கலைஞர், இளையராஜாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதென்ன?

ஜுன் 2, ஜூன் 3 - இந்த இரண்டு நாட்களும் சோஷியல் மீடியா முழுவதும் கலைஞரும் இளையராஜாவும் ஆக்ரமித்திருந்திருந்தனர். அப்படி என்ன செய்தார்கள் என்று அசை போட்டேன். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
Kalaignar Karunanithi and Maestro Ilayaraja
Kalaignar Karunanithi and Maestro Ilayaraja
Published on

இந்த ஜூன் மாதம் 3ம் தேதி கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதே நாளில்தான் இசைஞானி இளையராஜா தனது 83வது பிறந்தநாளை எட்டினார். ஆனால் கலைஞர் மீதிருந்த அன்பின், மதிப்பின் காரணமாக தன் பிறந்தநாளை ஜூன் 2ல் கொண்டாடுவார் இளையராஜா. அந்த இரண்டு நாட்களும் சோஷியல் மீடியா முழுவதும் இந்த இருவரும் ஆக்ரமித்திருந்திருந்தனர். அப்படி என்ன செய்தார்கள் இந்தத் தாக்கத்தை ஏற்படுத்த என்று அசை போட்டேன்.

இந்த இருவரும் தமிழ் நிலத்தில் நிகழ்த்திய தாக்கம் எத்தகையது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆயினும், இந்த இருவரிடமும் நாம் கவனிக்க வேண்டிய ஓர் ஒற்றுமை இருக்கிறது. இந்த இருவருமே தங்களின் துறை என்னவென்பதை தங்களது 14 வயதிலேயே முழுதுமாக உணர்ந்துவிட்டிருந்தார்கள். இளையராஜா அவரது 14 வயதிலேயே அவரது மூத்த சகோதரர் பாவலர் வரதராசனின் இசைக்குழுவில் இணைந்து பாடல்களைப் பாடவும், இசைக்கருவிகளை இசைக்கவும் ஆரம்பித்துவிட்டார். கலைஞர் கருணாநிதி, அவரது 14 வயதிலேயே தந்தை பெரியார், பட்டுக்கோட்டை அழகிரிசாமி ஆகியோரின் பேச்சைக் கேட்டு உந்தப்பட்டு, அரசியலுக்குள் வந்துவிட்டார். இத்தனை சின்ன வயதில் தங்கள் துறைகளைத் தேர்ந்தெடுக்க இவர்களால் மட்டும் எப்படி முடிந்தது? என்ன விதமான திட்டமிடல் இது?

இந்த இருவரையும் பொறுத்தவரை இதில் திட்டமிடல் ஏதுமில்லை. பதிலாக இருவருக்குமே தங்கள் துறையில் ஓர் அதிதீவிர ஆர்வம் (Passion) இருந்திருக்கிறது. அதனால்தான் இப்படியொரு பெரும் பயணத்தை இவர்களால் மேற்கொள்ள முடிந்திருக்கிறது. அதனாலேயே அதில் இணையற்ற திறனை பெற்றிருக்கிறார்கள். இலக்கை அவர்களாக நிர்ணயித்துக் கொண்டார்களோ இல்லையோ, பெரும் சாதனைகளை அவர்களால் நிகழ்த்த முடிந்திருக்கிறது. 

ஆனால், எல்லோராலேயுமே இப்படித் தங்கள் துறை எது? முதலாவதாக, தங்கள் ஆர்வம் எதன் மீதிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியுமா?

இவர்களைப் போல இத்தனைச் சீக்கிரமாக தங்கள் துறையை அடையாளம் காணமுடியாமல் போகலாம். ஆனால், எல்லோராலும் நிச்சயம் முடியும். ஒரு பள்ளி, கல்லூரி மாணவனிடம் எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறாய் என்று கேட்டால், அவனது பதிலில் தெளிவு இல்லாமல் போகலாம். அது ஒரு குறையல்ல, உண்மையில், அந்தக் குழப்பம்தான் தேடலின் தொடக்கமாக அமைகிறது.

