உங்களுடைய 'ஹாபி' என்ன? #Hobby

பல சமயங்களில் ஹாபியைக் கேளிக்கைகளோடு குழப்பிக் கொள்கிறோம். இரண்டையும் பொழுதுபோக்கு என்றே தமிழில் மொழிபெயர்க்கிறோம். ஆனால், இரண்டும் வெவ்வேறானவை.
Hobby
Hobby
Published on

அந்த நண்பரின் வீட்டுக்குப் போய் சுமார் ஏழெட்டு வருடங்கள் ஆகியிருக்கும். சென்ற வாரம் ஒரு விசயமாய்ச் சென்றிருந்த போது வரவேற்பறையில், ஒரு பெரிய கண்ணாடி மீன் தொட்டி இருந்தது. என் நினைவின் ஆழத்திலிருந்து சில விசயங்களை மீட்டெடுத்தேன். ஏழெட்டு வருடங்களுக்கு முன்பாக நண்பரின் 10 வயதுப் பையன் சின்னச்சின்ன கண்ணாடி ஜார்களிலும், குடுவைகளிலும் மீன்களை வளர்த்துக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. அவனுடைய வேலைதான் இந்த மீன் தொட்டி என்பதை இப்போது உணர்ந்துகொள்ள முடிந்தது. அதைப் பார்த்தபடியே, ‘ஆகாஷோட வேலையா இது?’ என்று கேட்ட போது நண்பர் ’நல்ல ஞாபக சக்திதான்’ என்றார். இப்போது அவன் கல்லூரி முதலாண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படியானால் அன்று நாங்கள் நினைத்ததைப் போல அவன் ஏதோ குழந்தைத்தனமாக, ஏனோ தானோவென்று மீன் வளர்ப்பை அணுகியிருக்கவில்லை. உள்ளார்ந்த ஈடுபாட்டோடு அதை மேற்கொண்டிருக்கிறான். அதனால்தான் இன்று வரை அதை அதே விருப்பத்தோடு செய்யமுடிந்திருக்கிறது. 

நாங்கள் பேசிக்கொண்டிருந்த கொஞ்ச நேரத்தில் மாடியிலிருந்து இறங்கி வந்தான் அந்த ஆகாஷ். அவனுடன் கூடவே பக்கத்து பிளாட்டின் சிறுவர்கள் இருவர். சகஜமாக எனக்கு முகமன் கூறிவிட்டு, அவன் கையில் வைத்திருந்த ஒரு சிறிய கிண்ணத்திலிருந்த தண்ணீரைக் காண்பித்தான். கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்த்தபிறகும் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. 

‘நல்லாப் பாருங்க அங்கிள், பிஷ் ஃபிரை!’ என்றான்.

‘வெறும் தண்ணியைக் காண்பிச்சிட்டு, என்னடா பிஷ் ஃபிரை என்கிறாய்?’

என்று நான் சொன்னதற்கு என் நண்பர் குறுக்கிட்டு, ‘அடேய், அது திங்கிற பிஷ் ஃபிரை இல்லை, மீன் குஞ்சு!’ (Fry- மீன் குஞ்சு) என்றதும்தான் உற்றுக் கவனித்தேன். அந்த நீருக்குள் கண்ணாடி நிறத்தில் சில துணுக்குகள் ஓடிக்கொண்டிருந்தன. ஆச்சரியமாக இருந்தது. இதற்குப் பெயர்தான் ஹாபி!

’எப்படிடா இது, பசங்க எந்நேரமும் போனுக்கு அடிக்ட் ஆகிக்கிடக்கும் இன்றைய சூழலில், உங்க வீட்ல இது எப்படி சாத்தியமாச்சு?’

‘May be, Because of My Wife’ என்று என் நண்பர் சிம்பிளாக முடித்துக்கொண்டாலும், இதில் நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய விசயங்கள் இருக்கின்றன. ஆகாஷ் ப்ளஸ் டூவில் எடுத்த மதிப்பெண்கள் மிகச்சிறப்பானவை. இப்போது சென்னையின் மிக முக்கியமான பொறியியல் கல்லூரியில் மெக்கானிகல் படித்துக்கொண்டிருக்கிறான்.

படிப்பு, அசைன்மென்ட், செமஸ்டர் தேர்வுகள், கேரியர், எதிர்காலத்தைப் பற்றிய பயம், எல்லாவற்றிற்கும் மேலாகச் சமூக ஊடகங்கள்— என இன்றைய கல்லூரி இளைஞர்களின் உலகம் 24 மணி நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு பெருவெளியாக இருக்கிறது. இந்தத் தொடர் ஓட்டத்தில், இளைஞர்கள் பலரும் தங்களை அறியாமலேயே மனச்சோர்வுக்கு (Burnout) ஆளாகிறார்கள். அந்தச் சோர்விலிருந்து நம்மை மீட்டு ரீசார்ஜ் செய்பவைதான் ஹாபி மற்றும் கேளிக்கைகள். இவை வெறும் நேரத்தைக் கடத்தும் செயல்கள் அல்ல; நம் மனநலனைத் தக்கவைக்கும் அத்தியாவசியமான மருந்துகள்.

