’மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பது, நாம் அனைவருமே அறிந்த மிகப்பிரபலமான ஒரு சொல்லாடல். ஆனால், ஸ்விட்சர்லாந்தின் ரோலக்ஸ் நிறுவனம், 1970களில் கைக்கடிகாரத்துறையில் நடந்த ஒரு பெரும் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல், பழமையிலேயே தங்கிவிட்டது; அதனாலேயே அந்தத் துறையில் உலகம் வியக்கும் வண்ணம் இன்றளவும் கோலோச்சி வருகிறது எனும் பொருள்படும்படி ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அது நிஜம்தானா? மாற்றம் ஒன்றே மாறாதது - எனும் சொல்லாடலை வென்று காண்பித்ததா ரோலக்ஸ்?
புகைப்படத் துறையில், 1900 தொடங்கி, 2000 வரை கோலோச்சிய ஒரு நிறுவனம் கோடக்! அவர்கள் டிஜிடல் தொழில்நுட்பத்துக்கு மாறாத ஒரே காரணத்தால் வீழ்ச்சியடைந்தனர். இத்தனைக்கும், 1975ல் கோடக் நிறுவனத்தில் பணியாற்றிய பொறியாளரான ஸ்டீவ் சாசனே உலகின் முதல் டிஜிட்டல் கேமராவையும் உருவாக்கியவராவார். ஆனால், கோடக் டிஜிடலின் எதிர்காலத்தைக் கணிக்கத் தவறி, மாறாக அதை ஒரு அச்சுறுத்தலாகப் பார்த்ததே அவர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. போலவே, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உலக செல்போன் சந்தையை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்த நிறுவனமான நோக்கியா, ஸ்மார்ட்போனின் வருகையையும், மென்பொருள் (Software) மாற்றத்தையும் ஏற்கத் தவறியதால், மீண்டெழ முடியாத வீழ்ச்சிக்குப் போனது.
2004ல் உலகம் முழுவதும் 9,000 டிவிடி விற்பனைக் கடைகளைக் கொண்டிருந்த நிறுவனம், பிளாக்பஸ்டர்! 20 ஆண்டுகளாக அத்துறையில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்த அந்நிறுவனத்துக்கு, 2000ம் ஆண்டு வாக்கில், அத்துறையில் சிறு நிறுவனமாக இருந்த நெட்பிளிக்ஸை வாங்கும் வாய்ப்பு அமைந்தது. ஆனால், அதை மறுத்ததோடு அப்போது உருவாகிக்கொண்டிருந்த இணைய வளர்ச்சியையும், அதன் வாய்ப்புகளையும் கவனிக்கத் தவறியது பிளாக்பஸ்டர். விளைவு, மிகச் சீக்கிரமே நெட்பிளிக்ஸ் உலகையே ஆளும் நிலைமை ஏற்பட, பிளாக்பஸ்டரோ முற்றிலுமாக அழிந்துபோனது.
இந்த வகையில், இப்படி இன்னும் ஏராளமான கதைகளிருக்க, ரோலக்ஸின் கதையில் நடந்ததுதான் என்ன?
கடிகாரத்தின் வரலாறு சுவாரசியமானது! நேரத்தைக் கணிக்கும், காட்டும் கருவிகளை உருவாக்கித்தான் மனிதன் தனது அறிவியல் அறிவையே மேம்படுத்திக்கொண்டான். 13ம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் தொடங்குகிறது எந்திரக் கடிகாரங்களின் காலம்! முதலில் பிரம்மாண்டமான வடிவத்தில் சர்ச்சுகளில் கடிகாரங்கள் நிறுவப்படுகின்றன. அதன்பின்னர் வெவ்வேறு வடிவங்களை அடைந்த கடிகாரம், ஜெர்மனில் 15ம் நூற்றாண்டில் பாக்கெட் கடிகார வடிவத்தைப் பெறுகிறது. அதன்பின்னர் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆபிரகாம்-லூயிஸ் பிரிகெட் (Abraham-Louis Breguet) என்பவர், 1810-ல், கரோலின் எனும் இத்தாலிய ராணிக்காக (Queen of Naples) பிரத்யேகமாக ஒரு கைக்கடிகாரத்தை வடிவமைத்தார். அதுவே முதல் கைக்கடிகார வடிவமைப்பு என்று கருதப்படுகிறது. ஆயினும், உடனடியாக அது பிரபலமடையவில்லை. அது அதிகார வர்க்கப் பெண்களுக்கான அணிகலனாகவே பார்க்கப்பட்டது. இந்த சமயத்தில்தான் பிரான்ஸ் மற்றும் ஸ்விஸ் நாடுகள் கடிகாரத் தயாரிப்பு நுட்பத்திலும், கைக்கடிகார வடிவமைப்பிலும் மெல்ல மெல்ல நிபுணத்துவம் பெறத் தொடங்கின. இந்தச் சூழல், 1914-1918 காலகட்டத்தில் நடந்த முதல் உலகப் போர், கடிகாரத்தின் வடிவத்தைத் தேவையை முன்னிட்டு மாற்றியமைத்தது. போர்க்களத்தில் இருந்த வீரர்களுக்கு, தாக்குதல்களைத் திட்டமிடுவதற்கும், பீரங்கிகளை இயக்குவதற்கும் துல்லியமான நேரம் தேவைப்பட்டது. ஆனால், பாக்கெட் வாட்ச் அதற்கு உதவவில்லை. அப்போது பிறந்ததே ஆண்கள் மணிக்கட்டில் கட்டிக்கொள்ளத் தகுந்த கைக்கடிகாரங்கள்! அதன் பின்னர் உலகெங்கும், ஆண்கள் கைக்கடிகாரத்தை அணிந்துகொள்ளத் தொடங்கினர். ஸ்விஸ், கைக்கடிகாரத் தயாரிப்பில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. ஸ்விஸ்ஸின் சில நிறுவனங்கள் அதன் தனித்தன்மைக்காக உலகப்புகழ் பெற்றவையாகும்.
