மூன்றாம் உலகப்போரைத் தடுத்த தனிமனிதன்!

சில நேரங்களில் வரலாற்றை மாற்றி எழுதுவது, சரியான நேரத்தில் சரியான சந்தேகத்தை எழுப்பும் சாதாரண மனிதர்கள்தான். அந்த வகையில், மூன்றாம் உலகப் போர் நிகழாமல் போனதற்கு காரணமான மனிதர்களின் பட்டியலில் ஸ்டானிஸ்லாவ் பெட்ரோவின் பெயர் நிச்சயமாக நினைவுகூரப்படும்!
Stanislav Petrov
Stanislav Petrov
Published on

1983, செப்டம்பர் 26. நள்ளிரவைக் கடந்த நேரம். சோவியத் ஒன்றியத்தின் ஓர் இராணுவக் கட்டுப்பாட்டு மையத்தில் திடீரென அலாரம் ஒலிக்கிறது. அமெரிக்காவில் இருந்து ஓர் அணு ஏவுகணை சோவியத் ஒன்றியத்தை நோக்கி ஏவப்பட்டிருப்பதாக ஒரு கணினியின் எச்சரிக்கை அது. சில நொடிகளில் தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் நான்கு ஏவுகணைகள் தொடுக்கப்பட்டிருப்பதாக கணினி எச்சரிக்கைகள் கிடைக்கின்றன. அதாவது, அந்த நொடியில் சோவியத் ஒன்றியத்தின் கண்காணிப்பு அமைப்பின்படி, அமெரிக்கா அணுத்தாக்குதலைத் தொடங்கிவிட்டது.

அந்தத் தகவலை உடனடியாக மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவர், அந்த மையத்தின் இராணுவ அதிகாரியான ஸ்டானிஸ்லாவ் பெட்ரோவ் (Stanislav Petrov).

அப்போது உலகம் இரண்டு பெரிய அணிகளாகப் பிரிந்திருந்தது. ஒரு புறம் அமெரிக்கா. இன்னொரு புறம் சோவியத் ஒன்றியம். இருவரும் நேரடியாகப் போரிட்டதில்லை. ஆனால், எப்போது வேண்டுமானாலும் இரு தரப்புக்கும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றத்தில் சில தசாப்தங்கள் கழித்துக்கொண்டிருந்த பனிப்போர் (Cold War) காலம் அது. 1980களின் தொடக்கத்தில் இந்தப் பதற்றம் அதிகமாகவே இருந்தது. இரு நாடுகளிடமும் ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்கள் இருந்தன. ஒரு நாடு தாக்கினால், இன்னொரு நாடு பதிலுக்குத் தாக்கும். அதற்குப் பதிலாக முதல் நாடு மீண்டும் தாக்கும். இப்படி உலகையே அழித்துவிடக்கூடிய ஒரு சங்கிலித் தொடர் எதிர்வினை நடக்கலாம். கோடிக்கணக்கான மனித உயிர்கள் ஆபத்தின் விளிம்பிலிருந்தன.

அதனால்தான் அந்த அலாரம், உலக வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாகிறது. பெட்ரோவ் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழல். கணினி சொல்வதை நம்பி மேலதிகாரிகளுக்கு தகவல் அனுப்பலாமா? அல்லது இதில் ஏதோ தவறு இருக்கிறது என்று சந்தேகப்படலாமா? ஒரு சாதாரண இராணுவ அதிகாரி என்ன செய்வார்? கணினி சொல்வதை அப்படியே நம்புவார். ஆனால் பெட்ரோவ் வேறு மாதிரி யோசித்தார்.

’அமெரிக்கா உண்மையிலேயே அணுப்போரைத் தொடங்கினால் வெறும் ஐந்து ஏவுகணைகளை மட்டுமா அனுப்பும்?’ என்பதுதான் அவருக்கு எழுந்த முக்கியமான சந்தேகம். மேலும், இந்தக் கணினி மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான ஒகோ (OKO) எச்சரிக்கை அமைப்பு அப்போதுதான் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அதில், ஏதும் தவறாக இருக்க வாய்ப்பும் இருந்தது. ஆனால், அவரிடம் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. ஒருவேளை அவர் தகவல் அனுப்பாமல் தாமதிக்கும் சில நிமிடங்களில் மாஸ்கோ இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோகவும் வாய்ப்பிருந்தது. 

கணினி ஒன்று சொல்கிறது. அவரது உள்ளுணர்வு வேறொன்று சொல்கிறது. இறுதியாக அவர் எடுத்த முடிவு, ’எச்சரிக்கை எழுந்துள்ளது, ஆனால் இது தவறான எச்சரிக்கையாக இருக்கலாம்’ என்று மேலதிகாரிகளிடம் தெரிவித்தார். சில நிமிடங்கள் கழித்துதான் உண்மை தெரியவந்தது. பெட்ரோவ் நினைத்தது போலவே அது தவறான சமிக்ஞைகள்தான். அமெரிக்கா எந்த ஏவுகணையையும் ஏவவில்லை. சூரிய ஒளி மேகங்களில் பிரதிபலித்த விதத்தை, சோவியத் செயற்கைக்கோள் அமைப்பு தவறாகப் புரிந்துகொண்டதால் அந்த அலாரம் ஒலித்திருந்தது. அதாவது கணினிதான் தவறு செய்திருந்தது.

இன்று இந்தச் சம்பவத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, பெட்ரோவ் உலகத்தைக் காப்பாற்றினார் என்று சொல்வது ஓரளவு மிகைப்படுத்தலாக இருக்கிறது என்றும், அவர் தகவலை மேலே அனுப்பியிருந்தாலும், உடனடியாக அணுப் போர் தொடங்கியிருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. ஏற்கனவே பதற்றத்தின் உச்சியில் இருந்த இரண்டு அணு வல்லரசுகளுக்கு இடையில், அந்த இரவில் மிக ஆபத்தான ஒரு தவறான புரிதல் உருவாகியிருந்தது. அந்தத் தவறான புரிதலை மேலும் பெரிதாக்காமல் தடுத்தவர் ஸ்டானிஸ்லாவ் பெட்ரோவ். அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மனித வரலாற்றில் பல போர்களை அரசியல்வாதிகள் தொடங்கியிருக்கிறார்கள். சர்வாதிகாரிகள் பல போர்களை நடத்தி மக்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். ஆனால், சில பெரும் போர்கள் நடக்காமல் போனதற்கு பெட்ரோவ் போன்ற சாதாரணமான மனிதர்களும் காரணமாக இருந்திருக்க முடியும். சில நேரங்களில் வரலாற்றை மாற்றி எழுதுவது, சரியான நேரத்தில் சரியான சந்தேகத்தை எழுப்பும் சாதாரண மனிதர்கள்தான். அந்த வகையில் பார்த்தால், மூன்றாம் உலகப் போர் நிகழாமல் போனதற்கு காரணமான மனிதர்களின் பட்டியலில் ஸ்டானிஸ்லாவ் பெட்ரோவின் பெயர் நிச்சயமாக நினைவுகூரப்படும்!

Puthuyugam
www.puthuyugam.com