சிங்கம், எறும்புகளை வேட்டையாடுவதில்லை. யானை, ஒரு பூனையை எதிர்த்து தனது முழு பலத்தையும் பயன்படுத்துவதில்லை. இயற்கையிலேயே, உயிரினங்கள் பெரும்பாலும் தங்களின் அளவுக்கும், தேவைக்கும் ஏற்ற மோதல்களையே தேர்ந்தெடுக்கின்றன. ஆனால், மனிதர்களின் உலகம் அப்படியல்ல. இங்கே போர்கள் நடக்கின்றன. அதிகாரம், நிலம், பணம், மதம், இனவெறி, பாதுகாப்பு, பழிவாங்குதல்… காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஒரு போர் ஆரம்பித்துவிட்டால், அதில் நியாயமான மோதல்கள், விதிகள் என்று ஏதாவது இருக்கிறதா?
ஒரு வீரன், தனக்குச் சமபலமுள்ள எதிரியுடன் மட்டும்தான் மோத வேண்டுமா? தன்னை விட பலமான எதிரியைத் தாக்குவது புத்திசாலித்தனமில்லையே! அல்லது, பலவீனமான எதிரியைத் தேர்ந்தெடுத்து தாக்குவது அநீதியாகிவிடுமல்லவா?
நாம் திரைப்படங்களால் வளர்ந்தவர்கள். அதனால், ஹீரோவுக்கு ஏற்ற வில்லன் என்ற ஓர் ஒழுக்கத்தை நம் மனம் எதிர்பார்க்கிறது. ரஜினிக்கு எதிராக ஒரு சாதாரண பிக்பாக்கெட் வந்தால் படம் சுவாரஸ்யமாக இருக்காது. விஜயகாந்துக்கு எதிராக ஒரு பதினைந்து வயது சிறுவன் வந்தால் அது பொருந்தாது. நம் கற்பனையில் கூட, மோதலுக்குள் ஒரு சமநிலையைத் தேடுகிறோம். ஆனால், நிஜ உலகின் அரசியலும், நிஜ போர்களும் அப்படியிருப்பதில்லை.
அலெக்சாண்டர் உலகை வெல்லக் கிளம்பியபோது, தனக்குச் சமமான ராஜ்யங்களோடு மட்டுமே போரிடவில்லை. நெப்போலியன், செங்கிஸ்கான், ஹிட்லர் போன்ற ஆட்சியாளர்களும், அமெரிக்கா, ரஷ்யா போன்ற எந்த வல்லரசுகளும் போரில் அப்படி கண்ணியமாக நடந்துகொண்டதில்லை. போரில், வெற்றி என்பது பெரும்பாலும் அறத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. கணக்கால் தீர்மானிக்கப்படுகிறது. யாரிடம் அதிக வளம் இருக்கிறது? யார் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும்? யாரிடம் கூட்டணி இருக்கிறது? யார் மனதளவில் தயாராக இருக்கிறார்கள்? என்பதுதான் முக்கியம். அதனால்தான், தம்மிலும் வலுவானர்களைத் தந்திரமாகத் தாக்கிட கெரில்லா போர் (Guerrilla Warfare) போன்ற யுக்திகள் உருவாயின. நேருக்கு நேர் மோதினால் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தவர்கள், மறைமுகத் தாக்குதல்களைத் தேர்ந்தெடுத்தார்கள். வியட்நாம் போர் முதல் ஆப்கானிஸ்தான் வரை, வரலாறு இதற்கான உதாரணங்களால் நிரம்பியிருக்கிறது.
அப்படியென்றால், போரில் நியாயம் என்பதே இல்லையா? இருக்கிறது. தமிழிலக்கியங்களில், புறநானூற்றுப் பக்கங்களில் ஒளிந்திருக்கிறது.
’ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடையீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு’
–என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடல், ’பசுக்களும், துறவியரும், பெண்களும், குழந்தைகளும், பிணியுற்றோரும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றிடுங்கள், எம் மாமன்னன் தாக்குதலைத் தொடுக்கவிருக்கிறான்’ என்று போருக்கு முந்தைய அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகச் சொல்கிறது. சூரியன் உதித்த பின்பே போர் தொடங்கும், மறையும் போது தாக்குதல் நிறுத்தப்படும். முறையான அறிவிப்புகள் இருக்கும். கவசங்களின்றி ஓய்வெடுக்கும் நேரங்களிலோ, உறங்கும் நேரங்களிலோ தாக்குதல் தொடுக்கப்படாது. போர் நிறுத்தப்பட்ட மாலை நேரங்களில் காயம்பட்டோருக்கு வேண்டிய மருத்துவ உதவிகளும், இறந்தோருக்கு உரிய இறுதிச் சடங்குகளும் நடத்தப்படும்.
இதெல்லாம் சங்ககால இலக்கியங்கள் சொல்வன. பிற்காலத்தில் நடந்ததாக நாம் படிப்பவை அத்தனை நற்செய்திகளாக இல்லை. தோற்ற மன்னர்களை உயிரோடு தீயிலிடுவது, உயிரோடு தோலை உரித்து கோட்டை வாசலில் கட்டித் தொங்கவிடுவது, மரணத்தை விடவும் கொடுமையான தண்டனையான கழுவேற்றம் செய்வது, பெண்களைப் பாலுறவுக்காகச் சிறை பிடிப்பது, மன்னர் குடும்பத்து இளைஞர்களையும், சிறுவர்களையும் பகை முடித்தல் எனும் பெயரில் வெட்டி முதலைகளுக்கு உணவாக வீசுவது போன்ற காரியங்களைச் செவ்வனே செய்திருக்கிறார்கள். அதையெல்லாம் எந்தக் கணக்கில் எழுதுவதென்று தெரியவில்லை.
இப்போதைய சூழலுக்கு வந்தால், ஒரு சிறிய நாடு, பெரிய வல்லரசுக்கு எதிராகப் போரிடும்போது, அது முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால், அவர்களிடம் வேறு வழியே இல்லாமல் இருக்கலாம். அதேபோல, ஒரு பெரிய நாடு, சிறிய நாட்டைத் தாக்கும்போது, அது அநீதியாகத் தோன்றலாம். ஆனால், அதற்குப் பின்னால் பாதுகாப்பு, வளம், அல்லது புவிசார் அரசியல் கணக்குகள் இருக்கலாம். போரில், ஒவ்வொருவரும் தங்களது தரப்பை நியாயப்படுத்திக்கொண்டேதான் இருப்பார்கள்.
அதனால்தான், போரின் முதல் பலி மனிதர்கள் அல்ல, உண்மை என்று சொல்லப்படுகிறது.
ஆனாலும், நியாயம் ஏதாவது ஒரு பக்கம் இருந்தேதான் தீரும். அது அந்தப் போர் எதற்காக என்பதில் ஒளிந்திருக்கும். ஆதிக்கத்துக்காகவா? அல்லது அதற்கெதிராகவா? அழிக்கவா? அல்லது அந்த அழிவைத் தடுக்கவா? உங்கள் பக்கம் நியாயமிருந்தால், எதிரே நிற்பவர்களைப் பற்றியத் தயக்கமின்றி களத்தில் இறங்கித்தான் ஆகவேண்டும். நினைவில் கொள்ள வேண்டியது போர்க்களம் என்பது சினிமா அல்ல. அங்கே சமமான எதிரி என்று யாரும் நமக்காகக் காத்திருக்க மாட்டார்கள். சதுரங்கத்தில், ஒரு சிப்பாயை வெட்ட ராணி போகக்கூடாது என்ற விதியில்லை.
போர்க்களத்தில், பலவீனமானவன் அறத்தைப் பற்றி பேசுகிறான்; வலுவானவன் வெற்றியைப் பறிக்கிறான். வரலாறு, இரண்டிற்கும் நடுவே நின்று ரத்தத்தைப் பதிவு செய்கிறது.