டிஜிட்டல் யுகத்தில் ஆசிரியர் - மாணவர் உறவு

தொழில்நுட்பம், அறிவை (Information) ஜனநாயகப்படுத்தியுள்ளது, அனைவருக்குமானதாக ஆக்கியிருக்கிறது. அப்படியானால், ஆசிரியர்- மாணவர் உறவின் எதிர்காலம் என்னவாகும்
Teacher and Student
Teacher and StudentGemini AI Image
Published on

கல்லூரியில் படிக்கும் மகள், சமீபத்திய விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்தபோது, திட்டமிடப்படாத கூடுதல் விடுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘வகுப்புகளைத் தவற விட்டுவிடப்போகிறாய் சுபா!’ என்று நான் எச்சரித்த போது, அவள் எளிமையாகப் பதிலளித்தாள். ‘என் வகுப்பாசிரியரை விடவும் சிறப்பாகப் பாடங்களைப் புரிய வைக்கக்கூடிய யூட்யூப் சேனல்கள் இருக்கின்றன அப்பா, கவலை வேண்டாம்!'

முன்பெல்லாம் புத்தகங்களில் இருக்கும் பாடங்கள் ஏதும் புரியவில்லை என்றால், ஆசிரியரை மட்டுமே நாம் நம்பியிருந்தோம். அதுவும் அவர் நல்ல மனநிலையில் இருக்கிறாரா என்று பார்த்துதான் சந்தேககங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை அவருக்கே அந்தப் பாடத்தில் சற்றுப் புரிதல் குறைபாடு இருந்துவிட்டால், அவ்வளவுதான். அதோடு அனைத்து ஆசிரியர்களும், அணுக எளிமையானவர்களாகவும், அன்பானவர்களாகவும் இருந்துவிடுவதுமில்லை. இன்று ஒரு பாடத்தைப் புரிந்துகொள்ள நமக்கு ஆசிரியரின் உதவியே தேவையில்லை எனும் நிலைமை உருவாகியிருக்கிறது. தொழில்நுட்பம், அறிவை (Information) ஜனநாயகப்படுத்தியுள்ளது, அனைவருக்குமானதாக ஆக்கியிருக்கிறது. 

அப்படியானால், ஆசிரியர்- மாணவர் உறவின் எதிர்காலம் என்னவாகும்? 

1. தகவல் vs ஞானம் (Information vs Wisdom)

இணையத்தில் ஒரு பாடத்தைப் பற்றிய காணொளிகள் அனேகமிருக்கலாம், ஒரு கேள்வியைக் கேட்டால், விநாடிகளுக்குள் கூகுள் விடையைத் தந்துவிடலாம். ஆனால், அந்த கேள்வியும், விடையும் எந்தப் பின்புலத்தில் உருவானவை எனும் பாதையையும், அந்த அறிவை எங்கே, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற அறத்தையும் (Ethics) ஓர் ஆசிரியர்தான் கற்றுத்தர முடியும். தகவல்கள், ஞானமாகிவிட முடியாது.

2. உணர்வுப்பூர்வமான பிணைப்பு (Emotional Connection)

ஏஐயின் அல்காரிதங்களால் ஒரு மாணவனின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியாது. ஒரு மாணவன் சோர்வாக இருக்கிறானா, ஏதாவது இழப்பின் வலியிலிருக்கிறானா, அல்லது உற்சாகமாக இருக்கிறானா என்பதையெல்லாம் அவற்றால் அறியமுடியாது. ’பரவாயில்லை, நாளை முயற்சி செய்’ என்று ஆறுதல் தருவதையோ, ‘உன்னால் முடியும்’ என்று தட்டிக்கொடுப்பதையோ, ’ஆஹா, பிரமாதம்!’ என்று உணர்வுப்பூர்வமாக பாராட்டுவதையோ எந்த அல்காரிதமும் செய்ய முடியாது. மாணவனின் கண்களைப் பார்த்தே அவனுக்குப் பாடம் புரிகிறதா இல்லையா என்பதை உணர்ந்து, அதற்கேற்பத் தன் கற்பித்தல் முறையை மாற்றிக்கொள்ளுவதும் ஓர் ஆசிரியராலேயே முடியும்.

