

ஒரு போதைப்பொருள் கடத்தல்காரன் ₹100 கோடி சம்பாதிக்கிறான். ஓர் அரசியல்வாதி ஊழல் மூலம் ₹500 கோடி சேர்க்கிறான். இந்தப் பணம் எல்லாமே நோட்டுக்கட்டுகளாக அவர்களிடம் இருக்கிறது. ஆனால், அந்தப் பணத்தை அவர்கள் சுதந்திரமாகச் செலவு செய்ய முடியாது. பெரிய வீடு வாங்கினாலும், தொழில் தொடங்கினாலும், வங்கியில் செலுத்தினாலும் ஒரே ஒரு கேள்வியை அவர்கள் நிச்சயம் சந்தித்தாக வேண்டும்.
'இந்தப் பணம் எங்கிருந்து வந்தது?'
அந்தக் கேள்விக்கான உண்மையான பதிலை மறைத்து, சட்டவிரோதமாகக் கிடைத்த அந்தப் பணத்தை, சட்டப்பூர்வமாகச் சம்பாதித்தது போல மாற்றும் செயல்முறையே மணி லாண்டரிங் (Money Laundering) எனப்படுகிறது. 'லாண்டரிங்' என்றால் துணி துவைப்பது. அழுக்கான துணியைத் துவைத்து சுத்தமாக்குவது போல, 'அழுக்கான-கறுப்பான' பணத்தைச் 'சுத்தமான-வெள்ளையான' பணமாக மாற்றுவதால்தான் இதற்கு இந்தப் பெயர்.
மணி லாண்டரிங்கின் முழு செயல்முறையையும் மூன்று கட்டங்களாகப் பிரித்துப் புரிந்துகொள்ளலாம். உட்புகுத்துதல் (Placement), சிதறடித்தல் (Layering), ஒருங்கிணைத்தல் (Integration).
முதல் கட்டம்: உட்புகுத்துதல் (Placement)
சுந்தர்* என்ற ஒருவனிடம் (*கற்பனைப் பெயர்) சட்டவிரோதமாகக் கிடைத்த ₹10 கோடி ரொக்கப் பணம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பணத்தை அப்படியே அவன், தனது வங்கிக் கணக்கில் செலுத்த முடியாது. வங்கி உடனே அதன் வருவாய் ஆதாரத்தைப் பற்றிக் கேட்கும். ஆனால், அந்தப் பணத்தை பயன்படுத்த வேண்டுமானால் முதலில் அதை, வங்கி போன்ற சட்டப்பூர்வ நிதி அமைப்புக்குள் நுழைத்தாக வேண்டும். முதலில், இந்தியாவில் எந்தப் பெரிய தொகை ஒரே தடவையில் வங்கியில் பரிமாற்றப்பட்டால் அரசுக் கண்காணிப்பில் வந்து விடுவோமோ, அதைவிடச் சிறிதான பங்குகளாகப் பிரிக்கப்பட்டு, சுந்தரின் அந்தப் பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். அதில் தனி நபர்களின் வங்கிக் கணக்குளும் இருக்கலாம். சினிமா தியேட்டர், கார் பழுதுநீக்கும் ஒர்க்ஷாப்ஸ், ஹோட்டல் போன்ற வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அத்தனை எளிதாக கணக்கிட முடியாத தொழில் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளாகவும் இருக்கலாம்.
இரண்டாவது கட்டம்: சிதறடித்தல் (Layering)
இப்போது பணம் வங்கிக்குள் வந்துவிட்டது. ஆனால், இன்னும் ஆபத்து இருக்கிறது. இந்த நிலையில் விசாரணை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தால், அதன் தடயத்தைப் பின்தொடர்ந்து, அது முதலில் சுந்தரிடமிருந்துதான் வந்தது என்பதைக் கண்டுபிடித்துவிடுவார்கள். அதனால்தான், இப்போது அந்தப் பணம், முதலில் செலுத்தப்பட்ட வங்கிகளிலிருந்து, வேறு வங்கிக் கணக்குகளுக்கு தொடர்ந்து நகர்த்தப்படுகிறது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு சட்டபூர்வமான காரணமும் உருவாக்கப்படுகிறது. 'ஆலோசனைக் கட்டணம்', 'முதலீடு', 'கடன் திருப்பிச் செலுத்தல்', 'இறக்குமதிச் செலவு', 'பங்குமுதலீடு' என ஒவ்வொரு கட்டத்திலும் ஆவணங்கள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக வங்கி மற்றும் வரிச் சட்டங்கள் சாதகமாக இருக்கும் நாடுகளின் வங்கிக் கணக்குகளும் இதற்குள் அடங்கும். பணத்தை நகர்த்துவதைவிட, அதன் உண்மையான வரலாற்றைக் குழப்புவதுதான் இங்கே முக்கியம்.
