

ஒரு காலத்தில் தெருவில் ஒருவர் தனியாகப் பேசிக்கொண்டு போனால், அவரை விசித்திரமாகப் பார்த்தோம். இன்று காதில் 'புளூடூத்' மாட்டிக்கொண்டு எல்லோருமே தனியாகப் பேசிக்கொண்டுதான் திரிகிறோம். இன்று அதை நாம் பொருட்படுத்துவதே இல்லை. ஒரு காலத்தில் பெண்கள் தனியாகப் பேருந்து ஏறுவதே கூட ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது, இன்று அவர்கள் எல்லா வேலைகளுக்கும் போகிறார்கள். அது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. இத்தகைய மாற்றங்களைத்தான் நாம் 'இயல்பாக்கம்' (Normalization) என்கிறோம்.
மனித சமூகம் என்பது அடிப்படையில் எதையும் 'பழகிக்கொள்ளும்' தன்மையுடையது. ஒரு புதிய விஷயம் முதன்முதலில் நடக்கும்போது மூளை அதை விழிப்புடனும், சில நேரங்களில் அதிர்ச்சியுடனும் கவனிக்கும். ஆனால், அதே விஷயம் மீண்டும் மீண்டும் நம் கண் முன்னால் நிகழும்போது, அது தன் அதிர்ச்சியை இழந்துவிடுகிறது.
இந்த இயல்பாக்கத்துக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. நல்ல விஷயங்கள் இயல்பாக்கப்படும்போது சமூகத்தில் முற்போக்கான நல்ல மாற்றங்கள் நிகழ்கின்றன. உதாரணமாக, ஒரு பெண் வேலைக்குச் செல்வதோ அல்லது ஒருவர் தன் மன அழுத்தம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனையைப் பெறுவதோ இயல்பாக்கப்படும்போது, அங்கு தேவையற்ற பயமும், குற்ற உணர்வுகளும், தடைகளும் உடைந்து, சுதந்திரம் கிடைக்கிறது. இதே தர்க்கம் நெகட்டிவான விஷயங்களுக்கும் பொருந்தும் என்பதுதான் இதில் இருக்கும் சிக்கல். லஞ்சம் வாங்குவதும், பொதுவெளியில் பொய் சொல்வதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருந்தால், ’ஊரு உலகத்துல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று சமூகம் அதை ஒரு புதிய இயல்பாக ஏற்றுக்கொள்கிறது.
நாம் நார்மலைஸ் செய்ய வேண்டிய லிஸ்ட் (The Green List) என்று பார்த்தால்,
1. தொழில் மற்றும் வேலைகள்: முன்பெல்லாம் வேலை கிடைப்பதே சிரமமான விசயமாக இருந்தது. ஒரு மளிகைக் கடையில் பொட்டலம் போட்டுத்தரும் வேலைகூட அரிதான வேலையாகப் பார்க்கப்பட்டது. எனக்குத் தெரிந்த ஒருவர் 40 வருடங்களுக்கு மேலாக அப்படியொரு வேலையைப் பார்த்து, திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகள் பெற்று வளர்த்துப் படிக்கவும் வைத்தார். அதெப்படி அவரால் அந்த வேலையை கிட்டத்தட்ட வாழ்க்கை முழுவதையும் செய்ய முடிந்தது வியப்பாக இருக்கும். இப்போது அப்படி ஒரு நிலையைக் கற்பனைகூட யாராலும் செய்து பார்க்க முடியாது. எந்த வேலையும் நம் இயல்புக்கும், ஆர்வத்துக்கும் சரி வரவில்லை எனில் மாறிவிடலாம். வேலை மட்டுமல்ல, துறையையே மாற்றிக்கொள்ளலாம். எந்த வயதிலும் ஒரு புதிய தொழிலைக் கற்றுக்கொண்டு பாதை மாறலாம் என்பதை சமூகம் ஆச்சரியப்படாமல் அங்கீகரிக்க வேண்டும்.
2. முதுமை: முதுமை என்பது வாழ்வின் ஒரு பருவம், அது ஒரு குறைபாடு அல்ல. மனிதர்களின் முதுமை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றைக் கேலி செய்யாமல், மனிதர்களுக்கு அது ஒரு பழம் கனிவதைப்போன்ற அழகிய மற்றும் அவசியமான முதிர்வு என்று எடுத்துக்கொள்ளும் பண்பை இயல்பாக்க வேண்டும். இதனால் முதுமையைப் பற்றிய சமூகப் பயம் விலகும்.