3. சமூகத் திறன்கள் மற்றும் ஒழுக்கம் (Social Skills & Discipline)

கல்வி என்பது தகவலறிவோ, மனப்பாட அறிவோ, தர்க்க அறிவோ அல்லது மதிப்பெண்களோ மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் சிறப்பான அங்கமாக நாம் எப்படி வாழ்வது என்பதைக் கற்றுக்கொள்வதும்தான். ஆன்லைன் வகுப்புகளில் ஒரு மாணவன் தனிமையில் கற்கிறான். ஆனால், ஒரு வகுப்பறையில் சக மாணவர்களுடன் பழகும்போதும், ஆசிரியரின் ஆளுமையைக் கவனிக்கும்போதும்தான் ஏற்றத்தாழ்வுகள், அங்கீகாரம், மோதல், வலி, நட்பு, ஆறுதல், விட்டுக்கொடுத்தல், தலைமைப் பண்புகள் மற்றும் குழுப்பணி (Teamwork) போன்ற சமூகத் திறன்களைக் கற்கமுடிகிறது.

Student
Student Gemini AI Image

4. வழிகாட்டுதல் மற்றும் திருத்துதல் (Mentorship & Course Correction)

இணையத்தில் சரியான தகவல்களுக்கு இணையாக, தவறான தகவல்களும் கொட்டிக் கிடக்கின்றன. மேலும் இணையம், ஒரு மாணவனின் கவனத்தை சிதறடித்து, திசை மாற்றிவிடும் அபாயமும் இருக்கிறது. தவறான புரிதல்களிலோ, தவறான பாதையிலோ பயணிக்கும் ஒரு மாணவனைச் சுட்டிக் காட்டித் திருத்த ஒரு 'மென்ட்டார்' (Mentor) அவசியம். குறிப்பாக கலை மற்றும் படைப்புத் துறைகளில், ஓர் ஆசிரியரின் முன்னிலையில் செய்யும் தவறுகளும், அதற்காக அவர் தரும் விமர்சனங்களுமே ஒரு மாணவனை ஒரு சிறந்த கலைஞனாக உருவாக்குகின்றன.

இந்த டிஜிட்டல் மாற்றத்தின் விளைவாக, இன்றைய ஆசிரியர்கள் வெறும் 'தகவல் தருபவர்கள்' (Information Providers) என்ற நிலையிலிருந்து, மாணவர்களை நல்வழிப்படுத்தும் 'வழிகாட்டிகளாக' (Facilitators) பரிணாமம் அடைந்துள்ளனர், அடைய வேண்டும்! பாடங்களைக் கற்றுக்கொள்ள மாணவர்களுக்கு மாற்று வழிகள் இருக்கின்றன, அதனால் நம் பொறுப்பு குறைந்துவிடவில்லை, மாறாக அதிகரித்திருக்கிறது என்ற உண்மையை ஆசிரியர்கள் உணர்ந்திட வேண்டும். இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவை தகவல்களை மிக வேகமாகவும், உடனடியாகவும் வழங்கினாலும், ஒரு மாணவனுக்குத் தேவையான நிதானமான மற்றும் ஆழமான புரிதலை வழங்கும் இடத்துக்கு ஆசிரியர்கள் நகர வேண்டும். 

கற்றல், கற்பித்தல் போன்றன மனிதனுக்கு, ஆயிரக்கணக்கான வருடங்களாக ஜெனிடிகல் அளவில் பழக்கப்பட்டுப்போன ஓர் உணர்வுப்பூர்வமான செயல்கள். தொழில்நுட்பம் என்பது கரும்பலகையைப் போல ஒரு கருவிதான். கரும்பலகை மேம்பட்டு 'ஸ்மார்ட் போர்டாக' மாறலாம், ஆனால், அங்கே மாணவர்களுக்கும், பாடங்களுக்கும் இடையே பாலமாக ஓர் உணர்வுப்பூர்வமான ஆசிரியர் அவசியம் எனும் நிலை மாறப்போவதில்லை.

Puthuyugam
www.puthuyugam.com