கவிதைகள் என்ன செய்யும்? #Why Poetry Matters

கவிதைகள் ஓர் உணர்வை நேரடியாகச் சொல்லாமல், நம்மை உணர வைக்க முயல்கின்றன. ஒரு சிறு குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டுகின்றன. ஓர் ஒப்புமையை, உவமையைத் தருகின்றன. இடைவெளிகளை விடுகின்றன.
Reading
Reading
Published on

வீட்டுக்கு வந்திருந்த ஜென்-ஸி இளம்பெண் ஒருத்தி, எனது மேஜையிலிருந்த ஒரு கவிதைப் புத்தகத்தைப் பார்த்துவிட்டு, “நாவலைக்கூட விடுங்க அங்கிள், அதில் இருக்கும் ஒரு கதைக்காகப் படிக்கிறீங்கனு புரியுது. ஆனால், இந்தக் கவிதையைப் படிச்சா புரியவும் மாட்டிங்குது, இதெல்லாம் எப்படிப் படிக்கிறீங்க, எதுக்காகப் படிக்கிறீங்க?” என்று கேட்டுவிட்டாள். 

உலகம் 25 வருடங்களுக்கு முன்பிருந்ததைப்போல இப்போதில்லை. வாழ்க்கையின் வேகம் பன்மடங்காகியிருக்கிறது. எல்லாவற்றையும் நம்மைப்போல நின்று நிதானமாக அறிமுகம் செய்துகொண்டு, அதில் பிடித்தவற்றைச் சுயமாக் கற்றுக்கொள்ள இப்போது இவர்களால் முடியாது. புதிய தலைமுறைகளின் கேள்விகள் அர்த்தமற்றதாகத் தோன்றினாலும், எல்லா அடிப்படைக் கேள்விகளுக்கும் சலிக்காமல் நாம் பதில் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அது பயிருக்கிறைத்த நீராக இருந்தாலும் சரி, அல்லது விழலுக்கிறைத்த நீராகப் போனாலும் சரி. 

90களில் விகடனில், குமுதம், குங்குமம் வார இதழ்களில் வெளியான அறிவுமதி, பழநிபாரதி, ரமேஷ் வைத்யா, நா. முத்துக்குமார், ஸ்ரீபதி பத்மநாபா, யுகபாரதி போன்றோர் எழுதிய கவிதைகளைப் படித்து வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான். ஆனால், இன்றைய குழந்தைகளுக்கு கவிதை என்ற பெயரில் என்ன கிடைக்கிறது? குக்கு வித் கோமாளி, சுனிதா சொல்லும் ‘ஐ லவ் ஆலு பராட்டா, உன் மனசுக்குள்ள நான் வரட்டா?’ -கவிதைகள் என்ற பெயரில் இவற்றைக் கேட்டு வளரும் தலைமுறைக்கு கவிதை என்றால் என்னவென்று எப்படித் தெரியும்? 

கவிதை என்றால் என்ன?

நாம் தினசரி பேசும் மொழி, ஒரு தகவலைச் சொல்லுவதற்கானது. கதைகளும், கட்டுரைகளும் கூட அதைத்தான் நேரடியாகச் செய்கின்றன. “என்ன?” ”ஏன்?” ”எதற்கு?” “எப்படி?” “எங்கே?” “எப்போது?” — எல்லாமே இப்படியான கேள்விகளுக்கான பதில்கள்தான். ஆனால் வாழ்க்கை, இந்தக் கேள்விகளால் நிறைந்தது மட்டுமே இல்லை. சில உணர்வுகளுக்கு இந்தக்கேள்வி எதுவுமே பொருந்தாது. ஒரு தகப்பன், முதன் முறையாக தன் குழந்தையைக் கையில் ஏந்தும் தருணத்தை; ஒரு காதலன், காதலியை சந்திக்கும் தருணத்தை; ஒரு பெரும் போராட்டத்துக்குப் பிறகான வெற்றி தரும் உணர்வை; ஆண்டுக்கணக்கான பயிற்சிக்குப் பின்னும், வெற்றியை நூலிழையில் தவறவிடும் ஒரு விளையாட்டு வீரனின் வலியை என பல தருணங்களை எழுதிட கட்டுரைகளால் முடியாது. ஏனென்றால், இவையெல்லாம் தகவல்கள் அல்ல, உணர்வுகள். அவற்றின் கனம், மௌனம், கலப்பு, சிதைவு என இவற்றையெல்லாம் நேரடியான வார்த்தைகளில் சொல்லிவிடவே முடியாது. இந்த இடத்தில்தான் கவிதைகள் தொடங்குகின்றன.

கவிதைகள் ஓர் உணர்வை நேரடியாகச் சொல்லாமல், நம்மை உணர வைக்க முயல்கின்றன. ஒரு சிறு குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டுகின்றன. ஓர் ஒப்புமையை, உவமையைத் தருகின்றன. இடைவெளிகளை விடுகின்றன. அந்த இடைவெளியில் நாமே நம்முடைய அனுபவத்தை நிரப்பிக் கொள்கிறோம். கவிதைகளின் சிறப்பு, அது சொல்லும் விஷயத்தில் இல்லாமல், அது சொல்லாமல் விடும் இடங்களிலும் இருக்கின்றன.

Palanibharathi, Yugabharathi, Naa muthukumar, Sripathi padmanabha, Ramesh vaidya.jpeg
Palanibharathi, Yugabharathi, Naa muthukumar, Sripathi padmanabha, Ramesh vaidya.jpeg

கவிதை ஏன் அவசியம்?

