மனிதன்,  மனிதனுக்காக விட்டுச் சென்ற புதிர்கள்!

செயற்கைக்கோள்கள், இணையம், செயற்கை நுண்ணறிவு — இவையெல்லாம் நமது குறிப்பிடத்தக்கச் சாதனைகள். ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் உருவாக்கிய சில அமைப்புகள், இன்றும் நமக்கு முழுமையாகப் புரிந்த பாடில்லை.
Nazca Lines, Stonehenge, Göbekli Tepe
Nazca Lines, Stonehenge, Göbekli TepeGemini AI Collage
Published on

தஞ்சைப் பெரியகோவில், ஒரு வழிபாட்டுத்தலம் என்று நமக்குத் தெரியும். அது எப்படி கட்டப்பட்டிருக்கலாம் என்பதற்கும் சில கருதுகோள்கள் (Theories) இருக்கின்றன. போலவே எகிப்தின் பிரமிடுகள் கட்டப்பட்டதன் நோக்கமும் தெளிவு. அவை எப்படி உருவாக்கப்பட்டன என்பதற்கும் சில கருதுகோள்கள் இருக்கின்றன. ஆனால், நம் முன்னோர்கள் எதற்காக உருவாக்கினார்கள், எப்படி உருவாக்கினார்கள் என்ற அடிப்படைக் கேள்விகளுக்கே இன்னும் விடைகாண முடியாத சில விநோத அமைப்புகளும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கின்றன!

நாம் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் முன்னெப்போதுமில்லாத அளவு, பெரும் உச்சத்தை இன்று எட்டியிருக்கிறோம். செயற்கைக்கோள்கள், இணையம், செயற்கை நுண்ணறிவு — இவையெல்லாம் நமது குறிப்பிடத்தக்கச் சாதனைகள். ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் உருவாக்கிய சில அமைப்புகள், இன்றும் நமக்கு முழுமையாகப் புரிந்த பாடில்லை. அவற்றுள் மூன்றை மட்டும் இங்கே பார்க்கலாம்!

Nazca Lines,  Peru
Nazca Lines, Peru

1. நாஸ்கா கோடுகள் (Nazca Lines)

பெரு நாட்டின் பாலைவனத்தில், தரையில் நின்று பார்த்தால் சுமாரான கோடுகள் போலத் தோன்றும் அமைப்பு, வானில் இருந்து பார்த்தால் மாபெரும் அளவுகளில் வரையப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் உருவங்கள் (பாம்பு, சிலந்தி, குரங்கு) என்று தெளிவாகத் தெரிகின்றன. சில கோடுகள் கிலோமீட்டர் கணக்கான நீளம் கொண்டவை. வரைவது என்றால், பாலைவனத்தின் மேற்பரப்பில் இருந்த கருமையான கற்களும், மணலும் அகற்றப்பட்டு, அதன் கீழே இருக்கும் வெளிர் நிற மணல் வெளிப்படும்படி, உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை உருவாக்கப்பட்ட காலம் சுமாராக 2000 ஆண்டுகளுக்கு முன்பாக! விமானம் இல்லாத அந்தக் காலத்தில், இத்தனைத் துல்லியமான வடிவங்களை எப்படி உருவாக்கினர்? எதற்காக உருவாக்கினர்? பதிலில்லை!

Stonehenge, England
Stonehenge, England

2. இங்கிலாந்தின் ஸ்டோன்ஹெஞ்ச் (Stonehenge)


இங்கிலாந்தின் வில்ட்ஷயருக்கு அருகே அமைந்துள்ள சமவெளிப்பகுதியில் இந்த ஸ்டோன்ஹெஞ்ச் எனப்படும் மாபெரும் கற்சிலைகள் வட்டமாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்லும் 25லிருந்து 45 டன் வரையான எடையுள்ளவை. இந்த பிரம்மாண்டமான தூண்கள் போன்ற கற்கள் வெட்டியெடுக்கப்பட்டு இங்கே எப்படிக் கொண்டு வரப்பட்டன, எதற்காகக் குழிதோண்டி, இப்படி வட்டவடிவில் நிறுத்தப்பட்டு, அவற்றுக்கு மேல் குறுக்குக்கற்கள் நிறுவப்பட்டன போன்ற எந்தக் கேள்விகளுக்கும் இன்னும் பதில்கள் கிடைக்கவில்லை! 

Gobeklitepe, Turky
Gobeklitepe, Turky

3. கோபெக்லி டெபே (Göbekli Tepe)


துருக்கியில் 1990களில் நடந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பழமையான கோவில் போன்ற அமைப்பு இந்த டெபே. வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ள இதில் பெரும் எடையுள்ள கற்களும், அவற்றில் சில சிற்பங்களும் கூட காணப்படுகின்றன. இதன் காலம்தான் நம்மை வியக்கச் செய்கிறது. இது கிமு 10,000 காலத்தைச் சேர்ந்தது. அப்போது மனிதன் வேட்டையாடும் சமூகமாக இருந்து இன்னும் விவசாய சமூகமாகவே மாறியிருக்கவில்லை. பிறகெப்படி, கற்களைச் செதுக்கும் நுட்பங்கள், திட்டமிடல், தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு எல்லாம் தேவைப்படக்கூடிய இப்படி ஒரு கட்டமைப்பு உருவாகியிருக்க முடியும்? என்ன காரணம்? வியப்பான விடையில்லாக் கேள்விகள்! 

இவற்றுக்கான விடையறியும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. ஏன் இந்த ஆய்வுகள் முக்கியமானவை?

இதில், மூன்று செய்திகள் இருக்கின்றன. நமது முன்னோர்கள் எளிமையானவர்கள் அல்ல, நாம் நினைப்பதை விட அதிக அறிவும், திட்டமிடும் திறனும் அவர்களிடம் இருந்திருக்கலாம். மனித வரலாற்றை நாம் இன்னும் முழுமையாக அறிந்திடவில்லை, நாம் அறிந்தது அதன் ஒரு பகுதி மட்டுமே! அறிவியல் எப்போதும், எல்லாவற்றுக்குமான பதில்களைத் தேடி நம்மைச் செலுத்திக்கொண்டே இருக்கிறது! நம் முன்னோர்கள் நமக்கானப் பெரிய புதிர்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்தப் புதிர்களைத் தீர்ப்பதுதான் அவர்களைப் புரிந்துகொள்வதற்கும், நம்மையே நாம் புரிந்துகொள்வதற்குமான வழியாக அமையும்.

Puthuyugam
www.puthuyugam.com