டிஜிட்டல் அரசியல்: புதிய ஆயுதம்

நமது மனதுக்குள் ஊடுருவும் ஒரு கான்மேனைப்போல நாம் யாரை வெறுக்க வேண்டும், யாரை விரும்ப வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஒரு பெரும் 'டிஜிட்டல் போர்க்'களத்துக்குள் தமிழ்நாட்டையும் தள்ளிவிட்டிருக்கிறது.
Digital Politics
Digital Politics ChatGPT AI
Published on

ஒரு காலத்தில் அரசியல் என்பது தெருமுனைப் பிரச்சாரங்களிலும், பொதுக்கூட்டங்களிலும், சுவரொட்டிகளிலும் மட்டுமே இருந்தது. பின்னர் சினிமா வழியாகவும், டிவியின் வழியாகவும் நம் வீட்டுக்குள் வந்தது. ஆனால் இன்று, அரசியல் நம் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன் வழியாக நமது படுக்கையறைக்கே வந்துவிட்டது. நாம் எதைச் சாப்பிட வேண்டும், என்ன உடுத்த வேண்டும், யாரோடு பழக வேண்டும், எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பது வரை முடிவெடுக்கக் கற்றுத்தருகிறது. நமது மனதுக்குள் ஊடுருவும் ஒரு கான்மேனைப்போல நாம் யாரை வெறுக்க வேண்டும், யாரை விரும்ப வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஒரு பெரும் 'டிஜிட்டல் போர்க்'களத்துக்குள் தமிழ்நாட்டையும் தள்ளிவிட்டிருக்கிறது.

நவீன அரசியலில் வாக்குச்சாவடிகளை விட, வாட்சப் குழுக்களே (WhatsApp Groups) அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஒவ்வொரு கட்சியின் ஐடி விங் (IT Wing) குழுக்களும் ஆயிரக்கணக்கான வாட்சப் குழுக்களை உருவாக்கி, அதில் தகவல்களைப் பரப்புகின்றன. இங்கு உண்மை என்பது இரண்டாம் பட்சம்தான்; எது 'வைரல்' ஆகிறதோ அதுவே உண்மையாகக் கட்டமைக்கப்படுகிறது. இந்தக்குழுக்கள், இந்தக் கட்சி வந்தால் நம் மதம்/ மொழி/ இனம் அழிந்துவிடும்- என்ற அச்சத்தை விதைக்கின்றன. இல்லாத சாதனைகளை இருப்பது போலவும், இருக்கிற சாதனைகளை இல்லாதது போலவும் திரிக்கின்றன. தகவல்களின் குவியலில் எது உண்மை, எது பொய் என்று பிரித்தறியப் படாதபாடுபடும் அன்னப்பறவைகளாக மாறி நிற்கிறோம் நாம்.

2010-க்குப் பிந்தைய காலகட்டம், சமூக ஊடகங்களின் அசுர வளர்ச்சியால் 'தகவல் போர்முறை' (Information Warfare) என்ற புதிய அரசியல் ஆயுதத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. வெறும் பொழுதுபோக்குக் கருவிகளாகப் பார்க்கப்பட்ட சோஷியல் மீடியாக்கள், நாடுகளின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் தேர்தல் சூழ்ச்சிக் கூடாரங்களாக மாறிப்போயின. குறிப்பாக, 2018- பிரேசில் அதிபர் தேர்தலின் போது வாட்ஸ்அப் மூலம் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட 'டிஜிட்டல் வதந்திகள்', அந்த நாட்டின் ஜனநாயக அடித்தளத்தையே அசைத்துப் பார்த்தன. இதன் உச்சகட்டமாக, பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய 'கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா' (Cambridge Analytica) என்ற நிறுவனத்தின் உலகளாவிய தேர்தல் முறைகேடுகள் அம்பலமாகின. இந்த நிறுவனம் நைஜீரியாவில் 2014-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது, ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்காகப் பணிபுரிந்தது. அப்போது எதிரணிக்கு எதிராக, இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வைத் தூண்டும் வன்முறையான வீடியோக்களைத் தயாரித்து சமூக ஊடகங்களில் பரப்பியது. இதன் மூலம் அந்நாட்டில் பெரும் இனப் பதற்றத்தை உருவாக்கி, வாக்காளர்களின் மனநிலையை மாற்ற இந்தத் தொழில்நுட்ப நிறுவனம் முயன்றது. போலவே, அமெரிக்கா, இந்தியா, பிலிப்பைன்ஸ், ஐரோப்பிய நாடுகளும் இத்தகைய உளவியல் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கின்றன.

