ஹைபோதடிகல் விளையாட்டுகள்! #HypotheticalGames #Psychology #InternetCulture

மேலோட்டமாகப் பார்த்தால், இவை எல்லாம் வெறும் நேரப்போக்குக்கான அரட்டைகள் போலத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இந்த அனுமான விளையாட்டுகள் மனித மனத்தின் மறைவான அடுக்குகளைத் திறந்து காட்டும் சிறிய உளவியல் சோதனைகள்.
Ship of Theseus
Ship of Theseus
Published on

நமக்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறது. நடக்காத விஷயங்களைப் பற்றி மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருப்போம். பேஸ்புக்கிலோ, இன்ஸ்டாகிராமிலோ பார்த்திருப்பீர்கள். ‘நூறு கோடி ரூபாய் ... அல்லது நூறு வயது வரை ஆரோக்கியமான வாழ்க்கை.. இரண்டும் எது வேண்டும்?’ என்று ஒரு போஸ்ட் போட்டிருப்பார்கள். அது நடக்கவே வாய்ப்பில்லாத ஒரு அனுமானக் (Hypothetical) கேள்வி என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அதை அறிந்திருந்தும் கூட லைக்கோ, கமெண்டோ போடும் வழக்கமில்லாத நபர்கள் கூட, ஒரு நிமிடம் நின்று யோசித்துக் கற்பனையில் அந்தச் சூழலை நினைத்துப் பார்த்து, அதில் திளைத்துவிட்டு ஏதாவது ஒரு பதிலைச் சொல்லிவிட்டுப் போவார்கள். உடனே ’டைம் டிராவல் எந்திரம் ஒன்று கிடைத்தால் கடந்த காலத்துக்குப் போவீர்களா, எதிர்காலத்துக்குப் போவீர்களா?’, ’உலகமே நாளைக்கு அழியப்போகிறது என்றால் இன்று என்ன செய்வீர்கள்?’ என்று இன்னும் அதைப்போலவே போஸ்ட்டுகள் வந்து குவியும்.

இப்படியான கேள்விகளை நண்பர்களுடனான அரட்டையிலோ, ஆன்லைனிலோ எதிர்கொள்ளாத நபர்கள் இருக்க முடியாது. மேலோட்டமாகப் பார்த்தால், இவை எல்லாம் வெறும் நேரப்போக்குக்கான அரட்டைகள் போலத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இந்த அனுமான விளையாட்டுகள் மனித மனத்தின் மறைவான அடுக்குகளைத் திறந்து காட்டும் சிறிய உளவியல் சோதனைகள். நாம் விளையாடுகிறோம் என்று நினைக்கும் பல கேள்விகள், உண்மையில் நம்முடைய ஆசைகள், பயங்கள், குற்றவுணர்வுகள், நெறிமுறைகள், மனக்காயங்கள், பாதுகாப்பின்மை, ஒழுக்கம் போன்றவற்றை வெளிக்கொண்டு வருகின்றன. அதோடு மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே அவன் ‘What if?’ என்ற கேள்வியோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறான். ‘நான் ஐடிக்கு பதிலாக சிவில் எஞ்சினியரிங்கை எடுத்திருந்தால்?’, ‘நான் நேற்று ரயிலில் போகாமல் பஸ்ஸில் போயிருந்தால்?’- அதனால் இந்த அனுமான விளையாட்டுகள் நம் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கின்றன. இப்படி நடக்காத விஷயங்களைப் பற்றிப் பேசும் போதுதான், மனிதர்கள் பல நேரங்களில் தங்களைப் பற்றிய மிக உண்மையான விஷயங்களை வெளிப்படுத்துகிறார்கள்.

மேலே உள்ள ‘உனக்கு நூறு கோடி..’ கேள்விக்கு ஒருவர் தரும் பதில் வெறும் பொழுதுபோக்கு பதிலாக இருக்காது. அவர் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறார் என்பதற்கான ஒரு சோறு பதமாக மாறிவிடும். அப்படியே இதன் அடுத்தடுத்த கேள்விகள் இன்னும் தீவிரமாகிக் கொண்டே போகும். ’ஒரு பொத்தானை அழுத்தினால் உனக்கு பத்து கோடி ரூபாய் கிடைக்கும்; ஆனால், உலகத்தில் எங்கோ யாரோ ஒருவர் இறந்துவிடுவார். அதை அழுத்துவீர்களா?’— என்பது ஹைப்போதடிகல் கேள்வி மட்டுமே அல்ல. மனித ஒழுக்கத்தின் எல்லையைப் பரிசோதிக்கும் ஒரு தீவிரமான கேள்வியாகி விடுகிறது. 

