வெற்றி தரும் தோல்விகள்! #PrisonersOfSuccess

மாநகரம், கைதி என்று இரண்டு புதுமையான திரைக்கதைகளைக் கொண்ட படங்களைத் தந்த லோகேஷ் கனகராஜ் போன்றோர் பின்னர் ஸ்டீரியோடைப்பில் மாட்டிக்கொள்வதற்கு இந்தச் சிக்கல் காரணமாக இருக்கலாம்.
Prisoners Of Success
Prisoners Of SuccessChat GPT AI Image
Published on

வெற்றிதான் நம் அனைவரின் இலக்காகவும் இருக்கிறது. வெற்றிதான் நமக்குப் புகழையும், வளத்தையும் கொண்டுவருகிறது. வெற்றிக்காகத்தான் நாம் அனைவரும் பாடுபடுகிறோம். அது சரியானதுதான். ஆனால், அளப்பரிய பெருவெற்றி நம்மை என்ன செய்யும் என்றொரு கோணமும் இருக்கிறது. உலகில் தோல்வியடைந்தவர்களை விட, கடுமையான மன உளைச்சலுக்கும், தனிமைக்கும் ஆளாவது 'பெருவெற்றி' பெற்றவர்கள்தான். ஒரு துறையில் சிகரத்தைத் தொட்டு, சரித்திரம் படைத்த ஆளுமைகள், ஒரு கட்டத்தில் தங்களின் வெற்றியாலேயே சிறைபிடிக்கப்படுகிறார்கள். அவர்களைத்தான் நாம் ’வெற்றியின் கைதிகள்’ (Prisoners of Success) என்கிறோம்.

பிரமிக்க வைக்கும் படைப்புகளைத் தந்த இயக்குநர்களாகட்டும், அல்லது கோடிக்கணக்கான இதயங்களை ஆட்கொண்ட இசைக் கலைஞர்களாகட்டும், அல்லது பெரும் உச்சத்தைத் தொட்ட நடிகர்களாகட்டும்  — அவர்கள் அனுபவிக்கும் பெருவெற்றியின் பக்கவிளைவுகள் வேறு விதமாக இருக்கின்றன.

அடையாளச் சிறை

ஒரு படைப்பாளி தன் ஆரம்பக் காலத்தில் எந்தவித தடைகளோ, எதிர்பார்ப்போ இல்லாமல், முழு சுதந்திரத்தோடு அவரது மனதிலிருக்கும் புதிய கலை முயற்சிகளைச் செய்ய முடியும். ஆனால், அதுவே அவரை பிரம்மாண்ட வெற்றிக்குக் கொண்டுபோய்விட்டால், அவர் உருவாக்கிய அந்த 'வெற்றி ஃபார்முலா'வே அவருடைய சிறையாகவும் மாறிவிடுகிறது. அவர்கள் தங்களின் பாணியை மாற்றி, புதிய கோணத்தில் எதையாவது செய்ய முயன்றால், ’இது இவரின் பாணி இல்லையே!’ என்று ரசிகர்களே கூட நிராகரித்துவிடுகிறார்கள். மேலும், அவர்களின் புதிய படைப்புகள் எதுவானாலும், அவர்களின் முந்தைய ஆகச்சிறந்த படைப்போடு (Masterpiece) மட்டுமே ஒப்பிடப்படும் சிக்கல் உருவாகிறது. இதனால், தங்களின் சொந்தப் புகழுக்குக் கீழேயே அவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். 

வணிகக் கட்டாயம்

வெற்றி என்பது அவர்களுக்கு பெரும்புகழுடன் நிற்பதில்லை; அது பெரிய அளவில்  முதலீடுகளையும், சந்தை மதிப்பையும் உள்ளே இழுத்து வருகிறது. அது ஒரு வகையில் அவர்களது படைப்புச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது. ’எக்காரணம் கொண்டும் தோற்றுவிடவே கூடாது, அதற்கான அனுமதி உனக்கில்லை’ எனும் கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். அந்த பயம் அவர்கள் விரும்பிய சுயாதீனக் கலையைப் படைக்க முடியாமல், சந்தைக்கு என்ன தேவையோ அதையே மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மாநகரம், கைதி என்று இரண்டு புதுமையான திரைக்கதைகளைக் கொண்ட படங்களைத் தந்த லோகேஷ் கனகராஜ் போன்றோர் பின்னர் ஸ்டீரியோடைப்பில் மாட்டிக்கொள்வதற்கு இந்தச் சிக்கல் காரணமாக இருக்கலாம்.