இதற்காக இன்று யூடியூபர்களும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்பவர்களும் முழு வீச்சில் பயன்படுத்தப்படுகின்றனர். நடுநிலையானவர்கள் போலத் தோற்றமளிக்கும் பல இன்ஃப்ளூயன்ஸர்ஸ் (Influencers), உண்மையில் நடுநிலையாளர்களாக இல்லை. மறைமுகமாக அரசியல் கட்சிகளிடம் நாம் நம்பவியலாத வகையிலான நிதியைப் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட சித்தாந்தங்களைப் பரப்புகிறார்கள். இவர்கள் இளைஞர்களுடன் நெருக்கமானத் தொடர்பில் இருப்பதால், இவர்களது பேச்சை இளைஞர்கள் அப்படியே நம்பும் சூழல் நிலவுகிறது. இதே இன்ஃப்ளூயன்ஸர்கள், தேர்தல் இல்லாத காலங்களில், சினிமாக்கள் குறித்த விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு, விமர்சனம் எனும் பெயரில் ஒரு மோசமான படத்தைப் புகழ்வது, நல்ல படத்தை இகழ்வது போன்றவற்றைச் செய்கிறார்கள். தரமற்றப் பொருட்களை, குறிப்பாக ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதங்களை விற்க பெருமளவில் பயன்படுத்தப்படுகிறார்கள். இவர்களே இப்போது அரசியல் வியாபாரத்திலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

Youngers in Politics
Youngers in PoliticsGemini AI

நாம் பேஸ்புக்கில், டிவிட்டரில் எதைப் பார்க்கிறோம், எதற்கு 'லைக்' போடுகிறோம் என்பதை வைத்து நம் அரசியல் விருப்பங்களை நிறுவனங்கள் துல்லியமாகக் கணிக்கின்றன. நமது சமூக வலைத்தளத் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. நமது மனதைப் படிக்கிறார்கள், அப்போதுதானே நமக்குப் பிடித்த மொழியில் அவர்களின் கருத்தைச் செலுத்தமுடியும்! நுண்ணியமாக குறிவைக்கப்படுகிறோம். ஒரு குறிப்பிட்ட ஊரில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சேர்ந்த இளைஞருக்கு, அவரது மனநிலைக்கு ஏற்றவாறு விளம்பரங்களும், செய்திகளும் காட்டப்படுகின்றன. அவர் எதை நம்புகிறாரோ, அதையே மீண்டும் மீண்டும் அவரது திரையில் காட்டுவதன் மூலம் (Filter Bubble), அவரது கருத்தை அவ்வளவு எளிதில் அவர் சுயவிமர்சனம் செய்துகொள்ள முடியாத அளவுக்குத் தீவிரப்படுத்தப்படுகிறார்.

இது மட்டுமல்லாது, செய்திகளை வசதிக்கேற்ப திரிப்பதும் (Disinformation) மீடியாக்களுக்கு கைவந்த கலை. இன்றைய சோஷியல் மீடியாக்கள் மட்டுமின்றி சற்றே பழமையாகிப்போன அச்சு, டிவி ஊடகங்கள் இதில் மிகத் தேர்ந்தவை. சென்னையில் இரண்டு இளைஞர்கள் மோதிக்கொண்டார்கள் என்பது செய்தி. ஆனால், ஒரு சமூகப் பதற்றத்தை உருவாக்கும் எண்ணம் கொண்ட மீடியா அதை எப்படிச் செய்தியாக்கும் தெரியுமா? சென்னையில், மதுரையைச் சேர்ந்த ஒரு இளைஞரும், கோவையைச் சேர்ந்த ஒரு இளைஞரும் மோதிக்கொண்டார்கள் என்று கொட்டை எழுத்தில் பிரசுரிப்பார்கள். இரண்டு ஆட்டோக்காரர்கள் மோதிக்கொண்டார்கள் என்பது செய்தி. ஆனால், அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கிருஷ்ணனும், அப்துல்லாவும் மோதிக்கொண்டார்கள் என்று செய்தி எழுதப்படும். அதற்குள்ளே இருக்கும் நோக்கம் புரிகிறதல்லவா?

ஆனால், இதையெல்லாம் நாம் எப்படி எதிர்கொள்வது?

டிஜிட்டல் அரசியல் என்பது ஒரு கத்தி போன்றது. அதை ஆக்கப்பூர்வமான மாற்றத்திற்கும் பயன்படுத்தலாம், அழிவிற்கும் பயன்படுத்தலாம். நாம் நம் மனதை முதலில் விசாலமாக்கிட வேண்டும். நமது எண்ணங்களுக்கு எதிரான கருத்துகளையும் படிக்கப் பழக வேண்டும். அப்போதுதான் 'டிஜிட்டல் மாயையில்' இருந்து தப்பித்துத் தகவல்களை நாமே பகுப்பாய்வு செய்துகொள்ள முடியும். வாட்சப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்று இலவசமாகத் தரப்படும் எந்தச் செயலியுமே, நமது தரவுகளை விற்று நம்மையே விலைபொருளாக்கிவிடுகின்றன என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்.

ஆட்சி மாற்றம் என்பது ஓர் அரசின் செயல்பாடுகளை, மக்கள் சீர்தூக்கிப் பார்த்து, அதனடிப்படையில் அமைந்திட வேண்டுமே தவிர, ஸ்மார்ட்போன் திரையில் ஓடும் ரீல்ஸ்களின் பாதிப்புகளால் அமைந்துவிடக் கூடாது. தொழில்நுட்பம் அரசியலை பண்படுத்துவதற்குப் பதில், தனிமனித மூளைச்சலவைக்கு வழிவகுத்தால், அது ஜனநாயகத்திற்கே பெரும் சவாலாகத்தான் முடியும். ஜனநாயகம் எப்போதும் துப்பாக்கிகளால் மட்டுமே வீழ்த்தப்படும் என்ற நிலை இப்போது மாறிவிட்டது!

Puthuyugam
www.puthuyugam.com