பாலியல் குற்றங்கள்: சமூகத்தின் சிக்கல்

இத்தகைய குற்றங்களுக்கு யார் காரணம்? அரசாங்கத்தால் இவற்றை நடக்கவிடாமல் தடுத்துவிட முடியுமா? இதற்கு விடை காண, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் சமூகக் குற்றங்கள் ஆகிய இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை நாம் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும்.
Sexual Abuse - Representation Image
Sexual Abuse - Representation ImageGemini AI
Published on

சமீபத்தில், கோவையில் ஒரு சிறுமி வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட செய்தி நம்மையெல்லாம் கலங்கடித்துவிட்டது. ஒரு பாலியல் குற்றச் சம்பவம் வெளிவரும் போதெல்லாம், நாம் பதறுகிறோம். சமூக வலைதளங்களிலும் கடுமையான எதிர்வினைகளைப் பார்க்கமுடிகிறது. அரசாங்கத்தைக் குற்றம் சாட்டி கோபமான கருத்துகள் பரவுகின்றன. அந்த கோபத்தில் தவறில்லை. காரணம், பாலியல் வன்முறை என்பது ஒருவரின் மனநிலையையும், உடலையும், உயிரையும் சிதைக்கும் தீவிரக்குற்றமாக இருக்கிறது.

ஆனால், இத்தகைய குற்றங்களுக்கு உண்மையில் யார் காரணம்? ஓர் அரசாங்கத்தால் இவற்றை நடக்கவிடாமல் தடுத்துவிட முடியுமா? இதற்கு விடை காண வேண்டுமென்றால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் சமூகக் குற்றங்கள் ஆகிய இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை நாம் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். 

சட்டம்-ஒழுங்கு (Law and Order) என்பது காவல்துறையினரால் பாதுகாக்கப்படுகிறது. அதாவது காவல்துறையினர் பகலிரவாக ரோந்து செல்வது, சிசிடிவிக்கள் அமைத்து கண்காணிப்பது, முன்னெச்சரிக்கைக் கைதுகள், வாகனச்சோதனையிடுவது, உளவுத்துறை மூலமான தகவல்களின் மூலம் ஆபத்தான சூழலை முன்கணித்து அதற்கான பாதுகாப்புகளைச் செய்வது, மக்கள் கூடும் வாய்ப்பிருக்கக்கூடிய லோக்கல் திருவிழாக்கள், பேருந்து நிலையங்கள், கட்சிக்கூட்டங்கள், விஐபிக்களின் வருகை போன்றவற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை செய்கிறார்கள். இதனால்தான் நாம் இரவு நேரங்களில், நமது வீடுகளில் நிம்மதியாக, பயமின்றி, உறங்க முடிகிறது. திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களில் பிக்பாக்கெட் தொல்லையின்றி உலாத்த முடிகிறது. போதைப்பொருள் கடத்தல் தடுக்கப்படுகிறது. சட்டவிரோத ஆயுதம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. ரவுடித்தனம் மற்றும் குழு மோதல்கள் குறைவாக இருக்கின்றன. விவிஐபிக்கள் உயிர்ப்பயமின்றி அங்குமிங்கும் சென்றுவர முடிகிறது. இதை மீறியும் நடக்கும் குற்றங்களில் குற்றவாளிகளைத் துப்பறிந்து, விரைந்து கண்டுபிடித்து சட்டத்தின் முன்பாக நிறுத்துகிறார்கள். அதன் மூலம், குற்றவாளிகள் அத்தனை எளிதாக குற்றத்தில் ஈடுபட முடியாத நிலையை உருவாக்குகிறார்கள். அதாவது காவல்துறை சரியாக இயங்கினால், சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கும். குற்றங்கள் குறைவாக நடக்கும்.