3. தோல்வி: எல்லாவற்றையும் தெரிந்தவராகக் காட்டிக்கொள்ளும் போலித்தனம் நமக்குத் தேவையில்லை. ஒரு விஷயத்தைப் பற்றி ’இது எனக்குத் தெரியாது’ என்று ஒப்புக்கொள்வதும், ஒரு முயற்சியில் தோற்றுப்போவதும் குற்றமல்ல; அது கற்றலின் படிநிலை என்ற புரிதலையும் இயல்பாக்கிட வேண்டும்.
4. தனிநபர் எல்லை: ’அது அவங்க சொந்த முடிவு’ என்ற ஆரோக்கியமான தூரத்தை, மனைவி, பிள்ளைகள் உட்பட்ட உறவுகளுக்குள் பேணக் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லோரிடமும், எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பது அநாகரிகம் எனும் சூழலை உருவாக்க வேண்டும். இன்னும் புரிதலற்ற, பொருந்தாத தம்பதியினர் டைவர்ஸ் பெற்றுக்கொள்ளுதல், சாதி, மத மறுப்புக் காதல் திருமணங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்ளுதல் இப்படி நார்மலைஸ் செய்ய வேண்டிய பட்டியல் நீள்கிறது.
நாம் நார்மலைஸ் செய்யக்கூடாத லிஸ்ட் (The Red List) என்று பார்த்தால்,
1. டிஜிட்டல் வன்முறைகள்: இணையத்தில் ஒருவரைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்புவதும், கருத்துப் பரிமாற்றத்துக்குப் பதிலாக தனிநபர் தாக்குதல் செய்வதும், அநாகரிகமான கெட்டவார்த்தைகளை அதிகமாகப் பயன்படுத்துவதும் மிக சகஜமாகிக் கொண்டு வருகிறது. இது வன்முறையின் மறுவடிவம் என்பதை உரக்கச் சொல்லி, நார்மலைஸ் ஆகாமல் தடுத்திட வேண்டும்.
2. புனித பிம்பங்கள்: காதல் புனிதமானது, பெண்கள் புனிதமானவர்கள், தாய்மை புனிதமானது என்று பெண்களை அடிமைப்படுத்துவதற்கான ஆதிகால டெக்னிக்கை வழக்கொழியச் செய்ய வேண்டும். இப்படியான எல்லாவற்றையும் மறுவிமர்சனத்துக்கு உள்ளாக்கிட வேண்டும்.
3. வீட்டு வன்முறைகள்: பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை, ’அது அவங்க குடும்ப விஷயம், கணவன்-மனைவி சண்டை, அவன் பிள்ளைய அவன் அடிக்கிறான்’ என்பது போல கடந்து போய்விடக் கூடாது. வன்முறை எங்கு, எந்த வடிவில் நடந்தாலும் அது குற்றமே எனும் புரிதல் உருவாகிட வேண்டும்.
4. ரசனைக் குறைபாடுகள்: ரசனைகள் ஆளாளுக்கு மாறுபடும் என்று ஒதுங்கிப் போய்விடாமல், அதன் எல்லைகளைக் கண்காணித்திட வேண்டும். நம் வீட்டுப் பிள்ளைகள், இளைஞர்கள் எதைப் படிக்கிறார்கள், எந்த சினிமாவைப் பார்க்கிறார்கள் என்றெல்லாம் கண்காணித்திட வேண்டும். மூடநம்பிக்கைகளைப் படித்து அதில் ஆர்வமாகிப் பின்தொடர்கிறார்கள் எனில் அதைத் தடுத்திட வேண்டும். ஒரு சினிமாவுக்குப் போகவேண்டுமானால் பணம் கொடுத்து அனுப்பவேண்டும். ஆனால், அவனே முதல் நாளிரவே தியேட்டருக்குப் போய் அவனுக்குப் பிடித்த நடிகருக்குக் கட்டவுட் வைக்கிறான், பாலாபிசேகம் செய்கிறான் என்று தெரியவந்தால் தொடக்கத்திலேயே தொடைப்பக்கட்டைக்கு வேலை கொடுத்துத் திருத்திட வேண்டும்.
இயல்பாக்கம் என்பது ஒரு நதி போன்றது. அது எந்தத் திசையில் பாய்கிறது என்பதே முக்கியம். அதைப் பொறுத்தே கரை மீதிருக்கும் சமூகத்தின் செழிப்பும், அழிவும் தீர்மானிக்கப்படுகிறது.