

ஒரு குதிரைக் குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே எழுந்து நின்றுவிடுகிறது. ஒரு மான்குட்டி பிறந்த கொஞ்ச நேரத்தில், தன் தாயைப் பின்தொடர்ந்து ஓட ஆரம்பித்துவிடுகிறது. தேனீக்கள் பூக்களை நோக்கிப் பறக்க ஆரம்பித்துவிடுகின்றன. கோழிக்குஞ்சு முட்டையை உடைத்து வெளியே வந்த கொஞ்ச நேரத்திலேயே உணவைத் தேடிக் கொத்தத் தொடங்கிவிடுகிறது. ஆனால், ஒரு மனிதக் குழந்தை அப்படி அல்ல. அதன் தலை நிமிரக்கூட மாதங்கள் ஆகின்றன. நடப்பதற்கு ஒரு வருடம் ஆகிறது. தன்னைத்தானே கவனித்துக்கொள்ள பல வருடங்கள் தேவைப்படுகின்றன. 'பிற விலங்குகளோடு ஒப்பிடுகையில், மனிதர்கள் குறைப்பிரவசத்தில் பிறக்கின்றனர்' என்கிறார் வரலாற்றாய்வாளர் முனைவர் யுவால் நோவா ஹராரி.
ஒப்பீட்டளவில் பார்த்தால் இது ஒரு தோல்வியாகத் தோன்றலாம். காட்டில் பிறக்கும் ஒரு மான்குட்டிக்கு முதல் நாளே ஓடத் தெரிய வேண்டும். இல்லையென்றால் அது உயிருடன் இருக்காது. அப்படியிருக்க, மனிதக் குழந்தை மட்டும் ஏன் இவ்வளவு பலவீனமாகப் பிறக்கிறது? இயற்கை ஏன் நம்மை இப்படி வடிவமைத்திருக்கிறது? இந்தக் கேள்விக்கான பதில்தான் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிக்கான, வெற்றிக்கான ரகசியங்களில் ஒன்று.
ஒரு சிலந்திக்கு யாரும் வலை பின்ன கற்றுக்கொடுப்பதில்லை. ஒரு பறவைக்கு யாரும் கூடு கட்டச் சொல்லித் தருவதில்லை. அவற்றுக்கு எந்தப் பள்ளியும் இல்லை, எந்தப் பயிற்சியும் தேவையில்லை. ஆனாலும் அவை தங்கள் வேலைகளை சரியாகச் செய்கின்றன. ஏனெனில், அந்த அறிவு அவற்றின் அனுபவத்தில் இருந்து வருவதில்லை; அவற்றின் மரபணுக்களில் இருந்து, உள்ளுணர்விலிருந்து வருகிறது. அவற்றின் திறன்கள் அனைத்தும் பிறக்கும்போதே அவற்றுக்குள் இன்பில்ட்டாக (Inbuilt) எழுதப்பட்டுவிடுகின்றன. அதாவது முன்கூட்டியே எழுதப்பட்டுவிட்ட புத்தகங்களைப் போல அவை பிறக்கின்றன.
மனிதக் குழந்தை அப்படி இல்லை. அது எந்த அறிவுமில்லாத வெற்றுத்தாளாகப் பிறக்கிறது. அதற்கு எந்த மொழியும் தெரியாது, எந்த மதமும் தெரியாது. எந்தக் கலாசாரமும் தெரியாது. இதுதான் மனிதனின் பலவீனமும், பலமும். வெற்றுத் தாள்களில் தொடக்கத்தில் எதுவும் இல்லை. அதனால், அதில் எதை வேண்டுமானாலும் எழுதலாம். மனித மூளை அப்படிப்பட்ட ஒரு அமைப்புதான். ஒரு சிலந்தி லட்சம் ஆண்டுகளுக்கு முன் பின்னிய அதே வலையைத்தான் இன்றும் பின்னுகிறது. ஒரு பறவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய அதே கூட்டைத்தான் இன்றும் கட்டுகிறது. ஆனால் மனிதன் தலைமுறை தலைமுறையாய் அறிவுச்சேகரம் செய்கிறான், பகுத்தறிகிறான். கல் கருவி செய்த மனிதனுக்கும், செயற்கைக்கோள் அனுப்பும் மனிதனுக்கும் இடையே பெரிய உயிரியல் வித்தியாசம் எதுவுமில்லை. இருவரின் மூளையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால், அதில் சேர்ந்திருக்கும் அறிவின் அளவு வேறுபடுகிறது. கல் கருவி செய்தவன் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்தான். இன்றைய மனிதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மனித அறிவின் மீது நின்றுகொண்டு அடுத்த அடியை எடுத்து வைக்கிறான்.
இயற்கை மனிதனுக்குப் இப்படியான சலுகையை அளிக்கும்போதே, அதற்கான ஒரு விலையையும் கேட்டது. அதுதான் நீண்ட குழந்தைப் பருவம். பல வருடங்கள் பெற்றோரின் அரவணைப்பு, பாதுகாப்பு, குடும்பம், சமூகம், கல்வி. இவையில்லாமல் மனிதன் உயிர்பிழைத்திருக்க முடியாது. இவைதான் மனிதனை உருவாக்குகின்றன. ஆனால், இவையெல்லாமே மனிதனின் இந்தத் தேவையின் அடிப்படையில் உருவான விளைவுகள்தான். ஒருவேளை மனிதக் குழந்தைகளும், கடல் ஆமைகளைப் போல, தாயின் உதவியின்றி, பிறந்தவுடனேயே உணவு தேடிக்கொண்டு கிளம்ப ஆரம்பித்திருந்தால் என்னவாகியிருக்கும்? குடும்பம் என்ற அமைப்பும், உறவுகளும் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்குமா? அறிவும், அனுபவமும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டிருக்குமா? நாகரிகம் என்ற ஒன்றே உருவாகியிருக்குமா? பதில் இல்லை. மனித சமூகமே நீடித்திருந்திருக்குமா என்பதும் சந்தேகமே! மனிதனின் நீண்ட குழந்தைப் பருவமும், கற்றுக்கொள்ளும் திறனும், அவனது சமூக வாழ்க்கையும் ஒன்றோடொன்று ஆழமாகப் பிணைந்திருக்கின்றன என்பது மட்டும் தெளிவு.
பெரும்பாலும் நாம் பலவீனத்தை ஒரு குறையாகவே பார்க்கிறோம். ஆனால் இயற்கை எப்போதும் அப்படி நினைப்பதில்லை. சில நேரங்களில் ஒரு குறைபாடே ஒரு புதிய வாய்ப்பாக மாறுகிறது. நாமே அதற்குச் சிறந்த உதாரணமாக இருக்கிறோம். நாம் மட்டுமே கேள்விகளுடன் பிறக்கிறோம். அதனால்தான் பதில்களைத் தேடிக்கொண்டே இருக்கிறோம். அதனால்தான் கற்றுக்கொள்கிறோம். அதனால்தான் இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கிறோம்.