ஆனால், இந்தப் பட்டியலில் வராத சமூகக் குற்றங்கள் என்றொரு வகைமை இருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள், வன்புணர்வு, குடும்ப வன்முறை, ஆணவக்கொலைகள், சாதி-மத மோதல்கள், அவமதிப்புகள் (Ragging, Bullying, Eve-teasing) என்று இந்தப் பட்டியலும் நீளமானதுதான். இவற்றைக் காவல்துறையினர் மூலமாகக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான காரியம். அரசும், காவல்துறையும், எத்தனை விழிப்போடிருந்தாலும், சட்டங்கள் மற்றும் கடுமையான தண்டனைகள் மூலமாக இவற்றைக் குறைக்க இயலுமே தவிர தடுக்க இயலாது. இவை தனிநபர் ஒழுக்கம் சார்ந்த சமூகத்தின் குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

சாதி, மதம், கடவுள் போன்ற நம்பிக்கைகள் குறைவாக இருக்கிற, நவீன கல்வித் திட்டங்களைக் கொண்டுள்ள ஸ்காண்டிநேவிய நாடுகள் எனப்படும் டென்மார்க், ஸ்வீடன், நார்வே, பின்லாந்து போன்ற நாடுகளில்தான் வன்புணர்வு, குடும்ப வன்முறை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக இருக்கின்றன என்பது தகவல். பதிவு செய்யப்படும் குற்றங்கள் இந்த நாடுகளில் அதிகம் என்றாலும், பெண்களுக்கான சமஉரிமை, பாதுகாப்பு ஆகியன இந்நாடுகளில் சிறப்பாக இருக்கின்றன. அதுவே, குற்றங்கள் முழுமையான அளவில் பதிவு செய்யப்படுதலுக்குக் காரணமாகவும் அமைந்திருக்கின்றன.

எதிர்காலத்தில் இவ்வகைக் குற்றங்களைத் தடுக்க, ஒரு சமூகமாக நாம் என்ன செய்ய வேண்டும்?

Reasons behind Sexual Abuse - AI Image
Reasons behind Sexual Abuse - AI ImageGemini AI



ஆண்களின் வளர்ப்பு

இந்தியச் சமூகங்களில் சிறுவயதிலிருந்தே ஆண்கள் என்றால் அழக்கூடாது, மென்மையாக இருக்கக்கூடாது, அதிகார தோரணை வேண்டும், பெண்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் போன்ற கருத்துகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆண்களுக்குள் விதைக்கப்படுகின்றன. இதன் விளைவாக, சிலர் பெண்களை தனித்துவம் கொண்ட மனிதர்களாக அல்லாமல், ’தமக்கான உடமை’யாகக் கற்பனை செய்துகொள்கிறார்கள். பெண்களின் நிராகரிப்பை இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையும் இதிலிருந்தேதான் உருவாகிறது. பாலியல் குற்றங்களில், பல நேரங்களில் ’காமம்’ எனும் தீவிர உணர்வோடு அதிகாரம், கட்டுப்பாடு, அவமானப்படுத்துதல் போன்ற மனநிலைகளும் கலந்திருக்கின்றன என்று உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

இன்னொரு புறம், இந்த 21ம் நூற்றாண்டிலும், பாதிக்கப்படும் பெண்களின் உடை, நடத்தை ஆகியவற்றைப் பேசி, குற்றங்களை நீர்த்துப்போக வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ’அவள் ஏன் அந்த நேரத்தில் அங்கு சென்றாள்? அவள் ஏன் அப்படியொரு ஆடை அணிந்திருந்தாள்?’ என்று கேட்பதன் மூலமாக பிரச்சினையை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகத் திருப்பிக் குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறோம் எனும் உணர்வே இல்லாமல் பலர் பேசுவதையும் பார்க்க முடிகிறது. இந்த அணுகுமுறையில் பாலியல் குற்றங்களை மறைமுகமாக இயல்பாக்கும் (Normalise) அபாயம் இருக்கிறது. 

