நுண்ணுலகம்: வைரஸ் Vs பாக்டீரியா

Virus VS Bacteria
Virus VS BacteriaChatGPT AI Image
Published on

இரண்டு நாட்களாக தும்மல் போட்டுக் கொண்டிருந்துவிட்டு, நேற்று லேசான காய்ச்சலும் ஏற்பட்டு விட்டதால் வேறு வழியின்றி மருத்துவரைப் பார்க்கப் போயிருந்தேன். ஆரம்பிக்கும் போதே, ’ஏதோ வைரல் ஃபீவர் போல இருக்கிறது சார்’ என்று ஆரம்பித்தேன். அவர் நண்பர்தான், இருந்தாலும் என்ன மூடில் இருந்தாரோ, ’வெறுமனே ஃபீவர் என்று சொல்லுங்கள், அது வைரஸால் ஏற்பட்ட ஃபீவரா, அல்லது பாக்டீரியாவில் ஏற்படும் ஃபீவரா, அல்லது வேறு எதுவுமா என்று பார்க்கத்தான் நாங்கள் இருக்கிறோம்’ என்று சொல்லிச் சிரித்துவிட்டு சதக்கென ஓர் ஊசியைக் குத்தி, மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பிவைத்துவிட்டார். வீட்டுக்கு வந்து மாத்திரையைப் போட்டுக்கொண்டு படுத்தாலும், தூக்கம் வரவேண்டுமே? அதென்ன வைரஸ் காய்ச்சலுக்கும், பாக்டீரியாக் காய்ச்சலுக்கும் உள்ள வித்தியாசம் என்று மண்டையைப் பிறாண்டிக் கொண்டிருந்தது.

நம்மைச்சுற்றிய இந்த பூமியில், நமது கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகளின் உலகம் மிகவும் பெரியது. அதில் கோடிக்கணக்கான உயிரிகள் வாழ்கின்றன. அவற்றில் பூஞ்சை, புரோட்டோசோவா, ஆர்க்கியா என்று பல வகைகள் இருந்தாலும், மனித ஆரோக்கியத்தோடு முக்கியமான தொடர்பு கொண்டுள்ளவை இரண்டு. நாம் நன்கறிந்த வைரஸ்கள் (Viruses) மற்றும் பாக்டீரியாக்கள் (Bacteria). இவை இரண்டுமே மனிதர்களுக்கு நோய்களை உண்டாக்கக்கூடியவை என்ற பொதுவான புரிதல் நம்மிடம் இருந்தாலும், அது முழுமையான உண்மையல்ல. மேலும், இவை இரண்டும் அடிப்படையில் முற்றிலும் மாறுபட்ட அமைப்பையும், இயல்பையும் கொண்ட இருவேறு உயிரிகளாகும். 

பாக்டீரியாக்கள் என்பவை ஒரு முழுமையான, தனித்து வாழக்கூடிய ஒற்றை உயிரணு (Single-celled organism) கொண்ட உயிரினங்கள் ஆகும். இவை ஒரு முழுமையான ஒரு செல் உயிரி. தனித்து வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்யக்கூடியவை, வகைக்கேற்ப நிலத்தில், நீரில், காற்றில், மனித உடல்களில் வாழக்கூடியவை. 

வைரஸ்கள் என்பவை ஒரு முழுமையான செல்லே அல்ல. அவை வெறும் ஒரு மரபணுப் பொருளையும் (DNA / RNA), அதைச் சுற்றியுள்ள ஒரு புரதக் கவசத்தையும் (Protein coat) கொண்ட மிக எளிய வடிவமாகும். ஒரு மனிதன், விலங்கு அல்லது தாவரத்தின் உடலுக்குள் (Host body) நுழையாதவரை இவை வெறும் உயிரற்ற துகள்களாகவே இருக்கும். மற்றொரு உடலின் உதவி இல்லாமல் இவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. அளவிலும் பாக்டீரியாவை விட 10-லிருந்து 100 மடங்கு வரை சிறியவை. பாக்டீரியாக்களை சாதாரண கூட்டு நுண்ணோக்கிகளால் பார்க்க முடியும் நிலையில், இவற்றைப் பார்க்க எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் (Electron Microscope) அவசியப்படுகிறது.

Virus VS Bacteria
Virus VS BacteriaGemini AI / ScienceFacts



நிமோனியா, டைபாய்டு, காலரா போன்ற சீரியஸான நோய்களை சில வகையான பாக்டீரியாக்கள் ஏற்படுத்தினாலும், அனைத்து பாக்டீரியாக்களுமே ஆபத்தானவை அல்ல. உண்மையில் 1% க்கும் குறைவான பாக்டீரியாக்களே நோய்களை உண்டாக்குகின்றன. மாறாக மனித உடலின் செரிமானத்திற்கு உதவும் குடல் பாக்டீரியாக்கள், மனிதர்களுக்கு மிகவும் நன்மை செய்பவை. சொல்லப்போனால், மனிதர்கள் ஆரோக்கியமாக உயிர்வாழ்வதற்கான ஓர் அடிப்படைக் காரணமே பாக்டீரியாக்கள்தான் என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு நம் உணவு மண்டலத்தில் இருக்கும் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள், உணவுச் செரிமானம், ஊட்டச்சத்துகளைப் பிரிப்பது, முக்கியமான வைட்டமின்களை உற்பத்தி செய்வது போன்ற இன்றியமையாத வேலைகளைச் செய்கின்றன.  

ஆனால், வைரஸ்களால் மனிதர்களுக்குப் பெரும்பாலும் தீமையே விளைகிறது. அவை உடலுக்குள் புகுந்து நம்முடைய செல்களை அழித்து, தங்களைப் பெருக்கிக் கொள்ளும் ஒட்டுண்ணிகளாகச் செயல்படுகின்றன. டெங்கு, கோவிட்-19, தீவிர வைரஸ் காய்ச்சல் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் இத்தகைய வைரஸ்களால் ஏற்படுகின்றன. பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த உதவும் ஆண்டிபயாடிக் (Antibiotics) மருந்துகளால் வைரஸை அழிக்க முடியாது. வைரஸ் தொற்றுகளைத் தடுக்க தடுப்பூசிகளும் (Vaccines), தீவிரத் தொற்றுகளுக்கு ஆன்டிவைரல் (Antiviral) மருந்துகளுமே பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு காய்ச்சல் என்றால் நாமே மருந்துக் கடைகளுக்குச் சென்று ஆண்டிபயாடிக்குகளை வாங்கி விழுங்குவது எவ்வளவு அபத்தமானது என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். வைரஸ் காய்ச்சல் என்று தெரியாமல், ஆண்டிபயாடிக் மாத்திரைகளை வாங்கி விழுங்கினால், அது நம்மைக் காக்கும் பாக்டீரியாக்களைப் பலவீனப்படுத்தி, இன்னும் அதிக ஆபத்தை விளைவித்துவிடும். எனவே உடல்நலமில்லாது போனால், சொந்தமாக மருத்துவம் பார்த்துக்கொள்ள விளையாமல், நேரே மருத்துவரைப் பாருங்கள். அப்படியே போனாலும், கண்டதையும் யோசித்து மனதைக் குழப்பிக் கொள்ளாமல், பிரச்சினையைச் சொல்லிவிட்டு தீர்வை மருத்துவரிடமே விட்டுவிடுங்கள். 

Puthuyugam
www.puthuyugam.com