகுப்புக்குப் பிறகுதான். அதாவது சுமார் 12 வயதுக்கு மேல்/  8ம் வகுப்புக்கு மேல்தான். அடிப்படைக் கல்வியைக் கற்கும் நிலையிலிருக்கும் சின்னப் பிள்ளைகளுக்கு அது பொருந்துமா எனும் கேள்விதான் இப்போது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கியிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பள்ளிகளில், கூகுளின் தேடுபொறியோடு சேர்ந்த ஏஐ மோடு (AI Overviews / AI Mode) எனும் செயற்கை நுண்ணறிவு வசதியால் மாணவர்களின் கல்வியில் ஏற்படும் தாக்கம் மற்றும் பாதிப்புகள் குறித்துக் கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆய்வாளர்களிடையே பல விவாதங்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவின் சில அமைப்புகள் (Common Sense Media) மேற்கொண்ட ஆய்வுகளின்படி, மாணவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுப்பாடங்கள் மற்றும் கட்டுரைப் பயிற்சிகளுக்கு கூகுளின் ஏஐ மோடு நொடிகளில் முழுமையான, தயார்நிலையிலான பதில்களை அளித்துவிடுகிறது.

மாணவர்கள் சுயமாக யோசித்து, பிழை திருத்தி, கற்றுக் கொள்ளும் 'சுய கற்றல் செயல்முறை' (Productive Struggle) இதனால் அடிபட்டுப்போகிறது. இது அவர்களின் சிந்தனைத் திறன், நினைவாற்றல் மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறனைக் (Problem-solving) பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. வழக்கமான தேடலில், மாணவர்கள் பல வலைத்தளங்களைச் சென்று படித்து, தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்துத் தன் சொந்தக் கருத்தை உருவாக்க வேண்டும். ஆனால், ஏஐ மோடு நேரடியாக ஒரு சுருக்கப்பட்ட பதிலைத் தருவதால், தகவலின் மூலத்தை சரிபார்க்கும் பழக்கம் மற்றும் ’எது உண்மை, எது தவறான தகவல்?’ என ஆராயும் விமர்சனச் சிந்தனை (Critical Thinking) மாணவர்களிடம் குறைகிறது என ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் சுய ஆய்வுக் கட்டுரைகள் எழுதும்போது, AI வழிகாட்டுவதைத் தாண்டி அப்படியே நகலெடுத்துச் சமர்ப்பிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் உண்மையான மதிப்பீடு செய்வதில் ஆசிரியர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு சில நேரங்களில் தவறான தகவல்களையோ அல்லது இணையத்தில் உள்ள, பக்கச்சார்புடைய கருத்துக்களையோ உண்மையான தகவல் போலத் தொகுத்து வழங்கிவிடும் ஆபத்து உள்ளது. இதைப் புரிந்துகொள்ளாத குழந்தைகள் அந்தப் பிழையான கருத்துக்களையே உண்மை என நம்பும் வாய்ப்பும் உருவாகிறது.

இதற்காக AI தொழில்நுட்பத்தை முற்றிலும் தடை செய்ய முடியாது என்பதை உணர்ந்த பல்கலைக்கழகங்களும் பள்ளிகளும், AI Literacy -செயற்கை நுண்ணறிவைப் பாதுகாப்பாகவும் நேர்மையாகவும் பயன்படுத்துவது எப்படி?- என்ற விழிப்புணர்வை மாணவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கியுள்ளன. மேலும், வகுப்பறையிலேயே நேரடியாக விவாதித்தல் (In-class debates) மற்றும் வாய்மொழித் தேர்வுகள் (Oral exams) போன்ற முறைகளுக்கு மாறத் தொடங்கியுள்ளன.

Student AI Image
Student AI Image

சின்னக் குழந்தைகள், ஒரு கணித வகுப்பில் என்னென்ன கற்றுக்கொள்கிறார்கள்? நினைவில் கொள்கிறார்கள் (Memory), கவனிக்கிறார்கள் (Attention), ஒப்பிடுகிறார்கள் (Comparison), தொடர்புபடுத்துகிறார்கள் (Association), காரணம் கண்டுபிடிக்கிறார்கள் (Reasoning), தவறுகளைச் சரிசெய்கிறார்கள் (Error Correction), கற்பனை செய்கிறார்கள் (Imagination), பிரச்சினைகளை ஆராய்கிறார்கள் (Problem Solving) - இவையெல்லாம்தான் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை உறுதி செய்கின்றன. இந்த வேலைகளை AI செய்து கொடுத்துவிட்டால் என்ன நடக்கும்? விடை கிடைக்கும். ஆனால், மூளை வளராது.

ஒரு குழந்தையின் மூளை முதலில் சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் AI அந்த அறிவை இன்னும் உயரத்திற்கு எடுத்துச் செல்லும் சக்திவாய்ந்த கருவியாக மாற முடியும். இல்லையெனில், அடித்தளம் இல்லாத கட்டடத்தின் மீது மாடிகளைக் கட்டிக்கொண்டே போவதைப் போன்ற அபத்த நிலைதான் உருவாகும். AI அறிவைக் கொடுக்க முடியும்; ஆனால் அந்த அறிவைத் தாங்கும் மூளையின் அடித்தளத்தை உருவாக்க வேண்டியது எப்போதும் மனிதனின் கற்றல்தான்.

Puthuyugam
www.puthuyugam.com