'மேக்னடிக் ஹில்’ எனும் இயற்கையின் விளையாட்டு!

நம் கண்கள் பார்ப்பதற்கும், அதை நம் மூளை புரிந்துகொள்வதற்கும் இடையே சில சிறப்புச் சூழ்நிலைகளில் ஒரு முரண்பாடு ஏற்பட்டுவிடுகிறது. அப்போது ஒன்றை நாம் வேறொன்றாக உணர்கிறோம்.
Magnetic Hill, Leh-Kargil
Magnetic Hill, Leh-Kargil
Published on

அவ்வப்போது, காஷ்மீர் லடாக் பகுதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் விடியோக்கள் வைரலாவதைக் கவனித்திருக்கிறோம். அங்குள்ள ’மேக்னடிக் ஹில்’ பகுதியில், நியூட்ரலில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் மலையேற்றப் பாதையில் ஏறத் தொடங்குகின்றன. அது அவர்களையும், நம்மையும் வியப்பிலாழ்த்துகிறது. அப்படி அங்கு என்னதான் நடக்கிறது?

நம் கண்கள் பார்ப்பதற்கும், அதை நம் மூளை புரிந்துகொள்வதற்கும் இடையே சில சிறப்புச் சூழ்நிலைகளில் ஒரு முரண்பாடு ஏற்பட்டுவிடுகிறது. அப்போது ஒன்றை நாம் வேறொன்றாக உணர்கிறோம். இதுதான் தோற்றப்பிழை (ஆப்டிகல் இல்யூஷன்- Optical Illusion) எனப்படுகிறது.  

அப்படியான ஒரு ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டைத்தான் லடாக்கும் நம்மோடு விளையாடுகிறது. நாம் காண்பவை எல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபிக்கிறது இந்த 'மேக்னடிக் ஹில்' (Magnetic Hill). இந்தியாவின் லடாக், லே-கார்கில் (Leh-Kargil) நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பகுதிதான் இந்த மேக்னடிக் ஹில் மலைப்பாதை! இங்கே மலையேற்றப் பாதையில், கார் தானாகவே மேலே செல்வதைப் பார்க்கும்போது, அங்கு ஏதோ ஒரு காந்த சக்தி (Magnetic force) காரை மேலே இழுக்கிறது என்றே அனைவரும் உணர்கிறார்கள். அதனால்தான் அப்பகுதிக்கு 'மேக்னடிக் ஹில்' என்ற பெயரும் அமைந்தது. ஆனால், உண்மையில் அங்கே எவ்வித காந்த ஈர்ப்பு சக்தியும் கிடையாது, அறிவியலுக்கு மாறான எந்த நிகழ்வும் நடந்திடவில்லை. மாறாக நாம் உணர்வது ஓர் ஆப்டிகல் இல்யூஷனை! இது அறிவியல் ரீதியாக ஒரு 'கிராவிட்டி ஹில்' (Gravity Hill) என்று அழைக்கப்படுகிறது. 

அந்த மலைப்பகுதியைச் சுற்றியுள்ள நிலப்பரப்பின் அமைப்பும், அடிவானமும் (Horizon) நமது கண்களை ஏமாற்றி, ஒரு சரிவான பாதையை, மேல்நோக்கிய பாதையாகக் உணரவைக்கின்றன. கார் மேலே செல்வது போலத் தெரிந்தாலும், உண்மையில் அது மெதுவாகக் கீழ்நோக்கித்தான் செல்கிறது. 

Magnetic Hill, Ladakh
Magnetic Hill, Ladakh

ஆனால், ஏன் நம்மால் அதை உணர முடியவில்லை?

நமது கண்கள் மற்றும் மூளை இணைந்து, நாம் பார்க்கும் ஒரு காட்சியைப் புரிந்துகொள்ள, ஏதாவது ஓர் ’ஒப்பீட்டுச் சட்டகம்' (Frame of Reference) தேவைப்படுகிறது. சுற்றிலும் மரங்களோ அல்லது கட்டிடங்களோ இல்லாமல், வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில், அப்படியான சரியான ஒப்பீடு கிடைக்காது. குறிப்பாக இந்தப் பகுதியில், அப்படியான ஒப்பீட்டு முற்றிலுமாக இயற்கையாகவே சிதைக்கப்படுகிறது. இதனால் அடிவானத்தை நம்மால் கணிக்க முடியாமல் போய், மூளைக்குக் கிடைக்கும் தவறான சமிக்ஞைகளால் இப்படியான ஒரு மாயக் கோணம் (Illusionary angle) உருவாகி, நாம் இல்யூஷனை உணர்கிறோம்.

நாம் பார்ப்பதை சரியாகப் புரிந்துகொள்ள ஓர் ஒப்பீடு தேவைப்படுவதைப் போலவே நம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் ஒப்பீடு அவசியப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், நம்மிடம் ஒரு பைக் இருந்தது, இப்போது ஒரு காரை வைத்திருக்கிறோம். அதனால், நாம் பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கிறோம்; பத்தாண்டுகளுக்கு முன்னால் நம்மிடம் கடன் எதுவும் இல்லை, இப்போது பத்து லட்சம் கடன் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது, ஆனால் அதற்கொப்ப நாம் ஏதும் சொத்துகளும் சேர்த்திருக்கவில்லை எனில் நாம் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருக்கிறோம் என்பதெல்லாம் ஒப்பீட்டால் கிடைக்கும் அறிவு மற்றும் புரிதல். 

போலவே, நாம் அனுபவிப்பவற்றைப் புரிந்துகொள்ளவும் ஒப்பீடு அவசியம்! 50 ஆண்டுகளுக்கு முன்னால், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, போக்குவரத்து, உட்கட்டமைப்பு போன்ற வசதிகள் நமது மாநிலத்தில் எப்படி இருந்தன? நம் நாட்டின் பிற மாநிலங்களில் எப்படி இருந்தன? 25 ஆண்டுகளுக்கு முன்னால் அவை எப்படி மாறியன? இப்போது எப்படி இருக்கின்றன? எதிலெல்லாம் சிறந்து விளங்குகிறோம்? எதிலெல்லாம் வீழ்ச்சியடைந்திருக்கிறோம்? என்று ஒப்பிட்டுப் பார்த்து சரியான புரிதலை அடையாவிட்டால், தோற்றப்பிழையில்தான் சிக்கிக் கொள்வோம்!

Puthuyugam
www.puthuyugam.com