இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்... அவர் செய்தது என்ன?

இந்திய பிரிவினையை கடுமையாக எதிர்த்தார். ஆனால், அது நடந்து விட்ட போது, டெல்லியின் ஜும்மா மசூதியின் படிகளில் அமர்ந்து கொண்டு , தாய்நாட்டை விட்டு போக வேண்டாமென்று முஸ்லிம் மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
Maulana Abul Kalam Azad with nehru
Maulana Abul Kalam Azad with nehru
Published on

கடந்த 1947 ஆகஸ்ட் மாதம்15 - ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்றது. இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். இவரது, அமைச்சரவையில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இடம் பெற்றவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் (Maulana Abul Kalam Azad). கடந்த 1958- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அபுல் கலாம் ஆசாத் இறக்கும்வரை, இந்தியாவின் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.

பள்ளிக்கூடம் பக்கமே எட்டிப் பார்க்காத இவர்தான் ஐஐடி (IIT) கரக்பூர், பல்கலைக்கழக மானியக் குழு (UGC), சாகித்ய, லலித் கலா மற்றும் சங்கீத நாடக அகாடமிகள் ஆகியவற்றை உருவாக்கினார். தொழில்நுட்பக் கல்வி, வயது வந்தோர் கல்வி, இலவச மற்றும் கட்டாயப் பள்ளிப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி, பெண்கள் கல்வி மற்றும் கல்வி உதவித்தொகைகள் வழங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

''எனது தந்தை மௌலானா கைருதீனுக்கு (Maulana Khairuddin) மேற்கத்திய கல்வியின் மீது நம்பிக்கையில்லை. பழைய வாழ்க்கை முறையையே அவர் விரும்பினார். என்னை மதராசாவுக்குக் கூட அனுப்பவில்லை. எனக்கு வீட்டிலேயே கல்வி கற்றுத் தந்தார். இதனால் வகுப்பறைக்குள் நான் நுழையவே இல்லை'' என்று தனது தந்தை குறித்து அபுல் கலாம் ஆசாத் குறிப்பிட்டுள்ளார். இப்படி, பள்ளி பக்கமே ஒதுங்கியிராத ஒருவர்தான், பதினோரு ஆண்டுக்காலம் இந்தியாவின் நவீன கல்வி வளர்ச்சிக்காக உழைத்தார்.

''பள்ளிப் பக்கம் போகவில்லையென்றாலும், ஆசாத் தனது 10 -ஆவது வயதிலேயே ஒரு பாரசீக அகராதியை உருவாக்கும் பணியைத் தொடங்கியிருந்தார்.12வது வயதிலேயே ஆரம்பக் கல்வியை கற்று முடித்து விட்டார். இளம் வயதிலேயே கவிதைகள் அடங்கிய கவிதை இதழையும் வெளியிட்டு வந்தார். 15வது வயதில், அவர் 'லிசான்-உஸ்-சித்க்' (Lisan-us-Sidq) என்ற மாத இதழின் ஆசிரியராகவும் இருந்தார் '' என்று வரலாற்றாசிரியர் எஸ். இர்பான் ஹபீப் (Irfan Habib) தெரிவித்துள்ளார்.

அபுல் கலாம் ஆசாத் இளைஞராக வளர்ந்து, மகாத்மா காந்தியைச் சந்தித்து காங்கிரஸில் சேர்ந்தார். 1940 முதல் 46 - ஆம் ஆண்டு வரை, காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார். இந்தியப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால், அது நடந்தபோது, டெல்லியில் ஜும்மா மசூதியின் படிகளில் அமர்ந்து கொண்டு , தாய்நாட்டை விட்டுப் போக வேண்டாமென்று முஸ்லிம் மக்களுக்குக் கோரிக்கை விடுத்துக் கொண்டே இருந்தார்.

மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்தது எங்கே?

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் 1888 -ஆம் ஆண்டு மெக்காவில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை மௌலானா கைருதீன் மத போதகராக இருந்தார். மேற்கத்திய கல்வி முறை மத நம்பிக்கையைச் சிதைக்கும் என்பது மௌலானா கைருதீனின் நம்பிக்கை. பின்னர், மௌலானா கைருதீன் குடும்பத்துடன் கல்கத்தாவில் குடியேறினார். கல்கத்தாவில் வீட்டிலேயே ஆசாத்துக்கு பாரசீகம், அரபு, இறையியல், தத்துவம், கணிதம் மற்றும் இயற்கணிதம் ஆகியவை கற்று கொடுக்கப்பட்டது.

அபுல் கலாம் ஆசாத் தான் எழுதிய 'இந்திய சுதந்திரம் வெல்கிறது' (அவரது மறைவுக்குப் பிறகு,1959-ம் ஆண்டு வெளியிடப்பட்டது) நூலில் "ஆரம்பத்தில் எனது தந்தையே எனக்குக் கல்வி கற்றுக் கொடுத்தார். பின்னர் ஒவ்வொரு துறைக்கும் திறமையான ஆசிரியர்களை நியமித்தார். அதனால்,நான் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்தும் முறையான கல்வி கற்கவில்லை '' என்று குறிப்பிட்டுள்ளார்.

Puthuyugam
www.puthuyugam.com