டென்மார்க்கின் கல்வி முறையில் அப்படி என்ன ஸ்பெஷல்?

டென்மார்க்கின் கல்வி முறை ’அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களை’ உருவாக்குவதற்குப் பதிலாக ’நல்ல மனநலத்துடனும், தன்னம்பிக்கையுடனும் வாழக்கூடிய மனிதர்களை’ உருவாக்க முயல்கிறது.
Denmark Education System
Denmark Education System
Published on

நம் சமூகத்தில், ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லும் முதல் நாளிலிருந்தே, ஒரு மறைமுகப் போட்டி தொடங்கிவிடுகிறது. ஹோம்வொர்க், தேர்வுகள், மதிப்பெண், ரேங்க், டியூஷன்! இவை அனைத்தையும் கல்வியின் இயல்பான பகுதிகளாகவே நாம் பார்க்கிறோம். 6 வயதில் ஒன்றாம் வகுப்புக்கு அனுப்பிவிட்டு இதையெல்லாம் செய்தால் கூட பரவாயில்லை. ஆனால், இரக்கமே இல்லாமல் 3 வயதிலேயே குழந்தைகளுக்கு புத்தகப் பையையும், வாட்டர் பாட்டிலையும் மாட்டி ப்ளேஸ்கூலுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தினமும் பாடம் படிக்கவும், வீட்டுப்பாடம் செய்யவும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். 

ஆனால், உலகில் சில நாடுகள் தொடக்கக்கல்வியை முற்றிலும் வேறொரு கோணத்திலிருந்து அணுகுகின்றன. அவற்றுள் டென்மார்க் குறிப்பித்தக்கது. அங்குள்ள தொடக்கக்கல்வி முறை குறித்து உலகம் முழுவதும் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. அதற்கான காரணம் அவர்களது கல்வி முறை ’அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களை’ உருவாக்குவதற்குப் பதிலாக ’நல்ல மனநலத்துடனும், தன்னம்பிக்கையுடனும் வாழக்கூடிய மனிதர்களை’ உருவாக்க முயல்கிறது என்பதுதான்.

டென்மார்க்கிலும் நம்மைப்போலவே தேர்வுகளை முன்னிறுத்திய பொதுப்பள்ளி முறை பல ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக, டென்மார்க் 1975ல் மேற்கொண்ட கல்வி சீர்திருத்தம்தான், இந்த நவீனமுறை உருவாகக் காரணமாகக் கருதப்படுகிறது. அதன் பின்னர் 1993 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர் மாற்றங்கள் இந்த அணுகுமுறையை மேலும் வலுப்படுத்தியிருக்கின்றன. இதற்குக் காரணம் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு வட ஐரோப்பிய நாடுகளில் ஒரு புதிய சிந்தனை வளர்ந்தது. ஒரு நல்ல சமூகம் உருவாக வேண்டுமெனில், அதன் குழந்தைகள் பயம், கட்டுப்பாடு, அழுத்தம் ஆகியவற்றின் மூலமாக அல்ல, மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வளர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து உருவானது. அதுவே, அவர்களின் அரசியல் மற்றும் சமூகக் கொள்கைகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. அதன் தாக்கமே அவர்களது கல்வியிலும் வெளிப்பட்டது.

குழந்தை மையக் கல்விமுறை

டென்மார்க் தொடக்கக்கல்வியின் மிகப்பெரிய வித்தியாசம், குழந்தைகளை மிக இளவயதிலேயே ’போட்டி மனப்பான்மைக்குள்’ தள்ளாமல் இருப்பதுதான். தொடக்க ஆண்டுகளில் குழந்தைகள் தொடர்ந்து தேர்வு பயத்துடன் வாழ வேண்டிய சூழல் அங்கு இல்லை. மதிப்பெண்களை விட குழந்தையின் தனிப்பட்ட ஆர்வம், குழுச் செயல்பாடுகள், சமூக உறவு மேம்பாடு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றிற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதனால் பள்ளி என்பது குழந்தைக்கு ஒரு மனஅழுத்தம் தரும் இடமாக மாறுவதில்லை. பல நாடுகளில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை ஒரு கடமையாக நினைக்கும்போது, டென்மார்க்கில் அது இயல்பான வாழ்க்கை அனுபவமாக வடிவமைக்கப்படுகிறது. அங்கு ’முதல் மாணவன்’ உருவாக்கப்படுவதற்குப் பதிலாக, ’முழுமையான மனிதன்’ உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே அடிப்படையாக உள்ளது.

