நாம் எதற்காக வாழ்கிறோம்? #Ikigai

நாம் எதற்காக வாழ்கிறோம் என்பதைக் கண்டறியும் ஒரு வரைபடமே இந்த இகிகாய். அதாவது ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் அவசியமான தனித்துவமான இயக்கம்! நாம் அதை இலக்கு என்று எளிமைப் படுத்திக்கொள்ளலாம்!
IKIGAI
IKIGAI
Published on

வண்டிக்குப் பெட்ரோல் போடவும், வீட்டுக்கு வாடகைக் கொடுக்கவுமே நாம் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், சொந்த வீடு, கார் என செட்டிலாகி, பெரிய தொகை ஒன்றை மாதச் சம்பளமாகவும் வாங்கிக்கொண்டிருக்கும் நண்பன் ஒருவன் வந்து, ‘என்னடா வேலை இது? விட்டுத் தொலைக்கலாம் என்று பார்க்கிறேன்!’ என்று சலித்துக்கொண்டால் எப்படி இருக்கும் நமக்கு? ஏற்கனவே சற்று பொறாமையில் இருக்கும் நமக்கு இது இன்னும் ஆத்திரமூட்டும். ஆனால், நமது பிரச்சினையை விடுங்கள். ஒருவேளை அவனது சலிப்பிலும், வெறுப்பிலும் கொஞ்சம் உண்மை இருந்துவிட்டால்?

இதென்ன கேள்வி? அவனொரு சாஃப்ட்வேர் எஞ்சினியர். என்ன சலிப்பானால் என்ன, அதில் எவ்வளவு பெரிய வருமானம் கிடைக்கிறது? ஒன்றுமில்லாமல் தொடங்கிய அவனது வாழ்க்கையையே இப்படி மாற்றிக் கட்டியமைத்தது அந்த வேலைதானே? தொடர்ந்து செய்ய வேண்டியதுதான் என்போம். ஆனால், எது எப்படியாகியிருந்தாலும் அவனுக்கு அந்த வேலை பிடிக்கவில்லை. அதுதானே உண்மை.

அதில் இன்னொரு விசயமும் இருக்கிறது. அவன் அந்த வேலையில் மிகத்திறமைசாலி. கொடுக்கப்பட்ட வேலைகளை யாரையும் விட மிகச்சிறப்பாக செய்யக்கூடியவன். அதனால்தான், அவனால் அப்படியொரு வளர்ச்சியை அடைய முடிந்தது. அதெப்படி ஒரு குறிப்பிட்ட வேலையில் திறமையாக இருப்பவர்களை ஒரு நிறுவனம் இழக்க முடியும்? சொந்த விருப்பு, வெறுப்புகளையெல்லாம் தாண்டி அவன் செயல்பட்டுத்தான் ஆக வேண்டும். இப்படிக் கட்டாயப்படுத்தினாலும், அது தவறுதானே?

பெரிய வருமானம் கிடைக்கும் வேலை (Value)- குறிப்பிட்ட வேலையில் நல்ல திறமை (Strength)– அதுவே மனதுக்கும் பிடித்தமான வேலை (Passion)- அது சமூகத்துக்கும் பயனளிக்கக் கூடியது (Mission).

இந்த நான்கு காரணிகளும் ஒன்றிணையும் புள்ளிதான் ஜப்பானிய தத்துவம் குறிப்பிடும் இகிகாய். ஜப்பானிய மொழியில் 'இகி' (Iki) என்றால் 'வாழ்க்கை', 'காய்' (Gai) என்றால் 'மதிப்பு' என்று பொருள். சுருக்கமாகச் சொன்னால், நாம் எதற்காக வாழ்கிறோம் என்பதைக் கண்டறியும் ஒரு வரைபடமே இந்த இகிகாய். அதாவது ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் அவசியமான தனித்துவமான இயக்கம்! நாம் அதை இலக்கு என்று எளிமைப் படுத்திக்கொள்ளலாம்! இதில் ஏதாவது ஒன்று குறைந்தாலும், அது முழுமையற்றதாகிவிடுகிறது. 