Trolley Problem
Trolley ProblemGemini AI Image

இந்த விளையாட்டுகளில் சில வகைகள் மிகவும் புகழ்பெற்றவை. அதில் முக்கியமானது ‘Trolley Problem’. ஒரு ரயில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தண்டவாலத்தில் ஐந்து பொதுமக்கள் கட்டிப்போடப் பட்டிருக்கிறார்கள். ரயில் சென்றால் அவர்கள் இறந்து விடுவார்கள். ஆனால், உங்கள் கையில் ஒரு லீவர் இருக்கிறது. அதை இழுத்தால் ரயில் வேறு பாதைக்குச் செல்லும். அங்கே ஒரே ஒருவர் மட்டுமே கட்டப்பட்டிருக்கிறார், ஆனால் அவர் ஒரு விஞ்ஞானி. நீங்கள் என்ன செய்வீர்கள்? யாரைக்காப்பாற்றுவீர்கள்? இந்தக் கேள்விக்கு சரியான பதில் கிடையாது. ஆனால், மனித மனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை இப்படியான கேள்விகள் மூலமாக ஆய்வு செய்கிறார்கள். 

அதே போல ‘Ship of Theseus’ எனும் இன்னொரு பழைய விளையாட்டு ஒன்றுண்டு. என்னிடம் ஒரு சைக்கிள் இருக்கிறது. பழுதானதால் முதலில் அதன் இரண்டு சக்கரங்களை மாற்றுகிறேன். பின்னர் இருக்கையை மாற்றுகிறேன். பின்னர் கொஞ்ச நாட்கள் கழித்து ஹேண்டில் பாரை மாற்றுகிறேன். இறுதியாக அதன் மெயின் ஃபிரேமிலேயே பிரச்சினை இருந்ததால் அதையும் மாற்றிவிடுகிறேன். இப்போதும் அந்த சைக்கிள் நான் முதலில்  வைத்திருந்த எனது சைக்கிள்தானா? இந்தக் கேள்வி உண்மையில் மனித அடையாளத்தைப் பற்றியது. நம் உடலில் உள்ள அனைத்துப் பாகங்களிலும், ஒவ்வொரு நாளும் பழைய செல்கள் அழிந்து புதிதான செல்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. அப்படியானால், பத்து வருடங்களுக்கு முன் இருந்த அதே மனிதர்கள்தானா நாம்?

மனிதன் கேள்விகளாலேயே பரிணாம வளர்ச்சியடைந்தவன். பதில்களை விடவும், அவனுக்கு பதிலில்லாக் கேள்விகள் மீதான காதல் சற்று அதிகம்தான். கடைசியாக உங்களிடம் ஒரு கேள்வி. ஒரு மன்னன், ஒரு கைதிக்கு மரண தண்டனை விதித்துவிட்டுச் சொல்கிறான்,

“உன் கடைசி ஆசை என்ன? அது நிறைவேற்றக் கூடியதாக இருந்தால், உன்னை தூக்கிலிடுவோம். நிறைவேற்ற முடியாததாக இருந்தால், உன் தலையை வெட்டிவிடுவோம்.”

அந்தக் கைதி அனுமானக் (Hypothetical) கேள்விகளை உருவாக்கி, அதன் மூலமாக தர்க்கச் சிக்கலை (Paradox) உருவாக்கத் தெரிந்த ஒரு புத்திசாலி. சிறிது நேரம் யோசித்துவிட்டு ஒரு பதிலைச் சொல்கிறான், தண்டனையிலிருந்தும் தப்பி உயிர்பிழைக்கிறான். அப்படி அவன் சொன்ன பதில் என்னவாக இருக்கும்?

Puthuyugam
www.puthuyugam.com