Danish School
Danish School

நம்மில் பல பெற்றோர்கள், விளையாட்டைக்கூட நேர விரயமாகவே பார்க்கிறோம். ’எப்போதும் விளையாடிக்கொண்டே இருந்தால் எப்படிப் படிப்பது? வாழ்க்கையில் முன்னேற முடியாது’ என்பது பரவலாக நமக்கு இருக்கும் மனநிலை. ஆனால், டென்மார்க்கில் கல்வி விளையாட்டை அடிப்படையாக் கொண்டே (Play-based learning) வடிவமைக்கப்படுகிறது. குழுவாக இணைந்து செயல்படுவது, பிரச்சினைகளைத் தீர்ப்பது, தோல்வியை ஏற்கக் கற்றுக்கொள்வது, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது போன்ற பல திறன்கள் விளையாட்டின் மூலமே உருவாகின்றன. இதனால் தொடக்கநிலை வகுப்புகளில் தேர்வுகளும் இல்லை, மதிப்பெண்களும் இல்லை, ரேங்கிங்கும் இல்லை, தோல்வி பயமின்றி குழந்தைகள் அடுத்த வகுப்புக்கும் செல்கிறார்கள்.  

டென்மார்க் கல்வி முறையைப் புரிந்துகொள்ள அதன் சமூக அமைப்பையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சிறிய மக்கள் தொகை, குறைந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு, வலுவான சமூகநல அமைப்பு (Welfare system) போன்ற அம்சங்கள் அந்த நாட்டில் உள்ளன. பெரும்பாலான மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் கல்வி மட்டும்தான் எதிர்கால பாதுகாப்புக்கான ஒரே வழி என்ற மனநிலை அங்கு குறைவாக உள்ளது. இதனால், இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு இந்த வழிமுறை பொருந்துமா என்பது ஆய்வுக்குரியது. இங்குள்ள மக்கள்தொகை, குடும்ப, சமூக, பொருளாதார அமைப்புகள் காரணமாக, நல்ல பள்ளி, நல்ல கல்லூரி, நல்ல வேலை என்பன பல குடும்பங்களுக்கு வாழும் வழியாகவே (Survival ladder) மாறிப்போயிருக்கின்றன. அதனால், தேர்வு மையக் கல்வியிலிருந்து நாம் முழுமையாக விலகுவது அத்தனை எளிதான விசயமல்ல.

இதன் பலன் என்ன?

டென்மார்க் மாணவர்கள் உலகின் மிக உயர்ந்த மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் அல்ல. ஆனால் பல சர்வதேச ஆய்வுகளில் அவர்கள் அதிக மகிழ்ச்சி (Life satisfaction), குறைந்த மனஅழுத்தம் (Less Anxiety), உயர்ந்த தன்னம்பிக்கை (Social confidence) மற்றும் நல்ல குழுச்செயல்பாட்டுத் திறன் (Collaborative skills) கொண்டவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், இந்த முறை குறித்த விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதிக சுதந்திரம் சில நேரங்களில் ஒழுக்கமின்மையை உருவாக்கலாம், போட்டியுணர்வு மிகக் குறைவாக இருப்பதால் குறிக்கோள்கள், இலக்குகள் வைத்துப் பயணிப்பதில் போதாமை ஏற்படலாம் என்றும் கருத்துகள் சொல்லப்படுகின்றன. 

உண்மையில் கல்வியின் அடிப்படை நோக்கம்தான் என்ன? அதிக திறமையான, ஒழுக்கமான ஊழியர்களை உருவாக்குவதா? அல்லது தன்னம்பிக்கையும், நல்ல மனநலமும் கொண்ட, பிறரை மதிக்கக்கூடிய மனிதர்களை உருவாக்குவதா? டென்மார்க் கல்விமுறையை நாம் அப்படியே இங்கு நகலெடுக்க முடியாவிட்டாலும், அதிலிருந்து சில முக்கியமான விசயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். கல்வியை கண்மூடித்தனமாக 'பொருளாதாரப் பாதுகாப்பு’க்கான ஒரு கருவியாக மட்டுமே பார்க்காமல், ஒரு மனிதனை செதுக்கும் கலையாகவும் நாம் அணுக வேண்டும். எல்லா குழந்தைகளும் முதல் ரேங்க் வாங்க வேண்டிய அவசியமில்லை; ஆனால், எல்லா குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான ஒரு குழந்தைப்பருவம் கிடைக்க வேண்டியது அவசியம். அரசாங்கங்களின் கொள்கைகளும், பெற்றோர்களின் மனநிலையும் இந்த எதார்த்தத்தை நோக்கிய ஒரு சிறிய அடியையாவது எடுத்து வைக்கலாம்.

Puthuyugam
www.puthuyugam.com