சதம் அடித்த இந்தியா: ராம்சார் பாதுகாக்கப்பட்ட பகுதி என்றால் என்ன?

இந்தியாவில் 100வது ராம்சார் பாதுகாக்கப்பட்ட பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அது, உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்திலுள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் ஆகும்.
சதம் அடித்த இந்தியா: ராம்சார் பாதுகாக்கப்பட்ட பகுதி என்றால் என்ன?
@narendramodi...
Published on

உலகம் முழுக்கவுள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒரு அமைப்புதான் ராம்சார் தளங்கள். கடந்த 1971ம் ஆண்டு ஈரானிலுள்ள ராம்சார் என்ற நகரத்தில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, அந்த நகரின் பெயரிலேயே இந்த அமைப்பு இயங்கி வருகிறது. முதலில் 18 நாடுகள் மட்டுமே இந்த அமைப்பில் இடம் பெற்றிருந்தன. தற்போது, 173 நாடுகளில் ராம்சார் தளங்கள் உள்ளன.

கடந்த 1982ம் ஆண்டு இந்தியா இந்த அமைப்பில் இணைந்தது. அரசு ஒத்துழைப்புடன் உலகம் முழுக்கவுள்ள சதுப்புநிலங்களை பாதுகாப்பதுதான், இந்த அமைப்பின் முக்கியமான நோக்கமாகும். 1974ம் ஆண்டு முதன்முதலாக ஆஸ்திரேலியாவிலுள்ள கோபர்க் பெனிசூலா (Cobourg Peninsula) முதல் ராம்சார் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. பிரேவிலுள்ள ரியோ நெக்ரோ (Rio Negro) 1,20,000 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட ஈரநிலப்பகுதி ஆகும். இதுதான் , ராம்சார் பாதுகாக்கப்பட்ட பகுதியில் பெரியதாகும். பிரேசில் நாட்டில் மட்டும் 2,67,000 சதுரகீ.மி பரப்பளவு ராம்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வருகிறது.

அதிகபட்சமாக பிரிட்டனில் 176 பகுதிகளும் மெக்ஸிகோவில் 144 பகுதிகளும் ராம்சார் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. பொலிவியா, காங்கோ, ரஷ்யா, கனடா போன்ற நாடுகளிலும் ஏராளமான பகுதிகள் ராம்சார் பட்டியலில் உள்ளன. தற்போது, உலகம் முழுக்க 2,500 பகுதிகள் ராம்சார் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன . இவற்றின் பரப்பளவு 2.5 கோடி சதுர மைல் பரப்பளவு ஆகும்.

Pallikaranai Wetland
Pallikaranai Wetlandwikipedia

சதுப்பு நிலங்கள் என்றால் என்ன?

சதுப்பு நிலங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. இங்குள்ள நீர் நிலையின் ஆழம் 6 மீட்டர் ஆழத்துக்கும் குறைவாகவே இருக்கும். சதுப்பு நிலங்கள் நன்னீர் மற்றும் கடலில் நதி கலக்கும் இடத்தில் இடத்தில் உருவாகும் உப்புநீர் சதுப்பு நிலங்கள் என்று இரு வகைப்படும். மழைநீரை உறிஞ்சி வைத்துக் கொண்டு வறட்சி காலத்தில் வெளியேற்றும் தன்மை கொண்டது. பல வகையான மீன்கள், பறவைகள், தாவரங்கள் வாழ ஆதாரமாக விளங்குகின்றன. சுனாமி, வெள்ளம் போன்றவற்றில் இருந்து மக்களை பாதுகாக்கவும் உதவுகின்றன. சதுப்பு நில நீர் மிகவும் சுத்தமானதாக இருக்கும். தற்போது, உலகில் 6 சதவிகித பரப்பளவில்தான் சதுப்பு நிலங்கள் உள்ளன. ஆனால், உலகின் 40 சதவிகித மீன்கள், பறவைகள் இங்குதான் வசிக்கின்றன. உலகில் 100 கோடி மக்கள் சதுப்பு நில வேலை வாய்ப்புகளை நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர். பிப்ரவரி 2ம் தேதி உலக சதுப்பு நில நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

தற்போது, இந்தியாவில் 100வது ராம்சார் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அது, உத்தரபிரதேச மாநிலம் பாலியா (Ballia )மாவட்டத்தில் பஷவந்த்பூரிலுள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் ஆகும். கடந்த 1991ம் ஆண்டு இது, பறவைகள் சராணாலயமாக அறிவிக்கப்பட்டது. கங்கை நதியையொட்டி இந்த சதுப்பு நிலம் அமைந்துள்ளது. இங்கு 221 தாவர இனங்கள், 66 மீன் இனங்கள், 7 ஊர்வனங்கள் மற்றும் ஏராளமான பறவைகளுக்கு வாழ்கின்றன.

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

தமிழகத்தில் கோடிக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் , பள்ளிக்கரணை சதுப்புநிலம், பிச்சாவரம் சதுப்புநிலம் , செங்கல்பட்டு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் , திருநெல்வேலி கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் , கன்னியாகுமரி வேம்பனூர் ஈரநில பகுதி உள்ளிட்ட மெத்தம் 20 பகுதிகள் ராம்சார் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இதில், பெருநகரத்திலுள்ள ஒரே சதுப்பு நிலம் சென்னைக்கு அருகில் பள்ளிக்கரணையில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு,6000 ஹெக்டர் பரப்பளவில் இருந்த இந்த சதுப்பு நிலம் நகரமயமாக்கல் காரணமாக 700 ஹெக்டராக குறைந்து போனது. இந்த சதுப்புநிலத்தில் குப்பையைக் கொண்டு வந்து கொட்டுவதுதான் கொடுமையிலும் கொடுமை!

Puthuyugam
www.puthuyugam.com