ஏன், நாம் கவிதை வாசிக்க வேண்டும்? நாம் வாழும் உலகம் மிக வேகமானது. தகவல்கள், கருத்துகள், பதில்கள் — எல்லாமே நொடிகளில் கிடைத்து விடுகின்றன. இந்த வேகத்தில் ஒரு விஷயம் மெதுவாகச் சிதைந்து கொண்டிருக்கிறது. அது, உணர்வுகளைத் உணரும் திறன். நாம் ஒரு தோல்வியின் விளைவாக எந்த மனநிலையில் இருக்கிறோம்; நமது உணர்வு சோகம்தானா? வெறுமையா? கோபமா? பயமா? என்பதை உணரவே நுண்ணிய புலனறிவு வேண்டும். ஒரு கவிதை மனம் இந்தப் புலன்களை இன்னும் கூர்மையாக்கும். ஓர் இழப்பின் வலியில் இருப்பவனை, ஒரு தோழனைப் போல துணையாக உடன்நின்று காக்கின்றன கவிதைகள். 

புதிய சொற்கள், அவற்றின் அர்த்தங்கள் மற்றும் கவித்துவமான மொழிநடை போன்றவற்றால் நம் மொழியாளுமை அதிகரிக்கிறது. மொழியினழகு, சந்தம் மற்றும் ஒலியமைப்பு ஆகியவற்றை ரசிக்கிறோம்.

கவிதைகள் சமூகத்தில் நடக்கும் அநீதிகள், ஏற்றத்தாழ்வுகளை  எதிர்த்துப் போராடியிருக்கின்றன. ஒரு நாட்டின் விடுதலைக்காக இயங்கியிருக்கின்றன. அந்தந்த காலகட்டத்தின் அரசியல், கலாச்சாரம் மற்றும் மக்களின் வாழ்வியலை ஒரு வரலாற்று ஆவணமாகப் பதிவு செய்கின்றன.

அறிதல் – அறிவித்தல்

சந்தோஷத்தை முகம் முழுக்கப்
பரத்திக்கொண்டு
கண்களில் ஒளிமின்ன -
முகமன் கூறாதீர் எனக்கு
தூரத்தே நான் வரும்போதே
கைகள் உயர்த்தி
உற்சாகமாய் ஆர்ப்பரிக்காதீர் -
வரவேற்கும்விதமாக
தோளோடு அணைத்து
நா தழுதழுக்க
'எத்தனை காலமாச்சு பாத்து' -
என்று ஏங்காதீர்
இவையெதுவும் இல்லாமலும்
ஒரு மனசு அறியாதா
தன்னைப்போல் இன்னொன்றை.

- ரமேஷ் வைத்யா


இந்தக் கவிஞர் சொல்லும் சூழ்நிலையை நாமனைவருமே சந்தித்திருப்போம். இரண்டு நண்பர்கள் அல்லது இரண்டு சகோதரர்கள் ஒரு வாரம் கழித்து, ஒரு மாதம் கழித்து, ஒரு வருடம் கழித்து சந்தித்துக் கொள்ளும் சூழலைக் கற்பனை செய்து பாருங்கள். கட்டியணைத்துக் கொள்வார்கள், சிரித்து உற்சாகப்பட்டுக் கொள்வார்கள், கைகுலுக்கிக் கொள்வார்கள், ‘எப்படிடா இருக்கே’ என பேசிக்கொள்வார்கள்… இன்னும் என்னென்னவோ செய்ய அவர்களின் உணர்வுகள் பரபரக்கும். ஆனால், யாரோ ஒருவன், ரயில்வே ஸ்டேஷனுக்கு தன்னைச் சந்திக்க, பல்லாண்டுகள் கழித்து வரும் நண்பனிடம் இப்படி எந்த அவஸ்தையுமில்லாமல், ‘இந்தப் பையைத் தூக்கிக்கடா’ என்று சொல்லியிருக்கலாம். அந்த நண்பனும் ’பையில என்ன இருக்கு, எருமைக் கனம் கனக்குது’ என்று பேசவும் தொடங்கியிருக்கலாம். இவர்கள் இருவருக்குமிடையேயும் உள்ளார்ந்த அதே அன்பு இருக்கலாம்தான். ஆனால், ’அது உள்ளுக்குள்ளேயே இருக்கட்டுமே, அதனாலென்ன’ என்கிறார் இந்தக் கவிஞர். 

இதே உணர்வை இன்னொரு இடத்துக்கும் நாம் பொருத்திப் பார்க்கலாம். ஒரு கணவன், மனைவியை பணிநிமித்தமாக ஒரு மாதம் பிரிந்திருந்துவிட்டு வீடு திரும்புகிறான். வீட்டில் அப்பா, அம்மா, குழந்தைகள், உறவினர்கள் நிறைந்திருந்தால் அவனது கவனம் முழுதும் அவர்களிடம்தான் இருக்கும். மனைவியிடம் பேசியிருக்கக்கூட மாட்டான். அவளும், சகஜமாக பையை எடுத்து வைப்பாள், காபி கொண்டு வந்து கொடுப்பாள். இருவரும் இயல்பாக இருப்பதைப் போலத்தான் தெரியும். ஆனால், எப்போதாவது அவர்கள் பரிமாற்றிக் கொள்ளும் அந்தப் பார்வையிலேயே, ‘ஒன்றை ஒன்று அறிந்துகொள்ளும் அந்த இரு மனசுகளும்’ பேச வேண்டியதையெல்லாம் பேசி முடித்திருக்கலாம் அல்லவா? 

கவிதைகள் இப்படியான நுண்ணுணர்வுகளைத்தான் பேசுகின்றன. இந்த ஏஐ யுகத்தில், நம்மை ஏஐக்களிடமிருந்து வேறுபடுத்தப்போவதும் இந்தக் கவிதைகள்தான். ஆக, கவிதை கற்போம்!

Puthuyugam
www.puthuyugam.com