நல்ல வருமானம், வேலையில் திறமை இருந்தாலும், மனதுக்குப் பிடிக்காத வேலை என்பதால் மேலே பார்த்த நம் நண்பன் சலிப்பான மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறான். ஒருவேளை நல்ல வருமானம் இருந்து, அவன் மனதுக்கும் பிடித்திருந்து அவனுக்கு அந்த வேலையில் போதுமான திறமையில்லாது போயிருந்தால் அவனால் அதில் வளர்ச்சி காணமுடியாமலேயே போயிருக்கும். எனக்கு மிகப்பிடித்தது கார் ஓட்டுவதுதான், அதில் நான் மிகவும் திறமைசாலி என்று சொல்லிவிட்டு அதே நண்பன் தனது சாஃப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு ஒரு டாக்சி டிரைவராகப் போயிருந்தால் என்னவாகியிருக்கும்?

எல்லாம் சரிதான், அதென்ன நான்காவது காரணி? என் வேலை எனக்குப் பயனளித்தால் போதாதா? எதற்காக சமூகத்துப் பயனளிக்கும் செயலாகவும் இருக்க வேண்டும்? ஆமாம், பின்னே! எனக்கு நன்றாக சாராயம் காய்ச்ச வரும், கள்ள நோட்டு அச்சடிக்கத் தெரியும், அது எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று நீங்கள் இறங்கிவிட்டால் என்ன செய்வது? அதற்காகத்தான் அது!

அப்படியானால் நமக்கான அந்த இலக்கை (Ikigai) கண்டறிவது எப்படி?

உண்மையில், உலகின் பெரும்பாலான மக்கள் தங்களின் முதல் வேலையை, பிடித்தத் துறையிலிருந்து, சரியான இலக்கை நோக்கி ஆரம்பிப்பதில்லை. கிடைத்த வேலையைச் செய்வதிலிருந்துதான் ஆரம்பிக்கிறார்கள். குடும்பச் சூழ்நிலை, பணத்தட்டுப்பாடு, சமூக அழுத்தம் என்பது போன்ற பல விஷயங்கள்தான் பலருடைய வாழ்க்கைப் பாதையை முடிவு செய்கின்றன. அதில் தவறு ஒன்றுமில்லை. எல்லோராலும் நாம் விரும்பியதைச் செய்வோம் என்று கிளம்பிவிட முடியாது. ஒரு மனிதனின் அடிப்படைத் தேவை, குடும்பத்துக்கு அவசியமான நிலையான வருமானம் மற்றும் பாதுகாப்பு. அதனால், என்னுடைய இகிகாயைக் கண்டறிந்துவிட்டுதான் வாழ்க்கையைத் தொடங்குவேன் என்று எல்லோராலும் சொல்லமுடியாது. மேலும் உங்கள் இலக்கைக் கண்டறிவது என்பது ஒரே நாளில் நடக்கும் அதிசயமும் அல்ல. அது ஒரு தொடர்ச்சியான தேடல். உங்கள் ஆர்வங்களையும் (Interests), திறன்களையும் (Skills) அடிக்கடி சுய மதிப்பீடு (Self-assessment) செய்து கொண்டேயிருங்கள். ஒருநாள் கண்டடைவீர்கள்! 

இந்தத் தத்துவத்தை வாழ்க்கையின் ஒரே தீர்வாகவும் பார்க்க வேண்டியதில்லை. இது, சமநிலையைத் தேடும் இன்னொரு முயற்சி மட்டுமே. ஆனால், தொடர்ந்து பயணியுங்கள். ஏதோ ஒரு வேலையைச் செய்யும் ஆர்வத்துடன், எந்தச் சலிப்பும், எரிச்சலுமின்றி, காலையில் சீக்கிரமே தூக்கத்திலிருந்து எழுந்துவிடும் ஒரு நாளில், உங்கள் 'இகிகாய்' இலக்கை நீங்கள் நெருங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

Puthuyugam
www.puthuyugam.com