படேக் பிலிப் (Patek Philippe) – இந்நிறுவனத்தின் கடிகாரங்கள், வெறும் கடிகாரங்களாக அல்ல, மிகவும் சிக்கலான இயந்திர வடிவமைப்புகளைக் (Complicated Movements) கொண்ட கலைப்படைப்புகளாகப் பார்க்கப்பட்டன. இவர்களது கடிகாரங்கள் எப்போதும் செல்வந்தர்கள் மற்றும் அரச குடும்பங்களின் விருப்பத் தேர்வாக இருந்தன.
பிரைட்லிங் (Breitling) - 1930-களில் விமானப் போக்குவரத்துத் துறை வளர்ந்தபோது, விமானிகளுக்குத் தேவையான துல்லியமான 'குரோனோகிராஃப்' (Chronograph) கடிகாரங்களை உருவாக்குவதில் பிரைட்லிங் முன்னோடியாக இருந்தது. விமானிகள் இந்தத் தயாரிப்புகளை மிக விரும்பிப் பயன்படுத்தினர்.
ஒமேகா (Omega) –விண்வெளி மற்றும் விளையாட்டுத் துறைகளில் ஒமேகாவுக்கெனத் தனியிடம் உண்டு. 1932-ல் ஒலிம்பிக் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ நேரக் கணக்கீட்டாளராக (Official Timekeeper) ஒமேகா நிறுவனம் செயல்பட்து. இவர்களது கடிகாரங்களின் துல்லியம் (Precision) அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றதாகும்.
இவற்றைப் போலவே ரோலக்ஸ் (Rolex) நிறுவனத்துக்கும் பல தனித்துவங்கள் உண்டு. 1905-ல் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப் என்பவரால் தொடங்கப்பட்ட ரோலக்ஸ் நிறுவனம், அந்தக் காலகட்டத்தில் செய்த சாதனைகள் கடிகாரச் சந்தையையே மாற்றியமைத்தன. 1926-ல் உலகின் முதல் நீர்புகா (Waterproof) கடிகாரமான 'ஆய்ஸ்டர்' (Oyster) மாடலை அறிமுகப்படுத்தியது.
இப்படியான சூழலில்தான் 1970-களின் தொடக்கத்தில் சுவிஸ் கைக்கடிகாரத் துறை, அதன் வரலாற்றிலேயே மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்தது. ஜப்பானிய நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய ‘குவார்ட்ஸ்’ (Quartz) தொழில்நுட்பம், மிகக் குறைந்த விலையில், பேட்டரியில் இயங்கும், துல்லியமான நேரத்தைக் காட்டும் கடிகாரங்களை உலகிற்கு வழங்கியது. இதனால், பல நூற்றாண்டுகளாகக் கடிகாரத் தொழிலில் கோலோச்சிக் கொண்டிருந்த சுவிஸ் நிறுவனங்கள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தன.
இதனால், சந்தையைக் கைவசம் வைத்துக்கொண்டிருந்த ஒமேகா (Omega) உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி முறையை மாற்றிக்கொண்டன. இயந்திரக் கடிகாரங்களுக்குப் பதிலாகப் பிளாஸ்டிக் பாகங்கள் மற்றும் குவார்ட்ஸ் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து, விலையைக் குறைத்து விற்பனை செய்யத் தொடங்கின. ஆனால், ரோலக்ஸ் நிறுவனம் மட்டும் ஒரு மாறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்தது. அந்தப் பாதைதான் இன்று அவர்களை உலகலாவிய அளவில் ஒரு 'எலைட்' (Elite) அடையாளமாக மாற்றியுள்ளது. ரோலக்ஸ், புதுமையை, தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளவில்லை.