குடும்பங்களின் மௌனம்

இந்தியச் சமூகங்களில் பாலியல் கல்வி குறித்து, திறந்த உரையாடல் இல்லாததும் ஒரு முக்கியமான காரணம். பல குடும்பங்களில் பாலியல், சம்மதம் (Consent), உடல் எல்லைகள் (Personal boundaries) போன்ற விஷயங்கள் இன்னும் பேசக்கூடாதவையாகவே இருக்கின்றன. இதனால் விவரமறியாத குழந்தைகள், நல்ல தொடுதல் / கெட்ட தொடுதல், உடலறிவு, பாலியல் வன்முறை என்றால் என்ன என்பது போன்ற அடிப்படை விஷயங்களைக்கூட அறியாமலேயே வளர்கிறார்கள். இதனால், பல குழந்தைகள் தங்களுக்கு நடந்த அத்துமீறலை அடையாளம் காணவோ, யாரிடமும் சொல்லவோ கூட முடியாமல் போகிறது.

கூடவே, பாலியல் குற்றத்துக்கு ஆளான பெண்களையே அவமானத்துக்கு ஆளாக்கும், கற்பு குறித்த கற்பிதங்களை விளங்கிக்கொள்ளாத நிலையிலேயே நம் குடும்பங்கள் இருப்பதும் இன்னொரு பலவீனமாக இருக்கிறது.

இணையமும் புதிய சிக்கல்களும்

இன்னொரு பக்கத்தில் இணைய உலகமும், இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு ஊக்கியாகச் செயல்படுகிறது. ஏற்கனவே சினிமாக்கள் செய்து வைத்திருக்கும் செய்கைகள் போதாதென்று இன்ஸ்டா போன்ற நவீன சமூகவலைத்தளங்களில் பெண்களை வெறும் காமக்குறியீடாக மாற்றும் பதிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. போதாக்குறைக்கு நீலப்படங்களை குவித்து வைத்திருக்கும் தளங்கள் வேறு. இவை குறிப்பாக இளைஞர்களின் பாலினப் பார்வையை பாதிக்கக்கூடும் என்று பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன. பெரும்பாலான இளைஞர்கள் பரஸ்பர மரியாதை (Mutual respect), சம்மதம் (Consent) ஆகியவை காமத்துக்கான முதல் படி என்ற புரிதலில்லாமலேயே இருக்கிறார்கள்.

அரசின், சமூகத்தின் பொறுப்பு

சட்டம்-ஒழுங்கைப்போல பாலியல் குற்றங்களை அரசு அணுகிவிட முடியாது. இந்தக் குற்றங்களுக்கான காரணங்கள் பல அடுக்குகளில் இருப்பதைப்போல, தீர்வுகளையும் நாம் பல அடுக்குகளில் செய்ய வேண்டியதிருக்கிறது. முதலில், பள்ளி நிலையிலிருந்தே பாலியல் கல்வி என்பது அவசியம். தொடர்ந்து, ஆணாதிக்கத்துக்கு எதிரான, பெண் விடுதலை எனும் சிந்தனைப்போக்கை ஊக்குவிப்பது, வேகமான நீதி, பால் வேறுபாடுகள் குறித்த விழிப்புணர்வு போன்ற அம்சங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

சமூகத்தின் பொறுப்பு இன்னும் பெரியது. குழந்தைகளுக்கு, பெண்களை மதிக்கவும், அவர்களின் மறுப்பு இயல்பானது என்பதை ஏற்கவும், உணர்வுகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்தவும், ஓர் உறவுக்கு முந்தைய ஒப்புதலின் அவசியத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். ‘ஆண்கள் அப்படித்தான் இருப்பார்கள்’ என்ற சமரசத்தை நிறுத்த வேண்டும். ஒரு பெண் பாதுகாப்பாக வாழ்வது என்பது பெண்களின் பிரச்சினை அல்ல; அது ஒரு நாகரிக சமூகத்தின் அளவுகோல். ஒரு சமூகம் தனது குழந்தைகளுக்கு என்ன கற்றுக்கொடுக்கிறது என்பதுதான் அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. பெண்களை மனிதர்களாக மதிக்கக் கற்றுக்கொடுக்காத சமூகம், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பங்களில் எவ்வளவு முன்னேற்றத்துக்குச் சென்றாலும் பயனில்லை. 

Puthuyugam
www.puthuyugam.com