ஹாபி (Hobby) என்றால் பொழுதுபோக்கு என்றே நாம் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம். உண்மையில் ஹாபி என்றால் என்ன? நாம் நம் மகிழ்ச்சிக்காக, மனமுவந்து, உள்ளார்ந்த ஈடுபாட்டோடு, அதிலிருந்து வரும் வருமானம் போன்ற எந்த எதிர்பார்ப்புமின்றிச் செய்யும் செயல்களே ஹாபி! ஹாபி என்றால் களிச்செயல்!

பல சமயங்களில் ஹாபியைக் கேளிக்கைகளோடு குழப்பிக் கொள்கிறோம். இரண்டையும் பொழுதுபோக்கு என்றே தமிழில் மொழிபெயர்க்கிறோம். ஆனால், இரண்டும் வெவ்வேறானவை. ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது, ஓடிடியில் சீரிஸ் பார்ப்பது, இசை கேட்பது அல்லது சமூக ஊடகங்களை ஸ்க்ரோல் செய்வது- இதில் நாம் ஒரு நுகர்வோராக (Consumer) மட்டுமே இருக்கிறோம். இங்கே நமது மூளைக்கு பெரிய வேலை கிடையாது. இது அன்றாடக் கவலைகளில் இருந்து தற்காலிகமாக நம்மை ஆற்றுப் படுத்துகிறது. இவை கேளிக்கைகள்! ஆனால், ஓவியம் வரைவது, புத்தகம் படிப்பது, சமைப்பது, செடி வளர்ப்பது, கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஒரு புதிய இசைக் கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்வது என்பதிலெல்லாம் நாம் ஒரு கிரியேட்டராக (Creator) மாறுகிறோம். இது நமக்கு ஒரு மனநிறைவைத் தந்து நம்மை மீட்டெடுக்கிறது. இது ஹாபி!

வாழ்க்கைக்கு இந்த இரண்டுமே தேவைதான். சோர்வாக இருக்கும் ஓர் இரவில் படம் பார்ப்பது (Entertainment) எப்படி மனதை லேசாக்குமோ, அதேபோல வார நமக்குப்பிடித்த ஒரு களிச்செயலில் (Hobby) ஈடுபடுவது நம் மனதை ரீசார்ஜ் செய்து புத்துணர்வோடு வைக்கிறது.

கவனக் குவிப்பு (Flow State)

நீங்கள் உங்களுக்குப் பிடித்த ஓர் ஓவியத்தை வரையவோ அல்லது பிடித்த பாடலை கித்தாரில் வாசிக்கவோ தொடங்கும்போது, உங்கள் மூளை 'Flow State' எனப்படும் ஒரு நிலைக்குச் செல்லும். அந்த நொடியில் நேற்றைய ஏமாற்றமோ, நாளைய வேலைகள் பற்றிய பயமோ உங்களுக்கு இருக்காது. நீங்கள் அந்த நொடியில் மட்டுமே வாழ்வீர்கள். இது ஒரு வகையான தியானம். கல்லூரியிலோ அல்லது தேர்விலோ நமக்கு ஒரு தோல்வி நேரலாம்; எதிர்பாராத நேரத்தில் நமக்கொரு அவமானம் நிகழலாம். அவை நம்மை ஆழமாகப் பாதிக்கக்கூடியவை, நாம் எதற்கும் லாயக்கற்றவரோ எனும் நினைப்பைத்  தூண்டக்கூடியவை. அதிலிருந்தெல்லாம் ஹாபி நம்மை காத்து நமது சுயமரியாதையை ஊக்கப்படுத்துகிறது.

இன்றைய பொழுதில் பயனுள்ள வகையில் (Productive) மட்டும்தான் நேரத்தைச் செலவிட வேண்டும் எனும் நெருக்கடிக்கு நாமெல்லாம் ஆளாகியிருக்கிறோம். வாழ்க்கை என்பது எப்போதும் இலக்குகளை நோக்கியும், வெற்றியை நோக்கியும் மட்டுமே ஓடிக்கொண்டேயிருக்க வேண்டிய ஓர் இயந்திரத்தனமான பயணம் மட்டுமே அல்ல, வழிந்தோடும் மழை நீரில் பயணிக்கும் ஒரு சருகினை ரசிப்பதுவும்கூடத்தான்!

Puthuyugam
www.puthuyugam.com