சுயசந்தேகம்

மிகப்பெரிய வெற்றியைக் குவித்த ஆளுமைகள் பலருக்குள்ளும் இன்னொரு விசித்திரமான உளவியல் பயமும் குடியேறுவதுண்டு. இத்தகைய மாபெரும் வெற்றிக்கு நிஜமாகவே என் திறமைதான் காரணமா, அல்லது நான் வெறும் கருவிதானா எனும் சுயசந்தேகம் (Imposter Syndrome) எழுகிறது. தங்களின் திறனை விட, உழைப்பை விட வேறேதோ அதிர்ஷ்டம் அல்லது கடவுள் அருள்தான் தங்களை இயக்கி இந்த வெற்றியைக் கொடுத்திருக்கிறது என்று அவர்கள் நம்பத் தொடங்குகிறார்கள். இந்த பயத்தின் விளைவாக, அவர்கள் தங்களின் கலைத் திறமையை நம்புவதை விடுத்து, ’எல்லாம் அவன் செயல்’ என்று கடவுளை முன்னிறுத்திப் பேசவும், அதைப் பரப்பவும் ஆரம்பிக்கிறார்கள். இது சமயங்களில் அவர்களுக்கு அடக்கத்தையும், தோல்விகளை எதிர்கொள்ளும் வலிமையையும் கொடுத்தாலும் அவர்களால் ஈர்க்கப்படும் எத்தனையோ இளைஞர்களை தவறாக வழி நடத்திவிடுகிறது. தம் திறமையையும், உழைப்பையும் விட, வேறொரு சக்தி நமக்கு உதவியிருக்கிறது என்ற எண்ணம்தான் அவர்களை கோவில் கோவிலாக ஏறி இறங்க வைத்துவிடுகிறது. ரஜினிகாந்த், இளையராஜா, ஏஆர்.ரகுமான் தொடங்கி இன்று விஜய், யோகிபாபு வரையில் இதற்கு உதாரணமாக ஏராளமானோர் திகழ்கிறார்கள்.

போலிப்புகழ்ச்சி

கோபுரத்தின் உச்சியில் இடமிருப்பது ஒருவருக்கு மட்டும்தான். எனவே, உச்சத்தைத் தொட்ட ஆளுமைகள் எப்போதும் தனிமையில் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கீழே எப்போதும் ஒரு கூட்டம் இருக்கிறது. ஆனால், அந்தக்கூட்டம் அவர்களின் புகழ் வெளிச்சத்தில் இளைப்பாறுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கக்கூட ஆள் இருக்காது. ’அற்புதம் சார், பிரமாதம் சார்’ போன்ற குரல்கள் மட்டுமே அவர்களின் காதுகளில் விழுந்துகொண்டே இருக்கும். அது அவர்களின் வீழ்ச்சியை விரைவுபடுத்தும். ஒரு கட்டத்தில், தங்களைப் புதுப்பித்துக்கொள்ளாத பலரும் தங்களின் சகாப்தம் மெல்ல மெல்லக் கரைவதையும், புதிய தலைமுறை, புதிய அலைகளை உருவாக்குவதையும் பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தங்களை நிலைநிறுத்திக்கொள்ள அவர்கள் செய்யும் தவிப்பு, பல நேரங்களில் அவர்களின் முந்தைய பெருமையைக் குலைக்கும் தோல்விகளில்தான் போய் முடிகிறது. பெரும்பாலான பெரிய இயக்குநர்களின் இறுதிக் காலம் இப்படியானதாகவே இருந்திருக்கிறது.

வெற்றி என்பது அதை அடைவதோடு முடிந்துவிடுவதில்லை; அதைப் பாதுகாப்பதுதான் இன்னும் பெரிய காரியமாக இருக்கிறது. பகுத்தறிவும், முதிர்ச்சியும், பக்குவமும் கொண்டவர்களால்தான் அதைப் பாதுகாக்க முடிகிறது. அவர்களே இறுதி வரை கண்ணியத்துடன் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து, நிறைவும் செய்கிறார்கள்.

Puthuyugam
www.puthuyugam.com