ஜூன் 21 : சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது ஏன்?

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவால் முதன்முதலில் சர்வதேச யோகா தினம் முன்மொழியப்பட்டது . உடல் நலம் மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் ஒரு நல்ல விஷயமாக யோகா தினம் கருதப்படுகிறது.
yoga
yoga
Published on

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 12வது ஆண்டாக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. கொல்கத்தா நகரில் ரெட் ரோடில் நாளை பிரதமர் மோடி, ஆயிரக்ணக்கான மக்களுடன் இணைந்து யோகாவில் ஈடுபடுகிறார். உலகம் முழுக்க லட்சக்கணக்கான மக்கள் யோகாவில் ஈடுபடவுள்ளனர். சர்வதேச யோகா தினம் உருவானது எப்படி என்று பார்க்கலாம்.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவால் முதன்முதலில் சர்வதேச யோகா தினம் முன்மொழியப்பட்டது. உடல் நலம் மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் ஒரு நல்ல விஷயமாக யோகா கருதப்படுகிறது. 'யோகா' என்ற சொல், 'ஒன்றுபடுத்துதல்' அல்லது 'இணைத்தல்' என்று பொருள்படும் 'யுஜ்' (Yuj) மற்றும் 'யுஜிர்' (Yujir) என்கிற சமஸ்கிருத சொற்களிலிருந்து பிறந்தது. மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றின் இணைப்பை யோகா கலை ஊக்குவிக்கிறது. யோகா கலை 5,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது.

மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்தையும் உருவாக்குகிறது. உடல், மனம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த நன்மைகளுக்காக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் யோகாவில் ஈடுபடுகின்றனர். 2026ம் ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் 'ஆரோக்கியமான முதுமைக்கான யோகா' (Yoga for Healthy Ageing) என்பதாகும்.

கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி ஐ.நா சபையில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்தார். தனது உரையின் போது, ''உலகுக்கு இந்தியா அளித்த விலைமதிப்பற்ற கொடை யோகா" என்றும் குறிப்பிட்டார். மனம் மற்றும் உடல், சிந்தனை மற்றும் செயல், மனிதர்கள் மற்றும் இயற்கை ஆகியவற்றுக்கு இடையே இணக்கத்தை உருவாக்கும் யோகாவின் ஆற்றல் பற்றி உலக நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் பிரதமர் மோடி திறம்பட எடுத்துரைத்தார். மோடியின் இந்த யோசனைக்கு உலகளவில் பெரும் ஆதரவு கிடைத்தது.

கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சர்வதேச யோகா தினத்தை அங்கீகரிக்க வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, 131 உறுப்பினர்களில் 69 பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். தொடர்ந்து, ஐ.நா சபை ஜூன் 21-ஆம் தேதியை 'சர்வதேச யோகா தினமாக' அறிவித்தது.

prime minister modi
prime minister modi

ஜூன் 21 யோகா தினமாக அறிவித்தது ஏன்?

இதையடுத்து, முதலாவது சர்வதேச யோகா தினம் 2015-ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி புது தில்லியில் உள்ள ராஜ்பாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 84 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட மொத்தம் 35,985 பேர் பங்கேற்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சி, பின்னர், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி யோகா தினமாக கொண்டாடப்படுவதற்கு தொடக்கமாக அமைந்தது.

ஆண்டின் மிக நீண்ட நாளான ஜூன் 21 (கோடைகால சங்கிராந்தி), ஆன்மீக ரீதியாகவும் இயற்கையாகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சூரியனின் கதிர்கள் நீண்ட நேரம் பூமியில் படுவதால், இது அதிக ஆற்றல் மற்றும் நேர்மறையான அதிர்வுகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. ஒளி, ஆற்றல், புத்துணர்ச்சி மற்றும் சமநிலை ஆகியவற்றுடன் இந்த நாள் நெருங்கிய தொடர்பு கொண்டது. இந்திய ஆன்மீக மரபுகளில், கோடைக்காலம் முடிந்து, மழை காலத்தின் தொடக்கமாகவும் அமைகிறது; இந்த காலக்கட்டம் ஆன்மீகப் பயிற்சிகளுக்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது. யோக மரபின்படி, 'ஆதியோகி' (முதல் யோகி) என்று கருதப்படும் சிவபெருமான், தனது சீடர்களுக்கு யோகக் கலையைப் போதிக்கத் தொடங்கியதும் இந்தக் காலகட்டத்தில்தான். இந்த ஆன்மீகத் தொடர்புகளையடுத்து, ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நோக்கம், யோகா பயிற்சியின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும், மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் யோகாவில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதும். இன்றைய நவீன காலக்கட்டத்தில் லட்சக்கணக்கானோர் யோகாவில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இது, பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

Puthuyugam
www.puthuyugam.com