நொய்டாவுக்கு வயது 50 ... எப்படிப் பிறந்தது? #Sanjayganthi

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் , 1975 டிசம்பர் மாதத்தில் அப்போதைய உத்தரப் பிரதேச முதலமைச்சர் என்.டி. திவாரியை சஞ்சய் காந்தி தனது வீட்டுக்கு அழைத்தார்.
sanjay ganthi and noida
sanjay ganthi and noida navbharat times
Published on

கடந்த 1976 ம் ஆண்டு ஏப்ரல் 17 ம் தேதி உத்தரப் பிரதேச தொழிற்பகுதி மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் நொய்டா (New Okhla Industrial Development Authority) தொழிற்துறை நகரமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நொய்டா நகரம் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியின் 'பிரைன் சைல்ட்' என்பது பலரும் அறியாதது. அதுவும், நாட்டின் நெருக்கடி காலம் அமலில் இருந்த போதுதான், நொய்டாவை உருவாக்கும் எண்ணம் சஞ்சய் காந்தியிடத்தில் தோன்றியது.

மிதமிஞ்சிய மக்கள் தொகையும், தொழிற்சாலைகளும் டெல்லி நகருக்கு மிழுந்த அழுத்தத்தை கொடுப்பதை சஞ்சய் உணர்ந்திருந்தார். இதனால், டெல்லி அருகே ஒரு தொழிற்சாலை நகரை கட்டமைப்பது தலைநகரின் பாரத்தை குறைக்கும் என்பது அவரின் எண்ணமாக இருந்தது. விளைவாகசே... நொய்டா பிறந்தது- 1970களின் பிற்பகுதியிலும் 1980களின் தொடக்கத்திலும் நொய்டா பெரும்பாலும் ஒரு விவசாயப் பகுதியாக இருந்தது. சிறிய கிராமங்கள் நிறைந்திருந்தன. படிப்படியாக, இங்கு பெரிய பெரிய சாலைகள் அமைக்கப்பட்டன. பெரிய கட்டடங்களும் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, சிறிய சிறிய தொழிற்சாலைகள் நொய்டா நோக்கி வரத் தொடங்கின.

noida city
noida city Wikipedia

நொய்டா குறித்து சஞ்சய் காந்தி கண்ட கனவு பற்றி மாருதி நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நொய்டாவின் முதல் தலைமை செயல் அதிகாரியுமான ஜெகதீஷ் கட்டார் இவ்வாறு கூறுகிறார். '' நெருக்கடி காலத்தில் சஞ்சய் காந்தி ஒரு வில்லனைப் போல பார்க்கப்பட்டார். அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைத் தணிக்கை இருந்தது. ஆனால், ரயில்கள் சரியான நேரத்தில் இயங்கின. இந்த சமயத்தில்தான் நொய்டா என்று அறியப்படும் நகரமும் உருவானது. இந்த நகரத்தில் இருந்துதான் 'மக்களின் கார்' என்று அழைக்கப்பட்ட மாருதியும் வெளி வந்தது.