மாறாக, அவர்கள் தங்கள் கடிகாரங்களை வெறும் நேரத்தைக் காட்டும் கருவியாகப் பார்க்காமல், ஒரு சிறந்த பொறியியல் கலைப்படைப்பாகவே (Engineering Masterpiece) உருவாக்கினார்கள். விலையைக் குறைத்து மக்களைச் சென்றடைவதை விட, ரோலக்ஸ் தனது பிராண்டை ஒரு ‘மதிப்புமிக்க சொத்தாக’ (Asset/Investment) மாற்ற முனைந்து அதில் வெற்றியும் கண்டது. ஒரு ரோலக்ஸ் கடிகாரத்தை அணிவது என்பது, ஒருவரது தனிப்பட்ட வெற்றி மற்றும் அந்தஸ்தின் வெளிப்பாடாக கருதும் நிலை உருவானது.
விளம்பரங்களில் கூட, கடிகாரத்தின் விலையைப் பற்றிப் பேசாமல், அதை அணிந்திருப்பவர்களின் ஆளுமை மற்றும் சாதனைகளைப் பற்றியே ரோலக்ஸ் பேசியது. சந்தையில் அதிக தேவை இருக்கும்போது, உற்பத்தியை அதிகரித்து லாபம் பார்ப்பதுதான் பெரும்பாலான நிறுவனங்களின் வழக்கம். ஆனால், ரோலக்ஸ் உற்பத்தியைக் கட்டுப்படுத்தியது. அவர்களது ’ஒவ்வொரு கடிகாரமும், ஒரு தனித்துவமான கைவினைப் பொருள்’ என்ற பிம்பத்தை உருவாக்கியது. காத்திருப்புப் பட்டியல் (Waiting List) என்ற முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம், ரோலக்ஸை வாங்குவது என்பது ஒரு வணிக நடவடிக்கை அல்ல, அது ஒரு 'கிடைப்பதற்கரிய பொக்கிஷம்' என்ற உணர்வை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தியது. இது, இரண்டாம் நிலை சந்தையில் (Second-hand market) கூட ரோலக்ஸ் கடிகாரங்களுக்கான மதிப்பை அதிகரித்தது. ரோலக்ஸ் தனது ‘ஆய்ஸ்டர்’ (Oyster) மற்றும் ‘சப்மரைனர்’ (Submariner) போன்ற கிளாசிக் மாடல்களைத் தொடர்ந்து மேம்படுத்தியதே தவிர, அவற்றின் அடிப்படை அடையாளத்தை மாற்றவில்லை. விளைவாக இன்றளவிலும் ரோலக்ஸ் கைக்கடிகாரத்துறையின் உச்சத்தில் தான் இருக்கிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது (Change is the only constant)
கிரேக்க தத்துவஞானி ஹெராக்ளிடஸ் (Heraclitus)
அப்படியானால், மாற்றம் ஒன்றே மாறாதது எனும் சொல்லாடலை முறியடித்ததா ரோலக்ஸ்? இல்லை!
ரோலக்ஸ், கைக்கடிகாரத் துறையில் நடந்த தொழில்நுட்பப் புரட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களை மாற்றிக்கொள்ளவில்லை. அது நிச்சயம், வணிக ரீதியாகத் தவறான முடிவுதான். ஆனால், மிக நுட்பமாகப் பார்த்தால், அவர்கள் கைக்கடிகாரம் எனும் தங்கள் தயாரிப்புப் பொருளையே மாற்றிவிட்டார்கள், அவர்களுடைய வணிகத்தையே மாற்றிவிட்டார்கள் என்பதுதான் உண்மை. குவார்ட்ஸ் நுட்பத்தின் வரவுக்குப் பின்னால், ரோலக்ஸ் நிறுவனம் கைக்கடிகாரங்களைத் தயாரிக்கவில்லை, கைக்கடிகாரங்களை விற்கவில்லை! மாறாக, அவர்கள் தங்கள் தயாரிப்புகளை தனித்துவமான கலைப்படைப்புகளாக (Handicraft) உருவாக்கினார்கள், அதை ஒரு கௌரவ அடையாளச் சின்னமாக (Status symbol) மாற்றினார்கள், அதன் மீது, ஒரு வைரத்தைப் போன்ற அரிதான தன்மையை (Rarity) புகுத்தினார்கள். வென்றார்கள்!