ஆர்வம், திறமை, இலக்கு

நாம் பொதுவாக இலக்குகளைப் பற்றியே அதிகம் பேசுகிறோம். ஆனால் இலக்கை அடைவதற்கு முன்பு, நம்மை நாமே புரிந்துகொள்வது முக்கியம். ஒரு மாணவர் முதலில் கண்டுபிடிக்க வேண்டியது தனது ஆர்வத்தைத்தான்! நண்பர்களுடன் பேசும்போது எந்த விஷயங்களைப் பற்றிப் பேச அதிக ஆர்வம் காட்டுகிறோம்? பணமோ அல்லது மதிப்பெண்ணோ கிடைக்காது என்றாலும், எந்த ஒரு விஷயத்தை நாம் சோர்வில்லாமல், நேரம்போவதே தெரியாமல் செய்கிறோம்? அது ஒரு கட்டுரை எழுதுவதாக இருக்கலாம், கணினியில் கோடிங் செய்வதாக இருக்கலாம், அல்லது ஒரு நிகழ்வை முன்னின்று நடத்துவதாக இருக்கலாம், ஓய்வு நேரத்தில் நாம் தேடிச் சென்று படிக்கும் அல்லது பார்க்கும் விஷயங்களாக இருக்கலாம். அவற்றிலிருந்துதான் நமது உண்மையான ஆர்வத்தைக் கண்டுகொள்ள முடியும்.

அப்படியான ஆர்வமிக்க வேலைகளில் நமது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் கடினமாகச் செய்யும் ஒரு வேலையை ஒப்பீட்டளவில் எளிதாகச் செய்வதுதான் திறமை. அந்தத் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள சிறந்த வழி; பயிற்சி. பிடித்த விஷயங்களை தொடர்ந்து பயிற்சி செய்து பாருங்கள். கட்டுரைகள் எழுதுங்கள். விவாதங்களில் பங்குபெறுங்கள். சிறிய தொழில்முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிரலாக்கம் கற்றுக்கொள்ளுங்கள். குறும்படம் எடுங்கள். தன்னார்வ அமைப்புகளில் பணியாற்றுங்கள். பகுதி நேர வேலைகளைப் பாருங்கள். நம்மைப் பற்றிய உண்மைகள், சிந்திப்பதன் மூலம் அல்ல; செயல்படுவதன் மூலம்தான் தெரியவருகின்றன. 

கல்லூரிப் பருவத்தின் ஆகச்சிறந்த நன்மையே, விளைவுகளின் பாதிப்பு மிகச்சிறியதாக இருக்கும். எனவே, புதிய விஷயங்களை தோண்டித்துருவிப் பார்க்கத் (Explore) தயங்காதீர்கள். உங்கள் துறை சார்ந்த படிப்பைத் தாண்டி, கலை, அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை எனப் பல்வேறு துறை சார்ந்த மனிதர்களுடன் பழகுங்கள். லிங்க்டின் (LinkedIn) போன்ற தளங்களைப் பயன்படுத்தி, நீங்கள் விரும்பும் துறையில் ஏற்கனவே சாதித்த நிபுணர்களைப் பின்தொடருங்கள். அவர்களின் பயணத்தைக் கவனிப்பதன் மூலம் பல தேவையற்ற தவறுகளை நீங்கள் தவிர்க்கலாம்.

கடைசியாக இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளலாம். இலக்கு என்பது வரைபடத்தில் முன்கூட்டியே குறிக்கப்பட்ட ஒரு புள்ளி அல்ல. அது தேடலின் போது மெல்ல மெல்லத் துலங்குகிற ஒரு விசயம். அதனால், உங்கள் தேடலின் எல்லைகளை விரிவுபடுத்துங்கள். இலக்குகள் எப்போதும் ஆசைகளாக இருக்கக் கூடாது. அவை SMART (S – Specific, M – Measurable, A – Achievable, R – Realistic, T - Time-bound) ஆனதாக, அதாவது திட்டவட்டமானதாகவும், அளவிடக்கூடியதாகவும், அடையக்கூடியதாகவும், காலக்கெடு கொண்டதாக இருக்க வேண்டும். 

வாழ்க்கையின் தொடக்கத்தில் எல்லா பதில்களும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், கேள்விகளைக் கேட்கத் தொடங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனென்றால், சரியான கேள்விகள்தான் சரியான பாதைக்கு நம்மைக் கொண்டு செல்கின்றன.

Puthuyugam
www.puthuyugam.com