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் 1975 டிசம்பர் மாதத்தில் அப்போதைய உத்தரப் பிரதேச முதலமைச்சர் என்.டி. திவாரியை சஞ்சய் காந்தி தனது வீட்டுக்கு அழைத்தார். என்டி.திவாரியுடன் நொய்டா நகரத்தை நிர்மாணிப்பது குறித்து பேசினார். அப்போது, என்.டி. திவாரியுடன் நானும் இருந்தேன். சஞ்சய் காந்தியின் கையில் டெல்லி மேப் இருந்தது. மேப்பில் கிழக்கு டெல்லியை தீவிரமாக ஆராய்ந்த அவர், 'அங்கிருந்த குறு மற்றும் சிறு தொழிற்சாலைகள் அப்புறப்படுத்த வேண்டும். 3 நாட்களுக்குள் மாற்று இடம் கண்டுபிடித்துவிட்டு என்னிடம் வாருங்கள் ' என்று கூறி விட்டார். நாங்கள் , நொய்டாவை கண்டுபிடித்தோம். அந்த இடத்தை பார்வையிட்ட , சஞ்சய் காந்தி , 'அடுத்த இரு நாட்களுக்குள் இங்கு தொழிற்பேட்டை அமைக்க கட்டுமானப்பணிகள் தொடங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார். அப்போது , நான் முதல்வர் என்.டி. திவாரியிடத்தில் , 'காலம் குறைவாக உள்ளது. நிலம் இன்னும் கையகப்படுத்தவில்லை. நிலத்தில் கை வைத்தால் பிரச்னை வெடிக்கும்' என்று கிசுகிசுத்தேன். இதை ,கவனித்த சஞ்சய், 'என்னிடத்தில் வேறு ஏதும் பிரச்னைகள் உள்ளனவா? ' என்று கேட்டார். பின்னர், 'இரு நாட்களில் புல்டோசர்கள் வரும். பணிகள் தொடங்கும் ' என்று கூறிவிட்டு கிளம்பினார்.

சஞ்சய் காந்தி சொன்னது போலவே, இடம் கண்டுபிடித்த இரண்டாவது நாளே தொழிற்பேட்டை அமைக்கும் பணி தொடங்கியது தொடர்ந்து, பணிகளையும் அவ்வப்போது சஞ்சய்காந்தி நேரில் ஆய்வு செய்து வந்தார். பிரச்னைகளையும் அவரே எதிர்கொண்டார். பணிகளை வேகமாக மேற்கொள்ள New Okhla Industrial Development Authority என்ற பெயரில் தனி நிறுவனம் உருவானது. அதற்கு ,நான் தலைவரானேன். முடிந்த வரை , கிராமங்களை அழிக்காமல் சுற்றி சுற்றி நகரை கட்டுமானம் செய்தோம். இந்த திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்க உத்தரபிரதேச அரசு சுணக்கம் காட்டிய போதெல்லாம், சஞ்சய் காந்தி ஒரு போன்தான் செய்வார். பணம் வந்துவிடும். பின்னர், எமர்ஜென்சி முடிந்து ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, எனக்கு, சஞ்சய் காந்தி, என்டி.திவாரி ஆகியோருக்கு சட்டவிரோதமான செயல்களை செய்துள்ளதாக கூறி நோட்டீஸ் வந்தது. ஆனாலும், பல தடைகளை தாண்டி நொய்டா இன்று 'கிரேட்டர் நெய்டாவாக' மாறி நிற்கிறது'' என்கிறார்.

noida express highway
noida express highway wikipedia

தற்போது, நொய்டா ஓங்கி வளர்ந்த கட்டடங்களுடன் பிரமாண்ட நகரமாக வளர்ச்சி பெற்றுள்ளது. 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 1997ம் ஆண்டு முதன் முதலில் எல்.ஜி வந்தது... அடுத்து சாம்சங் வந்தது. பின்னர், மைக்ரோசாப்ட், ஹெச்.சி.எல். , அடோப், பார்க்லேஸ் என்று பன்னாட்டு நிறுவனங்களும் வரத் தொடங்கின. ‘ இந்த நகரில் வசிக்கும் மக்களின் ஆண்டு வருமான 8 லட்சத்துக்கும் மேல். இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமான 2.45 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரபிரதேசத்தின் பணக்கார நகரமாக நெய்டா மாறி நிற்கிறது. உத்தரபிரதேசத்தில் மொத்த உற்பத்தியில் 10 சதவிகிதத்தை இந்த நகரம் அளிக்கிறது. உத்தரபிரதேசத்தில் ரியல் எஸ்டேட் பிசினஸ் கொடி கட்டி பறப்பதும் இங்குதான்.

சஞ்சய் காந்தியின் எண்ணத்தில் உருவான, நொய்டா நகரம் ஏப்ரல் 17ம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடியது.

Puthuyugam
www.puthuyugam.com