மூன்றாவது கட்டம்: ஒருங்கிணைத்தல் (Integration)
இப்போது பணத்தின் உண்மையான தடயம் மிகவும் மங்கிப்போயிருக்கும். சட்டப்பூர்வமாகவும் மாறியிருக்கும். இனி, அடுத்ததாக அந்தப் பணம் சுந்தருக்குப் பயன்படும் வண்ணம் மீண்டும் சட்டப்பூர்வமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அதனால் அந்தப் பணம் எல்லாம் இப்போது சில குறிப்பிட்ட நிறுவனங்களை நோக்கித் திசை திருப்பப்படும். அவை, ஷெல் நிறுவனங்கள் எனப்படும் போலி நிறுவனங்களாக இருக்கலாம். அல்லது லக்கி பாஸ்கரில் வரும் ஊறுகாய் எக்ஸ்போர்ட் நிறுவனமாக இருக்கலாம். ஊறுகாய் எக்ஸ்போர்ட் செய்யப்படுவது நிஜமாகத்தான் இருக்கும். ஆனால், அவற்றின் ஆர்டர், டெலிவரி, மதிப்பு எதுவுமே உண்மையாக இருக்காது. அல்லது விளிம்புநிலை மக்களுக்கான சமூகசேவை நிறுவனங்களாக இருக்கலாம். இப்படி இறுதியாகப் பணம் வந்து சேரும் நிறுவனங்களோடு நமது சுந்தருக்குத் நேரடித் தொடர்பு இருக்கும். இப்போது அந்த நிறுவனங்கள் சுந்தருக்கு பணத்தையும், சேவையையும் பல வடிவங்களில் வழங்கத்தொடங்கும். அது வணிக லாபமாக இருக்கலாம், சம்பளமாக இருக்கலாம், டிவிடெண்டாக இருக்கலாம், ஆலோசனைக் கட்டணமாக இருக்கலாம். அல்லது அந்தப் பணத்தால் வாங்கப்பட்ட வீடு, கார் போன்ற சொத்துகளாக இருக்கலாம். இப்போது சுந்தர் செலவு செய்வது போதைப்பொருள் விற்றுக் கிடைத்த பணத்தை அல்ல. ஆவணங்களின்படி அது இப்போது அவனது சட்டபூர்வமான வருமானமாகிவிட்டது.
ஏன் இது மிக ஆபத்தானது?
மணி லாண்டரிங் என்பது பணக்காரர்களின் பிரச்சினை என்று சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் அது நம் எல்லோருடைய பிரச்சினை. ஏனென்றால், இந்தச் செயல்முறையால்தான் போதைப்பொருள் கும்பல்கள் தொடர்ந்து இயங்க முடிகிறது. ஊழலில், மோசடிகளில் சம்பாதித்த பணம் பாதுகாப்பாக மாறுகிறது. பயங்கரவாத அமைப்புகள்கூட தங்களின் நிதியை மறைக்க இதுபோன்ற முறைகளைப் பயன்படுத்துகின்றன. போதைப்பொருள், பயங்கரவாதம், ஊழல், மோசடி, கொள்ளை அனைத்தும் மக்களாகிய நம்மை நேரடியாகப் பாதிக்கக்கூடிய குற்றங்கள். ஒரு குற்றவாளிக்கு அந்தக் குற்றத்தில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தவும் முடியும்போதுதான் அந்தக் குற்றம் உண்மையில் வெற்றி பெறுகிறது. அந்த வாய்ப்பைத்தான் மணி லாண்டரிங் உருவாக்குகிறது.
அதனால்தான் பல உலக நாடுகளும், இன்று மணி லாண்டரிங்கை மிகக் கடுமையான பொருளாதாரக் குற்றமாகக் கருதுகின்றன. மணி லாண்டரிங் என்பது குற்றத்தின் தடயங்களை மறைக்கும் செயல்முறை. ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு, குற்றங்களைக் கண்டறிந்து தண்டிப்பது மட்டுமல்ல; அவற்றின் பணப்பாதையைக் கண்டுபிடித்து முடக்குவதும் மிக அவசியமாகிறது.